நீங்களும் உங்கள் மகளிர் தினமும்

====================================
வீதியில் எல்லோரும்
நல்லவனாய் தெரிகிறார்கள்.
*
இன்றென்ன ஆச்சு
இவர்களுக்கு கண்டும் காணாமல்
நகர்ந்து செல்கிறார்களே..
*
வீதியில் காணும் பெண்களிடம்
கைக்குலுக்கி ஏதோ வாழ்த்துக் கூறி
புன்னகைத்துப் போகிறார்களே.
**
இன்றைக்கு நடந்தது
வியாபாரத்தில் மண் விழுமோ ..
அச்சத்தில் உறைந்து கிடக்கும்
அவளிடம் ஆயிரம் கேள்விகள்,,.
**
ஆனாலும்
உழைத்தக் களைப்பைப்போக்க
ஒரு மட்டமான சரக்கை வாங்கி
மட மடவென ஊற்றிக்கொண்டு
பெண்டாட்டிக்குத் துரோகம் செய்யும்
எவனாவது வருவான் என்னும்
எதிபார்ப்புகளோடு காத்திருக்கிறாள்
அந்த விலைமாது..
**
அவளது எதிர்பார்ப்பு
வீண் போகவில்லை
அதோ தூரத்தில்
பூனை மீனை மோப்பம் பிடித்துப்
பதுங்கிப் பதுங்கி யாரோ ஒருவன்
அவளைக் கொண்டாட வருகிறான்.
**
யார் சொன்னது
மார்ச் எட்டில் மகளிர் தினமென்று
உடல் Mortuaryயை எட்டும்வரை
இப்படி எத்தனை பெண்கள்
கொண்டாடப்படுகிறார்கள்..
அடப் போங்கடா நீங்களும்
உங்கள் மகளிர் தினமும்..
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (8-Mar-19, 12:34 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 129

மேலே