தமிழன் இந்தியனாக ஏற்றுக்கொள்ளப் படுவானா

தமிழன் இந்தியனாக ஏற்றுக்கொள்ளப் படுவானா?

தமிழன் இன்று இந்திய னாக
ஏற்கப் படவே இல்லை என்னும்
தனிநிலை வந்தது ஏனோ என்று
எண்ணிப் பார்த்தால் எண்ணம் மயங்கும்!
தமிழகத் திருந்தே முதன்முத லாக
வெள்ளையர் விரட்டச் சுதந்திரக் குரலைத்
தகைமை மிக்க பூலித் தேவன்
தன்மா னத்தோ டெழுப்பிய தவறா?

காந்தி சொன்ன போராட் டங்கள்
ஒன்றுவி டாமல் உடனே செய்து
செந்தமிழ் நாட்டில் செக்கு இழுத்துச்
சிதம்பரர் சிறையில் சிதைந்த தவறா?
வந்தே மாதரம் என்றே முழங்கிக்
கொடியைக் காக்கும் போராட் டத்தில்
சிந்திய குருதி போதா தென்றே
குமரன் உயிருங் கொடுத்த தவறா?

நேதா ஜியின் வீரப் படையில்
ஆண்கள் உடனே பெண்களும் சேர
மாதர் பிரிவின் தலைமைப் பொறுப்பை
இலட்சுமி அம்மை ஏற்ற தவறா?
மேதகு பெரியார் இராஜா ஜியுடன்
வாஞ்சி சிவா உழைத்த தவறா?
மேதினி வியக்க மெய்யெலாம் சிலிர்க்க
பாரதி பாடல் எழுதிய தவறா?

சுதந்திரம் பெற்றதும் சோதனை உற்றதும்
மும்முறை நாட்டின் தலைவரைத் தேர்ந்தும்
பதவி மோகம் கொள்ளாக் காம
ராஜர் பண்பின் மேன்மை தவறா?
உதவியாய் நாட்டின் வருமா னத்தில்
உறுபங் களிக்கும் திறமை தவறா?
மதஉணர் வதுவில் மதங்கொள் ளாது
அனைத்தும் அணைக்கும் அன்பு தவறா?

எந்தத் தவறு செய்தோம் என்றே
எம்மைத் தனியே விலக்கி வைத்தீர்?
இந்தக் காலம் நாளை மாறும்
இன்னல் எல்லாம் தன்னால் தீரும்
இந்திய நாட்டின் வரலா றதனில்
இன்றி அமையாப் பங்குடைத் தமிழன்
இந்திய னாக ஏற்கப் படுவான்
என்றே நம்பி ஒன்றாய் இருப்போம்!

எழுதியவர் : துரை.தனபாலன் (2-Apr-19, 1:03 pm)
சேர்த்தது : துரைதனபாலன்
பார்வை : 42

மேலே