கிரிக்கெட்டும் வேட்டைக்காரனும்

கிரிக்கெட்டும் வேட்டைக்காரனும்

கிரிக்கெட் விளையாடுவதையும் மறந்து நாங்கள் வேட்டைக்காரன் மணி சொல்வதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருக்கிறோம். “”ஒருக்கா”” நான் மலையில தனியா நடந்து வந்துகிட்டிருக்கேன், நல்லா இருட்டிடுச்சு, அந்த பி.ஏ.பி. வாய்க்காலை தாண்டி வர்றப்ப ஒரு “காட்டுப்பான்னி” என்னைப்பார்த்து முறைச்சுகிட்டு நிக்குது. நான் மட்டும் லேசுப்பட்டவனா? அந்த காலத்துல எங்கப்பா பெரியா வேட்டைக்காரரு, .நானும் பெரிய வேட்டைக்காரந்தான். ஒண்ணு மட்டும் தெரிஞ்சுக்குங்க, எந்த மிருகத்தை பார்த்தாலும் பயந்து போயிடக்கூடாது, நாமளா, அதுவா அப்படீன்னு பார்த்திடணும். அப்பத்தான் மிருகங்கள் எல்லாம் நம்மளை கண்டா மிரளும்.
”அண்ணே அந்த பன்னி என்ன பண்ணுச்சு? பொறுமையிழந்து ஒருவன் கேட்க, மணி அவனை ஓரக்கண்ணால் பார்த்து பொறு தம்பி நீ அவ்வளவு அவசரப்படறியே அந்த பன்னியப்பார்த்த உடனே நான் அவசரப்பட்டிருந்தேன்னா என் நிலைமை என்ன ஆகியிருக்கும்? என்று கதையை இழுக்கவும் சரி வாங்கடா என்று பந்தை எடுத்துக்கொண்டு மணீயை கேள்வி கேட்டவன் இவர்களை விளையாட கூப்பிட மணி “கொஞ்சம் பொறுங்க” ( பசங்க இனிமேல் கதையை இழுத்தா போய்விடுவான்கள் என்று உணர்ந்தவன்) நான் பன்னிக்கு எதிரா இரண்டு கையையும் இடுப்புல வச்சுகிட்டு அதையே உத்து பார்த்துகிட்டே நின்னன். கொஞ்சம் கொஞ்சமா பன்னி என்னைய பார்த்து பயந்து பின்னாடி போயி திரும்பி ஒரே ஓட்டமா ஓடிடுச்சு. என்றான்.
“அண்ணே நீங்கள் உண்மையிலேயே வேட்டைக்காரந்தாண்ணே. நாங்கள் மணி அண்ணனையும் எங்கள் கிரிக்கெட் விளையாட்டில் சேர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டோம். கிரிக்கெட்டில் சேர்த்துக்கொண்டோமே தவிர அவர் பேட்டை கோடாலி பிடித்தது போல நின்ற தோரணையும், பந்தை கோடாலி போல வெட்டுவதையும் , பந்தை தலையை சுற்றி எறிவதையும் சகித்துக்கொண்டோம். காரணம் எங்களுக்கு இரு அணிகள் விளையாட ஆள் பற்றாக்குறையே..
நாங்கள் அனைவரும் மலைப்பகுதியுல் வசிக்கும் அரசு ஊழியர்களின் பிள்ளைகள். அதனால் எங்களுக்கு விளையாட ஒரு மைதானம் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள். அதில் ஓரளவு முழுமையாக விளையாட முடியும் என்றால் அது வாலிபால், கபடி போன்ற விளைடயாட்டுக்கள் மட்டும் தான். மற்றபடி அதற்கு மேல் அங்கு இடமில்லை. ஆனால் நாங்கள் தேர்ந்தெடுத்த விளையாட்டு கிரிக்கெட், அதில்தான் இருவர் மட்டும் கஷ்டப்பட்டால் போதும். மற்றவர்கள் பந்தை கூர்ந்து கவனிப்பது போல (சோம்பேறியாக நிற்கலாம்) இந்த விளையாட்டில் இன்னொரு நன்மையும் உண்டு. அதாவது “பேட் செய்பவர்” எப்படியும் நான்கு பந்து மெதுவாக அடித்தாலும் ஏதோ ஒரு பந்தை வேகமாக அடித்து விடுவார். பந்து மைதானத்தை விட்டு காட்டுக்குள் போய் விழுந்து விடும். எங்களுக்குள் எழுதப்படாத ஒரு சட்டம் உண்டு. பந்து எங்காவது விழுந்து விட்டால் “வீசுபவரும்”, “அடிப்பவருமே” போய் கண்டுபிடித்து எடுத்து வரவேண்டும். அதுவரை நாங்கள் அக்கடாவென ஒரு இடத்தில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருப்போம்.
நாங்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பக்கத்து ஊர்களுக்கு கிரிக்கெட் “பந்தயம் கட்டி” விளையாட செல்வோம். நகரத்தில் இருக்கும் பஸ் வசதிகள் எல்லாம் இங்கு கிடைக்காது. அப்படியே பொடி நடையாய் காட்டு வழியாக நடந்து பக்கத்து ஊர்களுக்கு சென்று விளையாடவேண்டும். நடந்து போய் சேர்வதற்குள்ளே அனைவருக்கும் வேர்த்து விருவிருத்துப்போகும். அதன் பின் விளையாண்டு அவர்களிடம் மூக்கு உடைபட்டு (தோற்று) பின் திரும்பி நடந்தே வருவோம். எங்களூருக்கு வரும் எதிர் கிரிக்கெட் அணியும் எங்களிடம் மூக்கு உடைபடும் நிகழ்ச்சியும் நடக்கும்.
ஒரு முறை “நவமலை” என்னும் ஊருக்கு கிரிக்கெட் விளையாட ஆயத்தமானோம். அந்த ஊருக்கு கண்டிப்பாக பஸ்ஸில்தான் போக முடியும். ஏனெனில் ஊர் மலை அடிவாரத்தில் இருக்கிறது. காலை ஐந்து மணி பஸ்ஸில் அந்த குளிரில் கிளம்பி மலை அடிவாரம் வந்து இறங்கி அதன் பின் ( நவமலை நான்கைந்துகிலோ மீட்டர்) நடந்து போய் சேர்வதற்குள் எங்கள் அணியில் பாதிப்பேர் மயக்கம் போடாத குறை. வழக்கம்போல் விளையாண்டு தோற்று மாலை ஒருவரும் நடந்து வர தயாராக இல்லாததால் பஸ்ஸுக்காக காத்திருந்து வால்பாறை மெயின் ரோட்டுக்கு வந்து அதன் பின் எங்கள் ஊர் செல்வதற்கு ஒரு லாரியை பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம். வரும் போதே இரவு பனிரண்டுக்கு மனிக்கு மேல் ஆகுமாதலால எங்களுடன் வந்த சங்கர் என்னும் நண்பன் வீட்டில் இரவு தங்கிக்கொள்வதற்கு நானும் வேட்டைக்காரன் மணி அண்ணனும், மற்றும் சில நன்பர்களும் அவனிடம் அனுமதி வாங்கிக்கொண்டோம்.
சங்கர் கர்நாடக விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், அவன் அப்பா அரசு ஊழியராக இருந்தாலும் விவசாயத்தின் மீது ஈடுபாடு. ஆகையால் வீட்டைச் சுற்றி சீசனுக்கு தகுந்தவாறு விவசாயம் செய்வார். இந்த சீசனில் கப்பங்கிழங்கு போட்டிருக்கிறார். அவர்கள் குடும்பத்துடன் அவர்கள் ஊர் கோயில் திருவிழாவிற்கு சென்றிருக்கிறார்கள். இவன் மட்டும் இந்த கிரிக்கெட் மாட்ச் காரணமாக (பெரிய இண்டர்நேசனல் மேட்ச்) போகாததால் எங்களுக்கு வசதியாக போய்விட்டது.
லாரியில் இருந்து இறங்கி அந்த இருளில் சிறிது தூரம் நடந்து வரும் பொழுதே சங்கர் வீட்டு நாய் வேகமாக அவனை நோக்கி வந்து அவன் மீது ஏறி அவனை சுற்றி வந்தது. மேலும் அதனுடைய செய்கையை பார்த்த சங்கர் எல்லோரும் கொஞ்சம் நில்லுங்கள், எங்க வீட்டு தோட்டத்துல “ஏதோ மிருகம்” புகுந்துடுச்சுன்னு நினைக்கிறேன், அநேகமா காட்டுப்பன்னியாகத்தான் இருக்கும். கிழங்கு திங்க வந்திருக்கும், என்றவன், இப்ப நான் மட்டும் வீட்டுக்குள்ளே போய் ஆளுக்கு ஒரு தடி எடுத்து தர்றேன், நீங்க சத்தமில்லாம தோட்ட “கேட்டுகிட்டே” நில்லுங்க. நான் உள்ளே போய் ஒரு சத்தம் கொடுப்பேன். கண்டிப்பா எல்லாம் இந்த “கேட்டு” வழியாகத்தான் ஓடி வரும். அண்ணே வேட்டைக்காரண்னே நீங்கதான் “காட்டுப்பன்னியை” போட்டு தள்ளறதுக்கு சரியான ஆள், என்றவன் சத்தமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து பின்புறமாக சென்று ஆளுக்கு ஒரு தடியை எடுத்து எங்களிடம் கொடுத்தவன் ஜாக்கிரதை என்று உள்ளே போனான்.
நாங்கள் வேட்டைக்காரன் “மணி அண்ணன்” இருந்த தைரியத்தில் அவர் பின் தடியுடன் தயாராக நின்றோம். உள்ளிருந்து “உர்றே” என்ற ஒரு சத்தமிட திமு…திமு வென சத்தம் திடீரென்று எங்களை இடித்து தள்ளிவிட்டு ஏதோ ஓட, நாங்களும் “பன்னிதான்” எங்களை தள்ளிவிட்டு ஓடுகிறதோ என பயந்து பார்க்க வேட்டைக்காரன் மணி அண்ணன் தலைதெறிக்க ஓடிக் கொண்டிருக்க அவருக்கு எதிர் திசையில் “காட்டுப்பன்னிகள்” தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தன.
தடியுடன் நாங்கள் திகைத்து நின்றுகொண்டிருந்தோம்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (11-Jun-19, 11:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 353

மேலே