விசித்திர தேசத்து விந்தை மனிதர்கள் நாங்கள்

விசித்திர தேசத்து விந்தைமனிதர் நாங்கள் .....

கட்டக் கோவணமின்றி
கட்சிக் கொடிகள் ஏற்றிடுவோம்
கொடுப்பதை வாங்கி கோசம் போட்டு
கொள்கைகளை மாற்றிடுவோம்

வறுமையும் சிறுமையும் வக்கிரத்தில் கூடி
வரையின்றி பிள்ளைகள் பெற்றிடுவோம்
விதிமீது பழிசொல்லி வீதியில் மதலைகளை
விலைபேசி இனம்பிரித்து விற்றிடுவோம்

எமது தேசம் சுதந்திர தேசமென
எக்காளமாய் முழங்கிடுவோம்
எதிர்மறை கொண்டு அரசை விமர்சிப்பின்
தேசதுரோக வழக்கு தொடுத்திடுவோம்

ஆசாரமாய் அபிசேகம் செய்து
ஆராதனையுடன் ஆன்மீகம் வளர்த்திடுவோம்
அடையாளம் தெரியாது திருவுருவை மாற்றி
ஆண்டவனையே ஆள்மாறாட்டம் செய்திடுவோம்

தன்னிறைவு வேண்டிய சேவைகளை
தனியாரிடம் தாரைவார்த்திடுவோம்
தடையின்றி தட்டுப்பாடின்றி
மதுவிற்பனையில் சாதனை படைத்திடுவோம்

உண்டியல் உடைத்தக் குற்றத்திற்கு
உச்சநீதிமன்றம் வரை வழக்குரைத்திடுவோம்
வன்புணர்வு கொலை கொடூரங்களை
கட்டப்பஞ்சாயத்தில் தீர்த்திடுவோம்

இறையாண்மையை தேசத்தின் கொள்கையாக்கி
இந்துத்துவாவை தீவிரமாய் பரப்பிடுவோம்
இருக்கும் பழம்பெரும் சின்னங்களை உடைத்து
இழித்து பிறமதங்களை வதைத்திடுவோம்

மாநில கூட்டாட்சி தத்துவத்தை
சந்தர்ப்ப கூட்டணியால் சிதைத்திடுவோம்
மத்திய அரசிடம் மண்டியிட்டு
ஏதேச்சதிகாரத்தை விதைத்திடுவோம்

வாரிசுகள் பதவிக்காய் மாரடித்துப் பிழைத்து
வளர்ச்சிப் பணிக்காய் வாரியம் கூட்டி
வரும்படி வசதிக்காய் மானியத்தை சுருட்டும்
விசித்திர தேசத்து விந்தைமனிதர் நாங்கள்....!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (30-Apr-19, 6:12 am)
பார்வை : 47

மேலே