வினா வெண்பா

வினா வெண்பா
*********************************************

உமாபதி சிவன் என்று அழைக்கப்பட்ட உமாபதி தேவ நாயனாரால் அருளிச் செய்யப்பட
இந்நூல் மொத்தம் 13 பாடல்களைக் கொண்டது .இவை கேள்வி கேட்கும் வகையில்
அமைந்துள்ளன . உமாபதி சிவன் தன் குரு மறைஞான சம்பந்தரிடத்தில் ஆழ்ந்த சித்தாந்த
கருத்துக்களை வினாக்களாக எழுப்பினர். அவ்வினாக்களே 13 பாடல்கள்

" மெய்கண்ட சாத்திரம் " பற்றி காலஞ்சென்ற பேராசிரியர் முனைவர் அறிவொளி அவர்களது
குறுந்தகடு கிடைத்தது . அதில் இதுபற்றி கூறுகிறார் . அதனை செவிமடுத்த மாத்திரத்தில்
திருப்பனந்தாள் மடத்து நூலகத்தில் " மெய்கண்ட சாத்திரம் " நூல் கிடைக்கப்பெற்று அதனில்
இப்பகுதியை ( வினா வெண்பா ) பார்க்க நேர்ந்தது . வினா மட்டும் வெண்பாவாக உள்ளது
விடை ஏதும் இல்லை . அந்த 13 வினா வெண்பாக்களை குறிப்பெடுத்து வந்தேன் . பின் மீண்டும்
அறிவொளி அவர்களின் குறுந்தகடை இயக்கி அவர் கூறியுள்ளதைப் பொருத்திப் பார்த்தேன் .
அதில் திரு . அறிவொளி கூறியுள்ளது . இப்பாடல்களுக்கு விடை என்று ஒன்று இல்லை .
குருவானவர் சொல்லாமலே சொல்லக்கூடியவர் என்பதால் இவ்வினாக்களை சிந்திப்பவர்க்கு
மீண்டும் மீண்டும் படிக்க விடைகளும் தாமே கிடைக்கும் என்று சொல்லி . அவர் விடைகளையும்
அக்குறுந்தகட்டில் கோடி காட்டியுள்ளார் . அதனை மனதினில் இறுதி அனைத்து எழுத்துத்
தோழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .. அதன் மாட்டு இரு
வினா வெண்பாக்களை பாடலாகவும் பொருளுடனும் தந்திருக்கிறேன் . அறிவொளி அவர்கள்
கூறியுள்ள விடையையும் தந்திருக்கிறேன்.

வினா வெண்பா 1 .
**************************
" நீடும் ஒளியும் நிறைஇருளும் ஓரிடத்துக்
கூடல் அரிது கொடுவினையேன் --பாடிதன்முன்
ஒன்றவார் சோலை உயர்மருதைச் சம்பந்தா
நின்றவாறு எவ்வாறு நீ "

வினாவின் பொருள் விளக்கம் =
*****************************************
விரிந்த ஒளியும் நிறைஇருளும் ஒரே இடத்தில் சேர்ந்திருக்க முடியாது . அழகிய சோலைகள்
நிறைந்த மருத நிலத்தில் உறையும் மறைஞான சம்பந்தரே கொடிய வினையுடைய எனது
உள்ளத்திலும் எனக்கு அருகாமையிலும் வினைகளே இல்லாத நீர் எப்படி நின்றீர் ?
விடை ( குறுந்தகட்டில் அறிவொளி அவர்கள் கூறியுள்ளது )
**********************************************************************************
ஈரமுள்ள மரம் பற்றி எரிகிறதல்லவா ? நோயுடைய நபரை நோயில்லா மருத்துவர் அணுகி
தீர்க்கவில்லையா ? ஆன்மாவின் உள்ளே ஆணவ இருளும் சிவமாகிய ஒளியும் இருக்கவில்லையா ? அதுபோன்று தான் இதுவும் .

வினா வெண்பா 2 .
*****************************
" இருளில் ஒளிபுரையும் எய்தும் கலாதி
மருளின் நிலையருளும் மானும் -கருவிஇவை
நீங்கின் இருளா நிறைமருதைச் சம்பந்தா
ஈங்குஉன்அரு லாள்என் பெற .
வினா விளக்கம்
**********************
கேவலமான நிலையில் இவ்வ்வுடல் இல்லாதபோதும் ஆன்மா ஆணவத்தின் பிடியில்
இருந்ததால் திருவருள் ஆன்மாவை விட்டு விலகியே இருந்தது . உடல் பெற்று பிறவியெடுத்த
எல்லா நிலையிலும் திருவருள் ஆன்மாவை நெருங்கிவிட்ட நிலையிலும் ஆணவம் ஆன்மாவை
விட்டு நீங்கவில்லை . ஆகவே மறைஞான சம்பந்தா இறையருளால் என்னதான் பயனாகும் ?
விடை ( குறுந்தகட்டில் திரு அறிவொளி கூறியுள்ளது )
*************************************************************************
மருத்துவன் அருகிலிருந்தும் ஓரிரு வேளை மருந்து கொடுத்ததும் நோய் நோயாளியை விட்டு
உடனே அகலுவது இல்லை . காரணம் மருந்தும் பத்தியமும் மருத்துவர் சொல்படி கடைபிடித்தாலே அந்த நோய் நீங்கும் . அதுபோல் ஆன்மாவும் திருவருளை நம்பி விரும்பி அதன்
வழியே நடந்தால் ஆணவம் எனும் அழுக்கு நீங்கும்

( என்னால் முடிந்தவரை இதனை அனைவரோடும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் .இது ஒரு
முயற்சியே . சரியாக கையாண்டிருக்கிறேனா எனத் தெரியவில்லை . தவறிருப்பின்
அனைவரும் மன்னிக்க )
(இதனில் எனக்கு உதவி செய்த திருப்பனந்தாள் மடத்து நூலகத்துக்கும் அறிவொளி அவர்களின் குறுந்தகட்டிற்கும் நன்றிகள் பல )

எழுதியவர் : பகிர்ந்தது சக்கரைவாசன் (22-Apr-19, 8:34 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 125

மேலே