பாகேஸ்ரீ- சிறுகதையில் வரும் பாடல்கள்

சென்ற வாரம் பதாகையில் ‘பாகேஸ்ரீ’ என்ற என் சிறுகதை வெளியானது. அதில் பல ராகங்களின் குறிப்பும் பாடல்களின் குறிப்பும் வரும். கதையைப் படித்த நண்பர்கள் சிலர் இந்த பாடல்களுக்கும் ராகங்களுக்கும் சுட்டி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள். அதனால் இங்கு இந்த ராகங்களை பற்றியும் பாடல்கள் பற்றியும் சிறுகுறிப்பு எழுதி சுட்டி தருகிறேன்.

ஹோட்டலில் உட்கார்ந்துகொண்டு கதைசொல்லி முதலில் பாடும் ராகம் பாகேஸ்ரீ: இது ஒரு ஹிந்துஸ்தானி ராகம். கர்நாடக இசைக்கு வடக்கேயிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. திரை இசையில் பல அருமையான பாடல்கள் இந்த ராகத்தில் அமைந்திருக்கின்றன. கதையில் வரும் பாகேஸ்ரீ பாடல்கள் இவை:

– ஜாக் தரத் எ இஷ்க் ஜாக். இந்த பாடல் ‘அனார்கலி’ என்ற படத்தில் வந்தது. இதற்கு இசையமைத்தவர் சீ.ராமச்சந்திர. இந்தப் படப்பாடல்கள் அந்த காலத்தில் இந்தியா முழுவதும் முழங்கின. குறிப்பாக லதா பாடிய ‘எ ஜிந்தகி உசிகி ஹய்’ பாடலும் இந்தப் பாடலும் எல்லோராலும் விரும்பப்பட்டன. ஹேமந்த் குமார் மற்றும் லதா மங்கேஷ்கர் சேர்ந்து பாடிய ஜாக் தரத் எ இஷ்க் ஜாக்’ பாடலை இங்கு கேட்கலாம்:



– சித்சோர் என்ற படம் சின்ன பட்ஜெட் படம் ஆனால் பெரிய வெற்றி பெற்ற படம். அந்த வெற்றிக்கு உறுதுணையாக அந்த படத்தின் பாடல்கள் இருந்தன. ‘கோரி தேரா காவ்ன் படா ப்யரா’ பாடல் ஒலிக்காத இடமே இல்லை. ஜேசுதாசுக்கு ஹிந்தியில் அழியாப் புகழை இந்தப் படப்பாடல்கள் பெற்றுக் கொடுத்தன. ரவீந்திர ஜெயின் இசையில் ஜேசுதாஸ் மற்றும் ஹேமலதா பாடிய பாகேஸ்ரீ ராக பாடல் இங்கே:



– மாயா பஜார் ஓர் அழியாக் காவியம். நான் இதை தெலுங்கில்தான் பார்த்திருக்கிறேன். ரங்கா ராவின் நடிப்பும் சாவித்ரியின் நடிப்பும் அருமையாக இருக்கும். அதுவும் சாவித்திரி கடோத்கஜன் போல் நடிக்கும்பொழுது ஏன் அவர் சினிமா உலகில் அவ்வளவு பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் என்று நமக்கு தெரியும். அந்த படத்தில் எல்லா பாடல்களும் அருமையாக இருக்கும். ‘கல்யாண சமையல் சாதம்’ அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்தப் படத்திற்கு ராஜேஷ்வர் ராவ் முதலில் இசையமைத்ததாகவும் பிறகு ஏதோ காரணத்தால் அவர் விலகி கண்டசாலாவின் பெயர் இசையமைப்பாளராக வந்தது என்றும் சொல்வதுண்டு. மாயா பஜார் படலை இங்கு கேட்கலாம். கண்டசாலாவும் லீலாவும் பாடியது:



– தமிழ் திரையிசையில் பல அருமையான பாகேஸ்ரீ ராக பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனாலும் இன்றும் பாகேஸ்ரீ என்று சொன்னால் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வரும் பாடல் ராமு படத்தில் வந்த ‘நிலவே என்னிடம்’தான். பாடல் காட்சிப்படுத்தப்பட்ட விதம், எம்.எஸ்.வி.யின் அருமையான மெட்டு, பி.பி. ஸ்ரீனிவாசின் மென்மையான குரல். இவை எல்லாம் சேர்த்து நம்மைச் சொக்க வைத்து விடுகின்றன. பாடல் இங்கே கேட்கலாம்:



– பாகேஸ்ரீ ராகத்தை அற்புதமாகப் பாடியவர்களில் கிஷோரி அமோன்கர் ஒருவர். பல வருடங்களுக்கு முன் அவர் ரிலீஸ் செய்த ரெகார்டில் ஒரு பக்கம் பாகேஸ்ரீயும் மறுபக்கம் பூப் ராகமும் (மோகனம்) இருக்கும். இது ஒரு அற்புதமான இசைத்தட்டு. ஹிந்துஸ்தானி இசை அறிந்தவர்கள் இதைக் கேட்காமல் இருந்திருக்க மாட்டார்கள் என்று அடித்துச் சொல்லலாம். விளம்பித் க்ஹையால் மற்றும் திருத் பாடியிருப்பார். இங்கே கேட்கலாம்:



– இந்த பாகேஸ்ரீ ரகத்தை அற்புதமாக கையாண்ட இன்னொரு இசைக் கலைஞர் அமீர் கான். இவருடைய பாடும் பாணிக்கு இது போன்ற ராகங்கள் வெகு உகந்தவைக இருந்தன. ஒரு அவசரமும் இல்லாமல் ஒவ்வொரு ஸ்வரத்தையும் அனுபவித்து பாடும் இவர் ஹிந்துஸ்தானி இசையின் மாமன்னர்களில் ஒருவர். அவர் பாடிய பாகேஸ்ரீ இங்கே:


தாகூர்ஸ் ஹோம் ஸ்கூலில் பேப்பர் திருத்தும்பொழுது கதைசொல்லி பாடும் ராகம் பூர்ய தனஸ்ரீ. இதை கர்நாடக இசையில் பந்துவராளி என்கிறோம். இந்த ராகத்திலும் தமிழ் திரைசையில் பல பாடல்கள் வந்திருக்கின்றன.

– மிகவும் பிரசித்தி அடைந்த ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடலில் பல்லவி பந்துவாரளியில் அமைக்கப்பட்டது. (இந்த பாடல் ராகமாலிகை பாடல். சரண்த்தில் ராகம் மாறும்) :



– ரங்கீலா படத்தில் வரும் ‘ஹே ராமா’ பாடல் இந்த ராகத்தில் அமைந்ததுதான். இந்திய முழுக்க முழங்கிய இந்த பாடல் ரஹ்மானுக்கு ஹிந்தி பட உலகில் உயர்ந்த இடத்தை கொடுத்தது:



– ஹிந்துஸ்தானி இசையில் பூரிய தனஸ்ரீ எப்படி இருக்கும்? பாரத் ரத்னா பீம்சென் ஜோஷி பாடுகிறார்:



– கர்நாடக சங்கீதத்தில் பந்துவராளி எப்படி இருக்கும்? இன்னொரு பாரத் ரத்னா, எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடுகிறார்:



மேஹபில் ஒன்றில் குல்கர்னியின் மகனும் கதைசொல்லியும் பாடுகிறார்கள். கதைசொல்லி மால்கௌன்ஸ் ராகத்தில் அமைந்த ஹிந்தி சினிமா பாடலை பாடுகிறான். இந்த ராகத்தை கர்நாடக இசையில் ஹிந்தோளம் என்பார்கள். அந்த பாட்டு இதோ. நவ்ஷாத் இசையில் முஹம்மத் ரபி பாடிய பாடல்:



மழை பெய்து கொண்டிருக்கும்போது பக்கத்து இருக்கையில் இருப்பவன் கதைசொல்லியின் பாட்டைப் புகழ அவர் பாட ஆரம்பிக்கும் ராகம் மியான் கி மல்ஹார். இது மழைக்கால ராகம். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகம் கிடையாது. ஹிந்துஸ்தானியில் இதை பலர் பாடியிருக்கிறார்கள். ஹிந்துஸ்தானி இசையில் எல்லோருக்கும் பிடித்த ராகம் இது.

– இதில் முக்கியமான பாடல் படா க்ஹையால் ‘கரீம் நாம் தேரோ” இதை பல பிரசித்தமான பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அமீர் கான், பீம்சென் ஜோஷி, கிஷோரி, மன்சூர் மற்றும் பலர். இதில் என்னை மிகவும் கவர்ந்தது அமீர் கான் பாடியதுதான்.


– ‘மேகா தாகே தாரா என்னும் வங்காள படத்தில் இதே பாடல்



– ‘போலே ரே பபிஹரா’ என்ற சோட்டா க்ஹையால் இந்த ராகத்தில் புகழ்பெற்ற ஒன்று. அதை குமார் கந்தர்வா பாடுகிறார்:



– குட்டி என்ற படத்தில் வந்த பிறகு ‘போலே ரே பபிஹரா’ இன்னும் புகழ் பெற்றது. வாணி ஜெயராம் என்ற பாடகியை இந்தியா முழுவது அறிமுகம் செய்து வைத்த பாடல் இது. வசந்த் தேசாய் இசையமைப்பு:



‘இவன் கான் சாப் போல பாடுகிறான்’ என்று குல்கர்னியை வியக்க வைத்த பாட்டு ‘கா கரூன் சஜனி’. படே குலாம் அலி கான் பல தும்ரிகளுக்கு அதிபதி. அவற்றில் முக்கியமானவை ‘ஓம் தத் சத்’ மற்றும் ‘கா கரூன் சஜனி’. அவர் ‘ஓம் தத் சத்’ பாடாமல் எந்த கச்சேரியும் முடிக்க முடியாது என்று படித்திருக்கிறேன். என்ன அருமையான குரல். உணர்வுப்பூர்வமான பாடல். ‘கா கரூன் சஜனி’ :


இதே முதல் வரியை எடுத்துக்கொண்டு சுவாமி என்ற படத்தில் அமைக்கப்பட்ட பாடல். ஜேசுதாசின் புகழ் பெற்ற ஹிந்தி பாடல்களில் இதுவும் ஒன்று. இந்தப் பாடல் வந்த காலத்தில் தினமும் ரேடியோவில் ஒலித்த பாடல்.



கான் சாப் அவனிடம் வாங்கிய சத்தியத்தை எண்ணி கதைசொல்லி பாடும் ராகம் தோடி. ஹிந்துஸ்தானி இசையில் ராக் தோடி என்று அழைக்கப்படும் ராகம் கர்நாடக இசையில் சுபபந்துவராளி என்று அழைக்கப்படுகிறது. (கர்நாடக இசையிலும் தோடி என்ற ராகம் உண்டு ஆனால் அதற்கும் ஹிந்துஸ்தானி தோடிக்கும் சம்பந்தம் இல்லை).

– பன்னாலால் கோஷ் புல்லாங்குழலில் ராக் தோடி ;



– டி.என். சேஷகோபாலன் குரலில் சுபபந்துவராளி ராகம் :

எழுதியவர் : எஸ்.சுரேஷ் (4-Jun-19, 6:04 am)
பார்வை : 74

மேலே