அம்மா

அப்பா வீட்டில் இல்லாத தனிமையில்
அம்மாவிடம் கழிந்த பொழுதுகள்
விநோதமானவை.
மூன்று வார்த்தைகள் பேசுமிடத்தில்
அன்று மட்டும் முப்பதை அடைத்துவிடுவாள்.

சாத்தூர் சந்தை சேவு கதைகளும்
அதன்மேல் அவள் கொண்ட அலாதிப்பிரியமும்
சுதந்திரமாக உலாவித் திரியும்.

அப்பாவின் அதட்டல்களினூடே
கண்ணாலும், புன்னகையாலும்
நாங்கள் பேசும் மொழிக்கு
அன்றுதான் அகராதி எழுதுவோம்.

பறவைகளைப் பற்றி பேசி தீர்த்துவிடுவாள்.
உலகப் பிரச்சனைகள் அனைத்திற்க்கும்
ஒரு தீர்வு வைத்துவிடுவாள்.
தன் அரசியல் நுண்ணறிவால் வாயடைத்துவிடுவாள்.

என் அம்மா ஒரு வாயாடி.

அள்ளிப்பூசிய மஞ்சளை மீறி மிளிரும்
அவள் கருந்தோல் போல்
அவள் மௌனத்தின் பின்னால்
அத்தனை கதைகள் மின்னும்.

ஆடிட்டர் அங்கிளிடம் அரங்கம் அதிர
ஐந்து மணி நேரம் பேசும் அப்பா
ஏன் அம்மாவின் மௌனப் பூட்டை
திறக்க பிரியப்படவேயில்லை?
பேசுவதைவிட முக்கியமானது கேட்கப்படுவது
அதை அவளுக்கு தர தவறிவிட்டோமா?

என் அம்மா கேட்கப்பட வேண்டியவள்.

பின்வரும் நாட்களில்,
அப்பா இல்லாத அம்மா பொழுதுகளில்,
சோவென்று மழைப்பெய்து பள்ளி
விடுமுறை விட வேண்டியிருக்கிறேன்.

ஒற்றை மெழுகுவர்த்தியின் ஔியும்
சாமக்கோடாங்கியின் சப்தமும்
எஞ்சி நிற்க்கும் மின்வெட்டு இரவுகளுக்கு எதிர்ப்பார்த்திருக்கிறேன்.

மேகம் சூழ்ந்திருக்கும் நிலவொளிப்போல்
மௌனத்திரையின் பின் வாழும்
அந்த பெண்ணிடம் முழுமையாக காதல் வயப்பட்டேன்.

என் அம்மா - நான் தேடி அலைந்த சந்தோசம்.

ஆள் ஆரவரமற்ற ஓர் இயற்கைசூழ் கிராமத்தில்,
மக்கள் ஈ மொய்க்காத ஒரு கோவிலி்ல்
பாழடைந்த கருவறை முன் மௌனத்தில்
லயித்திருந்தது போல்
அடிக்கடி வரும் ஒரு கனவு.

அங்கும் தூணில் சாய்ந்தபடி எனக்காக
காத்துக்கொண்டிருந்தாள் என் அம்மா
அவள் பார்த்த, கேட்ட, அனுபவித்த
ஏதோ ஒரு கதை சொல்ல.

என் அம்மா ஒரு அற்புத ஔி.

எழுதியவர் : Hemalatha (19-May-19, 2:45 am)
சேர்த்தது : Hemalatha
Tanglish : amma
பார்வை : 2684

மேலே