தீயே நீயடி - மித்ரா

கார்முகிலா...! கண்ணா...!
கண்கொண்டு பராயோ?
துகில்கொண்டு காப்பாயோ?
பாவியர் சபைதனிலே பாவிகள் நடுவிலே
பாஞ்சாலியல்ல நான்,
படும் பாடு தான் கேளாயோ!
கயவனின் கைகளால் கசையடி,
கள்ளிப்பால் மிடுறு கொடுத்திருக்கலாமே?
கள்வன் கசக்கிய மென்மலர்,
கல்லாய் சமைந்திருக்கலாமே?
கல்லாய் படைத்திட்டால் தான்,
காமுகனுக்குச் சுகமெது? கன்னியருக்கு வலியேது?
ஓயாத கண்ணீர் ஒருநாளா?
நாகப்படமாய் மிரட்டும் ஒளிப்படம்,
ஒருமுறை கொத்திட்டாலோ உயிர் வலி!
இனி நானென்ன செய்வேன்? காப்பாயோ க(அ)ண்ணா.....?!
கண்ணன் :
நீலக் கடலில் நித்திரையில் கிடைக்கும்,
நானோ வெண்ணைத்திருடன்!
என்னையேன் சகி அழைக்கிறாய்?
என்னைப் பெற்றவளே நீ!
பிரபஞ்ச சக்தியே நீ!
ஆக்கமும் நீ!
அழிவும் நீ!
சுடர்வேள்வியில் உதித்தவள் நீ!
சுதந்திரமானவள் நீ!
கதிர், மதியும் கலந்தவள் நீ!
ஆழிப்பேரலை நீ!
தீராத தீ நீ!
ஓயாத நதி நீ!
ஓங்கார ஒலி நீ!
சர்வமும் நீ!
சக்தியின் சக்தியே நீ!
உன்னிலே நான்!
கரம் குவித்துக் கண்ணா வாவேங்காதே,
கரம் தூக்கி வாளேடுத்திடு,
வளையோசையோடு வாளோசையும் அதிரட்டும்...!