ஆண்மையே பெண்மைக்கு பெரும்வரம்
ஆண்மையே பெண்மைக்கு பெரும்வரம்....!
கடமையில் அயராது பதவி கண்ணியம் தவறாது
உடமைகள் துறந்து ஊருக்காய் உழைத்த
உத்தமத் தலைவர்கள் வாழ்ந்த தேசம்
பெண்ணியப் பேரிகை திக்கெட்டும் கொட்டிட
பேரண்டம் விழித்து வீறுபெற்று எழுந்திட
போர்தொடுக்கும் சொல்லாயுதம் ஏந்திய
பாவலர் பலர் வாழ்ந்த தேசம்
கடைக்கண் பாவையை காதலில் வீழ்த்தி
கடைசி வரை கண்மணியாய் காக்கும்
கட்டிளம் காளையர் வாழ்கின்ற தேசம்
தங்கை தமக்கையர் உயிர் மகவுகளை
தனிப்பெரும் உரிமையில் நெஞ்சில் தாங்கிடும்
தாய் மாமன்கள் வாழ்கின்ற தேசம்
பாருலகத்தார் பசிப் பிணியற்று வாழ்ந்திட
பகட்டு துறந்து சேற்றில் உழன்றிடும்
ஏர்பிடிக்கு உழவன் வாழ்கின்ற தேசம்
இயற்கை பேரிடரிலும் இமயத்தின் எல்லையிலும்
தேசம்காத்திட இன்னுயிரையும் நீத்திடத் துணியும்
வீரத்தோள்கள் வாழ்கின்ற தேசம்
ஆணினமே...
ஏளன ஏச்சுக்கும் இழிவான பேச்சிற்கும் ஆளாகி
கூனிக்குன்றி இன்று குறையுடலாய் சுருங்கி
மனிதமற்ற குரூரங்களாய் சித்தரிக்கப்படுவது ஏன்...?
வெறிபிடித்து அலையும் வக்கிர விலங்குகளாய்
கட்டவிழ்த்த காமுகர் சிலர் வலைவிரித்து வன்புணர்ந்து
பெண்ணினத்தை சீரழிக்கும் தொடரான சம்பவங்களே...
ஆண்மை என்பது அன்பின் உறைவிடம்
தண்மையில் அரவணைக்கும் பண்பின் பிறப்பிடம்
திண்மையில் இதைப் பேணிக் காத்தால்
அவர்களே பெண்மைக்கு பெரும்வரம்!
கவிதாயினி அமுதா பொற்கொடி