பாரதி இயல்------------சிவ மாதவன் பாரதியார் கவிதைகளிள் அணிநலம்

மஹாகவி பாரதியார் பற்றிய அருமையான ஒரு நூலை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன்.

அனைத்து பாரதி ஆர்வலர்களும் இதைக் கண்டிப்பாகப் படிப்பதோடு ஒரு பிரதியை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.

448 பக்கங்கள் கொண்ட இந்த நூல் 2002, அக்டோபரில் Elavalagan Pathippagam, New no 16, Old no 32 First Floor, Second Street, Balaji Nagar, Royapettah Chennai – 600014 – இளவளகன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. விலை ரூ 200/.

இது ஒரு ஆய்வு நூல். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து இந்த நூலை ‘முன்னேற்றமடையாத சிற்றூர்ப்புறத்திலிருந்து வந்து’, முனைவர் சிவ. மாதவன் இதைத் திறம்படச் செய்துள்ளார்; பாராட்டுக்குரியவர்!

முன்னுரை, 1. அணிகளின் பயன்பாடும் வளர்ச்சியும், 2. பாரதியார் கவிதைகளில் மரபு உவமைகள் 3. பாரதியார் கவிதைகளில் புதிய உவமைகள் 4. பாரதியார் உவமைகள் உணர்த்தும் செய்தி, முடிவுரை, குறிப்புகள், துணை நூற்பட்டியல், இணைப்புகள் ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது இந்த நூல்.

முன்னுரையில் நூலாசிரியர், “பாரதியார் கவிதைகளில் அமைந்துள்ள அணிநலக் கூறுகளை விளக்கி அவற்றை மதிப்பிடும் முயற்சி இவ் ஆய்வில் மேற்கொள்ளப்படுகின்றது. எனவே, இவ் ஆய்வில் விளக்கவியல் மற்றும் மதிப்பீடு ஆய்வுமுறை (Descriptive and Evaluatory method) அணுகுமுறையாக அமைகிறது” என்று குறிப்பிடுகிறார்.

அணிகளின் இன்றியமையாமையையும் வளர்ச்சியையும் பற்றி சிவ. மாதவன் அழகுற விளக்குகிறார்.

அணி குறித்த விளக்கமாய் நான்கு கருத்துக்களை அவர் நம் முன் வைக்கிறார் : 1)கவிதையை அழகுபடுத்துவது 2) பொருளைப் புலப்படச் செய்வது 3) இலக்கியப் புலமைக்கு வளம் சேர்ப்பது 4) அணிமைப் படுத்துவது.

உவமையின் பயன் என்ன? மதுரைக் காஞ்சியை மேற்கோளாகக் காட்டி ஆசிரியர், ‘அறிந்த பொருளைக் கொண்டு அறியாத பொருளைப் பிறர்க்கு அறிவுறுத்தல்’ என உவமையின் பயனை இவ்வாறாகக் குறிப்பிடுகிறார்.

தமிழின் அணியிலக்கணம் 1) தமிழுக்குரிய தனிமரபு 2) வடமொழியைத் தழுவியமைந்த மரபு 3) வடமொழி மரபு 4) புது மரபு என இப்படி நான்கு வகைகளாக அமைவதை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார்.

அடுத்து தமிழில் உள்ள அணிநூல்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குகிறார் ஆசிரியர்.

வீர சோழியம் : பொருளணிகள் முப்பத்தைந்தும் சொல்லணிகள் ஏழும் இந்நூலுள் குறிப்பிடப்படுகின்றன.

தண்டியலங்காரம் : பொதுவணியியல், பொருளணியியல், சொல்லணியியல் ஆகிய மூன்று இயல்களைக் கொண்டது இந்த நூல்.

மாறனலங்காரம் : பொருளணியியலில் 64 அணிகளை இந்த நூல் குறிப்பிடுகிறது.

இலக்கணவிளக்கம்: 35 பொருளணிகள், 2 சொல்லணிகள் ஆகியவற்றை இது விளக்குகிறது.

தொன்னூல் விளக்கம் : 30 சொல்லணி, 30 பொருளணிகளை இது விளக்குகிறது.

முத்துவீரியம் : இதில் 58 பொருளணிகள், 14 வகை சொல்லணிகள் விளக்கப்படுகின்றன.

சுவாமிநாதம் : இதில் 31 பொருளணிகள், சொல்லணி மரபில் மடக்கணி மற்றும் 23 சித்திரக் கவிகளும் விளக்கப்படுகின்றன.

இது தவிர வடமொழி மரபை அப்படியே தந்துள்ள குவலாயனந்தம், தொனி விளக்கு உள்ளிட்ட நூல்கள் பற்றியும் நூலாசிரியர் விளக்கியுள்ளார்.

அணிகள் பற்றி நன்கு இப்படி விளக்கிய பின்னர் இந்த வலுவான அடிப்படையில் நூலாசிரியர் நம்மிடம் பாரதியாரின் அணிநலம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.

பாரதியாருக்கு, ‘தெளிவுறவே அறிந்திடுதல், தெளிவு தர மொழிந்திடுதல், சிந்திப்பார்க்கே களி வளர உள்ளத்தில் ஆனந்தக் கனவு பல காட்டல்’ (பாஞ்சாலி சபதத்தில் பாரதியார் வாணியை நோக்கி வேண்டுதல்) ஆகியவையே முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை உண்டு.

அத்தோடு மட்டுமன்றி, ‘நாசக்கதையை நடுவே நிறுத்தி விட்டுப்

பேசும் இடைப் பொருளின் பின்னே மதி போக்கிக்

கற்பனையும் வர்ணனையும் காட்டிக் கதை வளர்க்கும்

விற்பனர் தம் செய்கை விதமும் தெரிகிலன் காண்” என்ற அவர் தம் பாடல் அடிகளால் வெற்றுக்கு கதை வளர்ப்பதில் அவரது ஆர்வமின்மையை நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது.

இந்த அடிப்படையில் பாரதியார் பாக்களில் நுழைந்தால் அடடா, எத்தனை அற்புதமான அனுபவங்கள் ‘அணி அணியாக’!

அத்தனையையும் விளக்குகிறார் சிவ. மாதவன்.

பாரதி படைத்த பயன் உவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு:

“போனதற்கு வருந்திலன் – மெய்த்தவப்

புலமை யோனது வானத் தொளிருமோர்

மீனை நாடி வனைத்திடத் தூண்டிலை

வீசலொக்கு மெனலை மறக்கிலேன்”

போனதற்கு வருந்துவது வானத்து நட்சத்திரத்தைத் தூண்டில் போட்டு வளைத்துப் பெற இயலாததைப் போல ஆகும்.

பாரதியாரின் மெய்யுவமத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு :

துரியோதனனைப் பற்றிய பாரதியாரின் வர்ணனை:

“உடல் வற்றித் துரும்பொத்து இருக்கின்றான்”

வடிவம் சார்ந்த உவமம் இது.

அடுத்து, “ சுருளலை வெள்ளம் போலத்

தொகையிலாப் படைகள் கொண்டே” என அவர் கூறுவது எண்ணிக்கை சார்ந்த உவமையாகும்.

இப்படி நூல் முழுவதும் பாரதியார் கையாண்ட அணிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன.

இன்னும் சிலவற்றை அடுத்துக் காண்போம்.

தொடரும்
***

--------------------------------------

ச.நாகராஜன்

எழுதியவர் : (15-May-19, 5:05 am)
பார்வை : 133

சிறந்த கட்டுரைகள்

மேலே