மன்னனை வென்ற புத்திசாலிப் புலவன்
அபாரமான, அபூர்வமான நினைவாற்றல் பற்றி சில கதைகள் எழுதினேன். இதோ மேலும் ஒரு சுவையான நிகழ்ச்சி. இது திருவிளையாடல் புராண தருமி கதை போன்றது.
ஒரு மன்னனுக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் மிகவும் சந்தோஷமாக இருக்கையில் “பொருள் புதிது, சுவை புதிது, சோதி மிக்க நவ (புது) கவிதை” எழுதி வரும் புலவனுக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று அறிவித்தார்.. அவருடைய அரசவையில் ஏழு புலவர்கள் இருந்தனர். அவர்களுக்கு அபார நினைவாற்றல் உண்டு. யாரோ ஒரு புலவன் ஒரே கவிதை மட்டும் எழுதி இவ்வளவு காசு பெறுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. சொல்லப் போனால் பொறாமைதான்.
ஏழு பேரும் கூடி திட்டம் வகுத்தனர். அவர்களில் ஒருவர் ஏகாக்ரஹி. அதாவது எதையாவது ஒரு முறை கேட்டால் போதும், அதை அப்படியே சொல்லும் அபூர்வ நினைவாற்றல் உடையவர். மற்றவர் இரண்டு முறை கேட்டால் சொல்லி விடுவார். இப்படியே ஒருவர், மூன்று முறை கேட்டால் இன்னொருவர் 4 முறை கேட்டால் திருப்பிச் சொல்லும் ஆற்றல் இருந்தது.
ஒவ்வொரு புலவரும் புதுக் கவிதை எழுதி வாசித்த போதெல்லாம், ஏகாக்ரஹி எழுந்து இது புதுக் கவிதை அல்லவே, எனக்கு முன்னமே தெரியும், இதோ சொல்கிறேன் என்று சொல்லிவிடுவார்! இப்படியே இரண்டாமவர் எழுந்து, ஆமாம் முதல் புலவர் சொன்னது முற்றிலும் உண்மை எனக்கும் தெரியும் என்று சொல்லி அவரும் ஒப்பித்து விடுவார். அதற்கு மேல் மூன்றாவது புலவருக்கு வேலையே இருக்காது. வந்த புலவர் குழம்பிப் போய் வெளியே போய்விடுவார். அவைப் புலவர்களின் அபூர்வ நினைவாற்றலால் இதைச் சாதிக்க முடிந்தது.
இப்படி ஒவ்வொரு புலவரின் புதுக் கவிதையும் பரிசு பெறாமல் போனதுடன் புலவர்களுக்கு எல்லாம் தலையில் குழப்பம், கிறுக்கே பிடித்துவிடும் போல இருந்தது. அந்த ஊரில் இருந்த ஒரு புத்திசாலிப் புலவனுக்கு ராஜ சபையில் இருந்த புலவர்களின் திருட்டுத்தனம் புரிந்தது. அவர் கள்ளனுக்கும் குள்ளன்! அவைப் புலவர்கள் எட்டு அடி பாய்ந்தால் இவர் 16-அடி பாயும் புலமைப் புலி. ஒரு அருமையான கவியுடன் அவைக்குச் சென்றார்.
மன்னர் வழக்கம் போல ஏழு அவைப் புலவர் புடை சூழ கவிதையை ரசிக்கத் தயாரானார்.’ மன்னாதி மன்னா! உன்னப்பன் என்னப்பனிடம் கடன் வாங்கிய பத்தாயிரம் பொற்காசுகளை இன்னும் தராமல் காலம் கழிப்பது ஏனோ? இது நீதியா? நியாயமா? தருமமா? என்று பொருள் தொனிக்கும் கவிதையைப் பொழிந்தார். மன்னருக்கு ஒரே ஆத்திரம். நிறுத்துங்கள், புலவரே. அப்படி என்னப்பன் கடன் வாங்கி இருந்தால் இந்தப் புலவர்களுக்குத் தெரியாமல் இராது. இவர்கள் என்னப்பன் ராஜாவாக இருந்த காலத்தில் இருந்து அவைப் புலவர்களாக் இருக்கின்றனர் என்றான் மன்னன்.
வழக்கமாக வந்த புலவரின் புதுக் கவிதைகளை மனனம் செய்தும் அவைப் புலவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். திருட்டு முழி முழித்தனர். உண்மை என்று சொல்லி புதுக் கவிதையை மீண்டும் சொல்ல முடியவில்லை! சொன்னால் தலை போய்விடும். புதுக் கவிதை வாசித்த புலவருக்கு ஒரே மகிழ்ச்சி. மன்னா! நான் புதுக் கவிதைக்காக அப்படிச் சொன்னேன். உன் தந்தை உன்னைவிட கொடையாளி. அவன் கை ”கொடுத்தே அறியும், வாங்கி அறியாது” என்றவுடன் மன்னனுக்கு மகிழ்ச்சி. பன்மடங்கு கூடுதலாகப் பரிசு வழங்கி புலவரை அனுப்பிவைத்தான். அவைப் புலவர்களின் கொட்டம் ஒடுங்கியது!
நினைவாற்றல் பாராட்டத்தக்கதே, அதைத் தீய வழியில் பயன்படுதினால் ஆய்ந்தவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பொறுப்பரோ? பொறார்!!