மனமே
"மனமே "
**************************************
பூட்டிவைத்த இவ்வுடலுள் நன்கமர்ந்த என்மனமே --எனை
ஆட்டுவித்து அலைக்கழிக்கும் அகங்காரம் தனைக்கொண்டு
நட்டுவிட்ட ஆசைகள் நாற்றுவிட இசைந்தாயே
நட்டமோ உந்தனுக்கு சுதந்திரமாய் இவனிருக்க !
ஏட்டில் அடங்காத எண்ணங்கள் பலவிதமாய் --நன்கு
கூட்டியே வைத்திட்ட குப்பையும் கூளமுமாய்
போட்டியே போடுதய்யா ஒன்றோடு ஒன்றாக
எட்டியே உதைத்தாலும் அடங்காதோ உன்னாட்டம் !
விட்டுவிடு மனமே நான் கெட்டழியலாகாது
இட்டுவிட்ட இப்பிறப்பில் எனைப்பிடித்து என்கண்டாய்
கட்டுடல் வீழ்ந்தாலும் நீயழிய வழியில்லையோ
விட்டுவிடு விட்டுவிடு பேய்மனமே என்தன்னை !