வாழ்ந்து காட்டு
நான் புத்தகங்களை வாசிப்பதில் என் நேரங்களைக் கழிக்கிறேன் என்றேன்.
அப்படியெனில் வடிகட்டின சோம்பேறி நீ என்று சொன்னான்.
யார் சொன்னது நான் சோம்பேறி என்று,
நான் என் அறிவுப்பசியைத் தீர்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ளேன் என்றேன்.
தின்றை ஜீரணிக்க முடியாதவனுக்கு எதற்கடா அறிவு என்றான்.
அறிவை வளர்ப்பதால் ஞானம் வளருமென்றேன்.
ஞானம் வளர்ந்தால் என்ன பயன் என்றான்.
ஞானத்தால் துன்பம் இன்றி இன்பமாய் இறைவனைப் பற்றலாமென்றேன்.
கேட்டவன் நெஞ்சமதிர சிரித்தான்.
ஏனிந்த சிரிப்பென்றேன்.
அறிவையும், ஞானத்தையும் இளமையிலேயே நாடும் உன் அறியாமை எண்ணி சிரித்தேன் என்றான்.
ஏதப்பா? என் அறியாமையோ, கொஞ்சம் விளக்கிக் கூறப்பா என்றேன்.
நீ பெற்ற அறிவால் யாருக்கு ஏது பயனென்றான்.
அதோடல்லாமல் பெற்றெடுத்த தாய், தந்தையரை சிரமம் இன்றி வாழ செய்ததோ என்றான்.
இல்லை. பெற்றோர் உழைப்பிலே தான் வாழ்கிறேன், என்றேன் தயங்கி தயங்கி.
உன்னை உன்னாலேயே காப்பாற்ற முடியாத ஞானம் உனக்கெதுக்கப்பா?
பிரயோஜனம் இல்லாத வாழ்வும் வாழ்வா?
உழைப்பைவிட வேறு உயர்ந்த ஞானம் உண்டா?
அடிமுட்டாளே! சோம்பிக் கிடந்தது, போதும்.
உன்னை வென்று உன் உன்னத உழைப்பால் வாழ்ந்து காட்டு.