கோமாளி ஹைதர் அலி

கோமாளி ஹைதர் அலி

பொன் குலேந்திரன் (கனடா)

ஹைதர் அலி இராக்கில் உள்ள பக்தாத் நகரில் பிறக்கும் போதே சதாம் ஹுசைனின் சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகி விட்டது வாழ்வில் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சி எவ்வளவுக்குத் தனது வாழ்கையைப் பாதிக்கும் என்பது அலிக்கு அப்போது புரியவில்லை. அலியின் பாட்டனார் சைய்யது, மௌசூல் நகரில் பிறந்தவர். குர்திய விடுதலைக்கு இராக்கி தேசத்தை எதிர்த்துப் போராடினவர்

சதாம் ஹுசைனுக்கு குர்திய மக்கள் மீது துவேசம். காரணம், இராக் ஈரானுடன் போர் புரிந்த காலத்தில் குர்திய மக்கள் வடக்கில் ஒரு கிளர்ச்சியை இராக் அரசுக்கு எதிராக ஆரம்பித்து இராக்கிய இராணுவத்துக்குத் தலையிடியை கொடுத்ததே. குர்திய மக்கள் இராக் தேசத்தில் இருந்து பிரிந்து போகவே விரும்பினார்கள்

அலியின் தந்தை காதர் முகம்மது ஒரு கம்பள வியாபாரம் செய்பவர் . அவர் வியாபாரம் நிமித்தம் மோசூலில் இருந்து பக்தாத்துக்கு தன் குடும்பத்தோடு புலம் பெயர்ந்தார். காதரின் மூத்த மகள் அமத் , இரண்டாவது மகள் அல்மா கடைசியாக பிறந்தவன் அலி. பெண்கள் இருவரும் அழகிகள். சதாம் ஹுசைன் காலத்தில் அழகிகளாகப் பிறந்தாலே ஆபத்து,
காரணம் சதாம் ஹுசைனின் மூத்தமகன் உதே ஹுசைன் . தந்தையைப் போல் பெண் பித்து உள்ளவன். தனது எதிரிகளைச் சித்திரவதை செய்து, ரசித்து இன்பம் காண்பவன். தாயின் செல்லப்பிள்ளை சதாமுக்குப் பின் உதே என்று இராக்கிய மக்களால் கருதப்பட்டவன்.

ஒரு நாள் எகிப்திய ஜனாதிபதிக்கு சதாம் இரவு விருந்துவைத்தார். அப்போது ஒரு அழகிய இராக்கிய உயர் குலத்துப் பெண் சமீராவை அவருக்கு சதாமின் உணவு சுவைப்பவரும், தற்பாதுகாப்பாளனுமான ஜியஜியோ என்பவன் அறிமுகப் படுத்தினான் . சமீராவின் அழகில் கவரப்பட்ட சதாம் திருமணமான அந்த பெண்ணை தன் வைப்பாட்டியாக வைத்திருக்க விருப்பினார். அவளும் கணவனை விவாகரத்து செய்து சதாமுடன் வைப்பாட்டியாக வாழ ஒப்புக் கொண்டாள். அதை அறிந்த சதாமின் மனைவிக்குக் கோபம் வந்தது. தன் அன்பு மகன் உதே மூலம் அந்தப் பெண்ணை தன் கணவனுக்கு அறிமுகப் படுத்திய ஜியஜியோவை கொலை செய்யத் தூண்டினாள் .

அன்றிரவு போசனம் கொடுக்கப்பட்டபோது இரவு மது அருந்திவிட்டு பலர் முன்னால் ஜியஜியோவை உதே கொலை செய்த அந்த சம்பவம் சதாமுக்கு தன் மகன் மேல் வெறுப்பை கொடுத்தது. அது மட்டுமல்ல ஓலம்பிக்கில் போட்டியிட்டு தோழ்வியடைந்த உதை பந்தாட்ட வீரர்கள் அனைவரையும் சித்திரவதை செய்தான் உதே . இக் காரணங்களால் உதேயின் தம்பி குவாசி என்பவன் தனக்குப் பின் இராக்கின் ஆட்சியை பொறுப்பு ஏற்பான் என சதாம் அறிவித்தார். குவாசியும் உதேயைப் போன்ற குணம் உள்ளவன். பல படுகொலைகளைச் செய்தவன். ஒரு வாகனக் குண்டு வெடிப்பில் உதே உயர் தப்பியதே அதிசயம் உதேயின் உயிர் எதிரிகளிடம் இருந்து ஆபத்தில் இருந்தது. அவன் கைக்கோல் இல்லாமல் நடாக்கமுடியாத நிலையை குண்டு வெடிப்பினால் அடைந்தான். அந்த நிலையிலும் அவனைப் பெண் ஆசை விட்டு போகவில்லை.

ஒருநாள் பக்தாத் நகரச் சந்தையில், வாகனத்தில் போய் கொண்டு இருக்கும் போது பேரழகிகளான அலியின் அக்காமார் அமத் . அல்மா ஆகிய இருவரையும் உதே கண்டான். அவர்களை உதே கடத்திச் சென்று, தன் இச்சையைப் பூர்த்தி செய்து ,அவர்களைக் கொன்று , உடல்களை ஆற்றில் வீசினான். அக்காமாரின் மரணம் அலியை வெகுவாகப் பாதித்தது.

****

குர்திய இனத்து சேர்ந்த அலி பக்தாத்தில் பிறந்தவன் அவனின் முகத்தில் ஒரு வகை கவர்ச்சி . அவனுக்கு இயற்கையாக அமைந்து விட்டது அவன் சிரிக்கும் பொது அவனது முகபாவனை மாறிவிடுகிறது . நடிப்புக் கலை அவனுக்கு தானாகவே வந்தது .பலரின் கவலையைப் போக்கும் விதத்தில் நடிப்பான் தன்னை மறந்து கதைப் பாத்திரமாக தன் மனதில் எதை நினைக்கிறானோ அதுவாக மாறி விடுவாமன். அவன் விரும்பி பார்ப்பது வோன்ஹோ சுங் (Wonho Chung)
என்ற அரேபிய நகைச்சுவை நடிகனதும் ,

சார்லி சார்ப்லினதும் நடிப்பு . தன்னையும் ஒரு கோமாளியாக வெவ்வேறு கதாப்பாத்திரங்களைப் பார்த்து மக்கள் மகிழ வைக்கவேண்டும் என்பது அலியின் ஆசை. கோமாளி போல் பல தோற்றங்களில் உடல், முக பாவனை செய்து ரசிகர்களைக் கவருவான் . தான் எதாவது வித்தியாசமான கோமாளித்தனமாகச் செய்யவேண்டும் என்பது அலியின் திட்டம் .

அவன் தனது நிகழச்சி நடத்தும் ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் ,சனிக்கிழமை இரவில் ஒரே கூட்டம். அந்த ஹோட்டலுக்கு உதே தன் மெய்காப்பாளனோடு சனிக்கிழமைகளில் செல்வது வழக்கம். அவன் விரும்பி பார்ப்பது அலியின் நடிப்பு. உதேயுக்கு தெரியாது அலி யார் என்று. அலியின் நடிப்பை இரசித்து ஒரு சமயம் உதே அலிக்குப் பரிசும் கொடுத்திருக்கிறான்.

****

அன்று சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் முதலில் நடப்பது ஒரு இசை நிகழ்ச்சி, அதன் பின் நடனம் ஆடும் பெண்கள் தமது திறமையைக் காட்டுவார்கள். அதன் பின் இறுதி நிகழ்ச்சியாகக் கோமாளி அலியின் நிகழ்ச்சி . உதே உட்பட அன்று வந்திருந்தவர்கள் மேடைக்கு அலியின் வருகையை எதிர்பார்த்து இருந்தனர் . மேடையில் திரை விலகியது



முகத்தையும், வாயையும் சுற்றி வெள்ளை அரிதாரம் போட்டபடி சர்க்கஸ் கோமாளியைப் போல் தோற்றமளித்த அலி கவர்ச்சியான துரு துருத்தக் கண்கள், வில்லைப் போல் வளையும் உடம்பு, நீண்ட கைவிரல்கள். வெள்ளை நிற ஆடை அணிந்து மேடைக்கு வந்தான் . ஒரே கைதட்டல்கள் . மார்பகம் கவர்ச்சியாக வளர்ச்சி பெற்றத் தோற்றத்தோடும் ஒரு பெரிய வயிற்றோடும் நடக்க முடியாது ஒரு நிற மாதக் கற்பிணி பெண் போல் கோமாளி அலி மேடைக்கு வந்தான் வெளிச்சம் அவனை நோக்கிக் குவிந்தது அவன் நகரும் இடமெல்லாம் வெளிச்சமும் அவனைத் தொடர்ந்தது . கோமாளி அலி, ஒரு ஆணா, பெண்ணா, அலியா என்பது பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகத்தை கொடுத்தது ? அருகே சென்று உற்று நோக்கினால் அப்போதுதான் அவர்களுக்கு தெரியும் அலியின் முகத்தில் இருந்த மீசையை அரிதாரம் மறைத்திருந்தது என்று . தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டை போட்டிருந்த அவன் தோற்றம் பெண்ணாகப் பலரை ஏமாற்றியது. அது மட்டுமா? காதில் தோடு. மூக்கில் மூக்குத்தி. உதட்டில் சிவப்பு சாயம். இமைகளுக்குக் கருப்பு மை, அசைவில் ஒரு நளினம். அவன் அலங்காரம் பலரை ஏமாற்றிவிடும் . பேசாது அங்க அசைவுகளினால் தனது பார்வையாளர்களுடன் அவன் தொடர்பு கொண்டான். அவனின் ஒவ்வொரு அங்க அசைவும் வந்திருந்தோரை இரசிக்க வைத்தது. என்ன பிரமிக்கத் அவனுடைய தக்க கலைத்திறன் . கண்கள், கைகள், கால்கள், புருவம் எல்லாமே பேசின. இது ஒரு வகைத் தொடர்புக்கான மொழியா?

மேடைக்கு வந்தவுடன் சிரமத்துடன் சிரம் தாழ்த்தி, ஜப்பானியரைப் போல் வணக்கம் செலுத்தினான். . பேசாது, பாவனை மூலம் தன் கற்பிணி என்ற ஓரங்க நாடகத்தை அங்க அசைவுகள் மூலம் ஆரம்பித்தான்..

ஆரம்பத்தில் எதை அவன் பாவனை மூலம் சொல்கிறான் என்பது பலருக்குப் புரியவில்லை. எல்லோரும் அவன் பெரும் வயிற்றைப் அவன் பிடித்தபடி நடந்ததைப் பார்த்துச் சிரித்தார்கள். அவர்களுடன் சேர்ந்து என்றும் அதிகம் சிரிக்காத உதேயும் தனது வாயில் இருந்த நீண்ட சுருட்டை கையில் எடுத்துச் சிரித்தான் . அவனுக்குப் பக்கத்தில் இருந்தவர்களும் சிரித்தார்கள்

அலியின் முக பாவனைகளைச் சற்று நுணுக்கமாய் எல்லோரும் நோக்கினார்கள் . ஒவ்வொன்றிலும் அர்த்தம் இருப்பது எனச் சிலருக்குத் தெரிந்தது. ஒரு பெரும் வயிற்றைப் பிடித்தபடியே பசியோடு பாதையில் நடக்கும் ஒரு ஏழை கற்பிணி பெண்ணை அவன் சித்தரித்திருக்கிறான் என்பது தெரிந்தது. பசியால் பெண் படும் அவஸ்தையைப் பிரமாதமாய் முக பாவனை செய்து காட்டினான் அலி. பசியை அடக்கி பாதை ஓரத்தில் அமர முயற்ச்சித்த அந்தக் கற்பிணிப் பெண்ணால் முடியவில்லை. யாரோ பரிதாபத்தில் பாதையில் போட்ட ஒரு துண்டு ரொடடியை ஆசையுடன் எடுத்த போது அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சி எதோ ஒரு மில்லியன் லொட்டரி விழுந்தவள் முகம் போல் இருந்தது. ரொட்டியைத் திருப்பித் திருப்பி பார்த்தான். நுனியில் சுவைத்துப் பார்த்தான். பழையது இல்லை என்பதை அவன் முகம் காட்டியது. பின் தன் வயிற்றில் உள்ள தன சிசுவுக்கு ரோட்டி கொடுப்பது போல் காட்டினான். அதன் பின் ரொட்டியை உண்ணத் தயாராவதை நடிப்பின் மூலம் பிரமாதமாய் நடித்துக்காட்டினான் அலி. உணவு கிடையாது பசியால் வாடும் கற்பிணி ஒருத்தி எவ்வாறு பசியைத் தாங்கிப்பிடிக்க தெண்டிக்கிறாள் என்பதைத் தத்ரூபமாக தன் கலைத்திறமை மூலம் நடித்துக்காட்டினான். உண்மையில் அவனும் வீடு இல்லாத பாதையோர வாசியோ என்று பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
அவனின் நடிப்பை பார்த்தவர் பலரின் கண்களில் கண்ணீர் வந்தது.

பலத்த கைதட்டல்களுடன் நிகழ்ச்சி முடிந்தது. உதே தனது மெய்காப்பாளனை கொண்டு தன்னிடம் அலியை பரிசு வாங்க வரும்படி அழைத்தான். உதேயின் வேண்டுகோளை ஏற்று அலி மெதுவாக ஒரு கற்பிணி அசைவது போல் வயற்றை ப]பிடித்த படி போல் உதே இருக்கும் கதிரைக்கு மேடையில் இருந்து இறங்கிப் போனான்

உதே அலியின் கைகளைப் பிடித்துக் குலுக்கி அவன் முதுகில் தட்டிப் பாராட்டிய போது ஒரு பெரும் குண்டு வெடிப்பு சத்தம் அந்த இடத்தை அதிரவைத்தது. அந்த இடந்தில் இருந்த உதேயும், மெய்காப்பாளனும். அருகில் இருந்த சிலரும், கோமாளி அலியும் குண்டு வெடிப்பில் உடல் சிதறி பிணமாய் விழுந்தனர் ,
அலி தனது உயிரைக் கொடுத்து உதேயை தன் அக்காமார் இருவரையும் கற்பளிதுத் கொன்றதுக்குப் பலி வாங்கி விட்டான் என்பதும், அவன் வயிற்றில் கற்பிணி தோற்றத்தைக் கொடுத்தது வெடி குண்டு என்பதும் பலருக்குத் தெரியவில்லை. உண்மையில் வெடி குண்டில் இறந்தது உதே அல்ல அவனைப் போல் தோற்றமுள்ள பிரதி என்பதும் பலருக்குத் தெரியாது,

****

( யாவும் புனைவு)

எழுதியவர் : திகில் (5-May-19, 1:20 am)
பார்வை : 55

மேலே