தேர்ந்தொழுகு சீலர் சிறந்தோர் எவரினும் ஓர்ந்தடங்கினார் மேல் உணர் - மேன்மை, தருமதீபிகை 293

நேரிசை வெண்பா

உற்ற படைப்பில் உயர்ந்ததுமக் கட்பிறப்பே;
மற்றதனுள் கற்றவரே மாண்புயர்ந்தோர்; - முற்றவே
தேர்ந்தொழுகு சீலர் சிறந்தோர் எவரினும்
ஓர்ந்தடங்கி னார்மேல் உணர். 293

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலக சிருட்டியில் மனிதப் பிறப்பு உயர்ந்தது; அம் மனிதருள் கற்றவர் சிறந்தவர்; அக்கல்விமான்களிலும் சீலமுள்ளவர் மேலானவர்; அவர் எல்லாரினும் மனம் அடங்கிய ஞானிகளே பெரியவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மிக்க பகுத்தறிவு மக்களிடம் அமைந்திருத்தலால் சீவ கோடிகளுள் அவர் சிறந்து நிற்கின்றார். அங்ஙனம் சிறந்த பிறப்பினராய் வந்துள்ள மனிதர் குழுவில் கல்வியறிவு பெற்றவர் உயர்ந்து விளங்குகின்றார்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ(டு) ஏனை யவர். 410 கல்லாமை

கற்றவருக்கும் கல்லாதவர்க்கும் உள்ள வேற்றுமையை வள்ளுவர் இப்படி அளந்து காட்டியிருக்கிறார். உருவத்தால் ஒத்த பிறப்பினராயினும் உணர்வினால் தம்முள் அவர் ஒவ்வார் என்பதை இவ்வாறு விளக்கியருளினார்.

மிருகங்களினும் மனிதர் எவ்வளவு உயர்ந்துள்ளாரோ, அவ்வளவு கல்லாதவரினும் கற்றவர் உயர்ந்திருக்கின்றார், உயர்வு தாழ்வுகளுக்கு உற்ற காரணத்தை ஊன்றி நோக்கும்படி இது உணர்த்தியுள்ளது. கல்வியால் அறிவு வளர்ந்து ஒளி பெறுகின்றது; அதனால் மனிதன் உயர்ந்து மகிமையுறுகின்றான்.

கற்றவரே உயர்ந்தோர் என்றதில் ஏகாரம் மற்றவரது தாழ்வு நிலையை வெளிப்படுத்தி வீழ்வினை விளக்கியது.

அரிய பிறவியும் உரிய கல்வி இன்மையால் சிறுமை அடைய நேர்ந்தது; அதனைப் பருவம் தவறாமல் மருவிப் பெருமை பெறவேண்டும்.

சிறந்த மனிதனாய்ப் பிறந்து உயர்ந்த கல்விமான் ஆயினும் ஒழுக்கம் இலனாயின், அவன் விழுப்பம் உறான்; ஆகவே ஒழுக்க சீலமுடையவர் கற்றவரினும் மேலானவராய் மேன்மை பெறலாயினர். ஒழுக்கம் உணர்வுக்கு ஒளியாய் உய்தி புரிகின்றது.

‘முற்றவே தேர்ந்தொழுகு சீலர்’ என்றது தாம் கற்ற கல்வியின் பயனை நன்கு ஆராய்ந்தறிந்து நெறி வழுவாமல் ஒழுகும் அமைதியாளர் என அவரது தகைமை தெரிய வந்தது.

விழிக்கு ஒளி போல் கல்விக்கு ஒழுக்கம் எழில் செய்துள்ளமையால் அதன் விழுமிய நிலைமையும் அதனையுடையவரது பெருமையும் எளிது தெளிவாம். சீலமற்ற கல்வி ஒளியற்ற விழி போல் பழியுற்று உழலும்,

ஞானிகளை ஓர்ந்து அடங்கினார் என்றது. 'அறிவோர்க்கு அழகு கற்றுணர்ந்து அடங்கல்' என்றதனால் அறிவின் படிமுறைகளையும் பயன் நிலைகளையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

ஞானம் என்பது உண்மையை உணர்தல். நித்திய அநித்தியங்களை அறிந்து, ஆத்தும தத்துவங்களைத் தெளிந்து, பரமுத்தி நிலையை அடைய உரியவர் தத்துவ ஞானிகள் என நின்றார்.

இந்த ஞானம் எளிதில் அமையாது. இனிமேல் இவனுக்குப் பிறவி இல்லை என்னும்படி முடிந்த சன்மத்தில்தான் ஒருவனுக்கு ஞானம் உண்டாகும்.

அறுசீர் விருத்தம்
(காய் 4 / மா தேமா)

இனிப்பிறவா முடிவான பிறப்பிலே மெய்ஞ்ஞானம்
..எளிதில் உண்டாம்;
பனிச்சுடர்வெண் நித்திலங்கள் உத்தமமாம் மூங்கிலல்லால்
..படுவ துண்டோ?
செனித்தவரின் மேலோராய் நல்லோராய் மித்திரராய்த்
..தெளிந்தோ ராகி
அனித்தமறு முத்தராய் ஞானிகளாம் குணமெல்லாம்
அவரைச் சேரும். - ஞான வாசிட்டம்

நல்ல சாதி மூங்கில்களில் முத்துக்கள் தோன்றுதல் போல் சித்த சுத்தியுடைய உத்தம சீலரிடமே ஞானம் உதயம் ஆகின்றது என்றயிதனால் அதன் அருமை புலனாம். கோடி மூங்கில்களைக் கூர்ந்து நோக்கினும் ஒரு முத்துக் காண்டல் அரிதாம். முத்து உடையது எத்தனையோ கோடிகளுள் ஒன்று அரிதாக அமைகின்றது. அவ்வாறே சீவ கோடிகளுள் ஞானமுடையாரும் அரிதாய் அமைகின்றனர்.

'திரிவித உலகத்து அரிது ஒரு ஞானி’ என்றதனால் அவரது அரிய காட்சியும் பெரிய மாட்சியும் அறியலாகும்.

இத்தகைய ஞானிகள் மனிதப் பிறவியின் புனிதப் பேறாய் வருதலால் எவரினும் மேல் என அவர் ஏத்த நின்றார்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

மக்கள் யாக்கையில் பிறத்தலே அரிது;மற் றதிலும்
துக்க கூன்குரு(டு) ஊமையைத் துறத்தலும் அரிது;
நற்கு லத்திடை வருதலும் அரிது;ஞா னத்தால்
முக்கண் ஈசனுக்(கு) ஆட்படல் முற்றிலும் அரிதே.

அரிய மக்கட் பிறப்பை அடையினும், அது வழுவின்றி வாய்ந்து, ஞானம் தோய்ந்து முழுமுதலைப் பெறுதல் மிகவும் அரிதென்னும் இதனால் பிறவிப் பேற்றின் நிலைமை புலனாம்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

புன்மரம் நெளிபுழுப் புள்வி லங்கெனும்
பன்மைய துயர்செயும் பவங்கள் தப்பியே
வன்மைகொள் நிலமிசை மக்கள் ஆகுதல்
நன்மைகொள் உயிர்க்கலால் அரிது நந்தியே. - பிரபுலிங்க லீலை

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(புளிமாங்காய் தேமா புளிமாங்காய் தேமா / புளிமாங்காய் தேமா புளிமா)

அரிதாம்பி றப்புள் உயர்மானி டத்தின்
..அடைவுற்று வைகல், அதனின்
அரிதாகும் நல்ல குலனிற்பி றத்தல்,
..அறிவாளர் ஆதல் அதனின்
அரிதாகும்; வேத முதலாய்ந்து முக்கண்
..அமலற்க லத்தல் அதனின்
அரிதாம்,உ யர்ந்த குலனுற்றும் வீணில்
..அழிவார்இ தென்கொல் அறிவே! - தணிகைப் புராணம்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா விளம் மா விளம் / மா விளம் விளம்)

உற்ற யோனிகள் தம்மில் உற்பவி
..யாமல் மானுட உற்பவம்
பெற்று வாழுதல் அரிது; மற்றது
..பெறினும் மாயைசெய் பெருமயக்(கு)
அற்ற ஞானிக ளாய்வி ளங்குதல்
..அரிது வீடுறும் அறிவுபின்
பற்று மாறரி திங்கு னக்கிவை
..பண்பி னோடுப லித்தவே. 6

- சஞ்சயன் தூதுச் சருக்கம், இரண்டாம் பாகம், வில்லி பாரதம்

கட்டளைக் கலித்துறை

அரிதே மனுடப் பிறப்பின ராய்வரல், அங்கதினும்
அரிதே பலகலை கற்றவர் ஆதல், அதனினுமற்(று)
அரிதே கவிகள் அமைப்பவர் ஆதல், அதனினுமற்(று)
அரிதே பலநூல் செயவல்லர் ஆதல் அவனியிலே. - அக்கினி புராணம்

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

உயர்குடி நனியுள் தோன்றல்;
..ஊனமில் யாக்கை ஆதல்:
மயர்வறு கல்வி கேள்வித்
..தன்மையால் வல்லர் ஆதல்:
பெரிதுணர் வறிவே யாதல்;
..பேரறம் கோடல் என்றாங்(கு)
அரிதிவை பெறுதல் ஏடா
..பெற்றவர் மக்கள் என்பார். - வளையாபதி

நிலைமண்டில ஆசிரியப்பா

அரியது கேட்கின் வரிவடி வேலோய்!
அரிதரிது மானிடர் ஆதல் அரிது:
மானிட ராக மருவி வந்தாலும்
மூங்கையும் செவிடும் கூனும் குருடும்
பேடும் நீங்கிப் பிறத்தலும் அரிதே;
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிதே;
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்,
தானமும் தவமும் தரித்தலும் அரிதே;
தானமும் தவமும் தரித்தார்க்(கு) அல்லது
வானவர் நாடு வழிதிற வாதே. – ஒளவையார்

மக்கட்பிறப்பின் அருமையையும் அதன் படியேற்றங்களையும் குறித்து நூல்கள் இவ்வாறு உரைத்திருக்கின்றன. உரைகளின் கருத்துக்களை ஊன்றி நோக்கி உயர் நலங்களை உணர்ந்து கொள்க. மனிதப் பிறவி, கல்வி அறிவு, சீலம், ஞானம் என்னும் இவை முறையே ஒன்றினும் ஒன்று உயர்ந்ததாய் ஒளி மிகுந்துள்ளது.

இவ்வுண்மையை உணர்ந்து உறுதிநலம் பெறுக என்றும், நல்ல பிறப்பை அடைந்துள்ள நீ சிறந்த கல்வி கற்று, உயர்ந்த ஒழுக்கமுற்று, இயைந்த இதங்களைச் செய்து மேலான ஞான சீலனாய் மேன்மையுற வேண்டும் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jun-19, 3:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 116

மேலே