தாயே நீ ஒரு சகாப்தம்

என்னை ஈன்ற அன்னைக்கு ஒரு அஞ்சலி...

காப்பாற்றுவேன் என்று நீ நினைக்கையிலே
கால் வயிறு சோற்றுக்கு வழி இல்லையே...
காசு பணம் வந்து சேர்கையிலே
கமலம்மா நீ காணலையே...

பூ தாங்கும் காம்புக்கு தெரியாது
மரம் தாங்கும் வேரின் வலி...
உன் தியாகத்தில் வாழும் பிள்ளைக்கு தெரியாது
உன் நெஞ்சின் வலி...

ஐயிரண்டு திங்கள் கருவறை சிம்மாசனத்தில்
கருத்துடன் காத்திட்ட காவலாளி நீ...
கருப்பையில் நான் வெளி வருமுன்னே
இறப்பை முத்தமிட்டு வந்தவளும் நீயே...

என்னை பார்த்து ரசித்த நொடியில்
பேரழகன் பட்டம் தந்த நடுவர் நீ...
நாதங்கள் நாவில் நிறுத்தி
தூளியில் பிள்ளையும் நலமாய் தூங்க
பாடிடும் இன்னிசை குயிலும் நீயே...

சேய் நோய் தீர்க்க
மருத்துவம் பயிலாத மருத்துவச்சி நீ...
முப்பொழுதும் உணவை முழுதாய்
உருட்டி மிரட்டி ஊட்டும் பாசக்காரியும் நீயே...

பிள்ளையின் வலி பொருக்காது
அழுகையை அடகு வைக்கும் அழுத்தகாரி நீ...
நோய்வாய்ப்பட்டு நொந்து போனாலும்
நோகாமல் உணவு தரும் அக்‌ஷயப்பாத்திரமும் நீயே...

தப்பான வழியில் தப்பித்து போகாமல்
தவறாமல் தாவிப் பிடிப்பாய் நீ...
தள்ளாடியே நடந்தாலும் தானே ஊன்றுகோலாய்
உச்சம் தொடும் பாடம் கற்று தரும் ஆசானும் நீயே...

என் உறக்கம் பார்த்து ரசிக்க பின்னே படுத்து
இரவோடு துயில் கலைந்து சுற்றும் பம்பரம் நீ...
பிள்ளையின் ஆசையை
படம் பிடிக்கும் புகைப்படக்காரியும் நீயே...

இடுப்பே உடைந்தாலும் இன்பமாய் துயில் உறங்க
மடிக் கொடுக்கும் பொன்னூஞ்சல் நீ...
அகிலமே நீதான் என்று
அறிவிக்காத அறிவிப்பு பலகையும் நீயே...

எம்மை சான்றோன் எனகேட்க ஏற்றம் தரும் ஏடு
எண்ணாமல் தந்த வள்ளல் நீ...
தானே வாதாடி பிள்ளையை
நிரபராதி ஆக்கும் வழக்கறிஞர் நீயே...

தான் பெறாத கல்விச் செல்வம்
தன் பிள்ளைச் செல்வம் பெற
தியாகமிடும் மெழுகுவர்த்தி நீ...
பாசப் பட்ட படிப்பில்
குறிப்பு எடுக்க உதவும் நூலகமும் நீயே...

கொட்டும் மழையில் தான் நனைந்து
விரிப்பாய் முந்தானை குடை நீ...
சக்தியே இழந்தாலும் சத்தியமாய்
பிள்ளையின் சகியும் நீயே...

தாயே! நீ ஒரு சகாப்தமே...

என்றும் அன்புடன்,
மதன்

எழுதியவர் : மதனகோபால் (4-Apr-19, 10:50 pm)
சேர்த்தது : மதனகோபால்
பார்வை : 702

மேலே