பெரியார்
இந்தியாவின்
மிகப்பெரிய ஆறு
அது யாரு
அவர்தான்
பெரியாரு
இவன்
தண்ணீர் நிறைந்த
நாம் அறிந்த
எதையும்
பகுத்து அறிந்த
ஆறு
இவன்
பகுத்தறிவுப் பகலவன்
அறியாமை இருளில் இருந்த
பெண்டீர்க்குத் தன் ஒலி மூலம்
ஒளி கொடுத்தப் பகல் இவன்
இவன் அணிந்த
கருப்பு ஆடை
வெட்டியது
பெண்ணியம் அழித்தக்
கருப்பு ஆட்டை
இவன்
அறியாமையில் இருந்தோர்க்கு
அரியும் இல்லை
ஆமை புகுந்தால்
ஆபத்தும் இல்லை என்றவன்
இவன் சமூகத்தை
மாற்றப்பிறந்த ஈ வே ரா
இன்று
இவன் இருந்திருந்தால்
மூடப் பேயால் மக்கள் நோகுவாரா?
ஜாதிப் பேயால் மக்கள் சாகுவார ?
இவன் ஈரோட்டில் பிறந்த சேகுவேரா
இவன்
சாமி இல்லை
என்று முழங்கிய ராமசாமி
இவன் பிறந்தது ஈரோட்டில்
இவன் கொள்கை கண்டு
பயந்து பறந்தது
நாட்டை நாசமாக்கிய
ஈ ரோட்டில்
இவனின்
செந் நா உருவாக்கிய
சொற்பொழிவு
அண்ணா
இவன்
கடவுளைக் கல் என்றான்
கடமையைக் கல் என்றான்
மடமையை வெல் என்றான்
நம்பிக்கையே வேல் என்றான்
இவன்
கந்தை சமூகத்தை
தன் சொல் எனும் நூல் கொண்டு தைத்த தந்தை
தான் கண்ணாடி அணிந்து
மக்களுக்கு பார்வை அளித்தவன்
ஏற்றத் தாழ்வினை
பாரினில் அழித்தவன்
இவன்
முகத்தில் தாடி வைத்தான்
பெண்ணடிமை செய்வோரின்
முதுகில் தடி வைத்தான்
சமூகம்
பகுத்தறிவுப்
பகலவன் ஒளியை வாங்கட்டும்
வன்கொடுமை தூங்கட்டும்
பெண்கொடுமை நீங்கட்டும்
பெரியாரின் புகழ் ஓங்கட்டும்