கோடை மழையே வா வா

கோடை மழையே வா...வா!

என் மேகமே... என் மேகமே....
எங்கே கலைந்து ஓடுகிறாய்
நான் இருக்கும் திசையறிந்திருந்தும்
ஏனோ பாராமுகமாய் திரைகிறாய்..?

காலம் கனியுமென்று காலநிலை முன்மொழிய
அசைவற்று இயற்கையாவும் அதையே பின்மொழிய
திசைமாறி ஏய்ப்பது உன் வாடிக்கையோ?
வசைபாடி யான்ஊடல் கொள்வது வேடிக்கையோ?

யாகம் செய்து உன் வரவை வேண்டி
தேகம் தகித்து உன் அணைப்பை நாட
யோகமாய் அன்றொருநாள் வந்தாய்
தாகம் தணிய மோகத்தில் நனைத்தாய்....

ஊரறியாது உலகறியாது உள்ளம் கலந்து
ஒன்றில் ஒன்றாகி ஓடைக்கரை ஒதுங்கியதும்
இன்றில்லை என்றும் உன்வசம் யானென்று
அன்றிலாய் உறுதி தந்த வாக்கும் பொய்யோ....?

சலனப்பட்டு வந்ததனால் சகலமும் மறந்தாயோ...?
விசாலபட்டு பிரிந்ததனால் விலாசம் தொலைத்தாயோ...?
பசலையில் வாடும் பாவையென் பாசவலை
வாசலையாவது தூறலால் நனைத்துச் சென்று விடு...!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (30-Apr-19, 6:09 am)
பார்வை : 32

மேலே