திருவடிகளே சரணம்
#திருவடிகளே சரணம்...
நீதி கொன்றுமே நேர்மை தின்றுமே
இமயம் தொடுவார் காரியவாதிகளோ?
நிதியும் ஆற்றிடா காரியம் பலவும்
சாதனையாவது பாதசரணத்திலோ..?
தாளமிட்டே நித்தம் மானம்கெட்டே
தன் யாக்கை வளைக்கின்றார்
அதி காரபதவிகள் பாதம்தொட்டே
பாவிகள் வாழ்வினில் உயர்கின்றார்.....!
கொள்ளையடிப்பார் பொய்யுமுறைப்பார்
பாதகர் இன்பமும் நுகர்ந்திடுவார்..
செய்யும் பிழைக்கொரு தண்டனையில்லை
சரணம் பெற்றவர் காத்திடுவார்...!
திரைக்கு பின்னால் அடிகள் தொழுவார்
தவறை குழியினில் புதைத்திடுவார்
உத்தமர் போலே ஊரினில் நித்தம்
பேசியே பிழை வளர்ப்பார்..!
கொடிய நோயாம் புற்றினை போன்றே
சரணங்கள் தொற்றித் திரியுதய்யோ
இதனை இப்படி வளர விட்டால்
நல்லோர் வாழ்ந்திட வழியுமுண்டோ..?
நாடு கெடுக்கும் திருவடி சரணம்
நாளும் தேடி யழித்திடுவோம்
கேடு விளைத்திடும் பாவியினத்தை
ஒழித்தே ஓய்வெடுப்போம் ..!
மாலையிட்டவன் மாலையணிந்தவள்
அடைகின்ற சரணத்திலே
வந்திடுமோ வம்பு வழக்குகள்
என்றும் வாழ்க்கையும் இன்பத்திலே..!
நல்ல மனங்களின் நாளும் சரணங்கள்
இறைவன் திருவடிதான்
தொல்லையகன்றிட பணிந்தே தொழுவோம்
அவன் பாதங்கள் சரணம்தான்..!
#சொ.சாந்தி