வாஷிங் மெஷின்

அப்பா... என்னை தூக்கிப்பியா

ஓ..அதுக்கென்ன செல்லம். தோள் மேல தூக்கி வச்சிண்டு பீச் முழுக்க சுத்தலாம்.

மனதில் அவளை தூக்கிக்கொண்டு சுற்றாத இடமே இல்லை.

ஒருநாள் மாலையில் வீடியோ கால் மூலம் பேசலாம் என்று முடிவு செய்தபின் அந்த நாளும் வந்தது.

அவள் வந்தபோது முதலிலேயே தெரிந்து விட்டது தூக்கி சுமக்கும் குழந்தை அல்ல.

கண்ணு....

என்னப்பா?


உன்னை என்னால் தூக்க முடியாதுடி. அப்படி செஞ்சா பொத்து னு விழுவேன்.

வேண்டாம்பா...உனக்கு எந்த கஷ்டமும் கூடாது.

அப்படி என்ன கேட்டு விட்டாள்? இந்த சினிமாவில் எப்படியோ தூக்கி விடுகிறார்கள்...வடிவேலுவை கூட ஒரு பெண் தட்டாமாலையாகி போட்டு சுற்றும் காட்சி வந்தது.

எப்படியும் மகளை கையிலாவது வாரி தூக்கி கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

நான் அத்தனை பலசாலி அல்ல. புத்தகத்தை தவிர வேறு எதுவும் தூக்கியும் பழக்கம் இல்லை.

கிரைண்டர் கல், பத்து கிலோ அரிசி ரெண்டு வாளி தண்ணீர். இவ்வளவுதான் அதிகபட்சமாக இயங்கி இருக்கிறேன்.

வாசலில் இருந்து சிலிண்டர் தூக்கி வருவேன். இரண்டு கையாலும் பற்றிக்கொண்டு கால்களுக்கு நடுவில் அரையடி உயரத்துக்கு தூக்கி வைத்து கொள்வேன்.

பின் ஒட்டமா நடையா என்று தெரியாமல் விந்தி விந்தி வீட்டுக்குள் வரும்போது ரோஸி வள் வள்ளென்று குலைக்க ஆரம்பித்து விடுவாள்.

தள்ளிக்கோடி தள்ளிக்கோடி என்று கத்த இன்னும் உற்சாகமாய் கால்களுக்கு இடையில் ஓடி வர நான் கீழே வைத்து விடுவேன். மூச்சும் வியர்வையுமாய் ஃபேனுக்கு அடியில் உக்காரும் போது அம்மா சொல்வாள்...

"வாசலில் யாராச்சும் ஆம்பிளை போனா கூப்பிட வேண்டியதுதானே". கடங்காரா...

அப்பா தூக்கிக்கோ...

இந்த குரல் காதில் விழ விழ பயிற்சியால் இந்த பிரச்னையை சரி செய்து விடலாம். அவளை நேரில் சந்திக்க இன்னும் கூட நாள் நிறையவே இருக்கிறது.

முதலில் காலி சிலிண்டரை ஒற்றை கையில் தூக்கியவாறு வாசலுக்கும் கொல்லைக்கும் போய் வந்தேன்.

அம்மாவும் தம்பியும் மௌனமாக பார்த்து கொண்டே இருந்தனர். அவர்களுக்கு ஓரளவு அல்ல நன்றாகவே என்னை யூகித்து வைத்திருந்தனர். காது பட அமாவாசையா இப்போ என்பார்கள்.

விட்டு தள்ள வேண்டும். பயிற்சி மட்டும்.

மாடியில் உடற்பயிற்சி கருவிகள் சில உண்டு. அந்த காலத்தில் வாங்கியது. தொண்டைமான் கொட்டில் போல் மாசு மருவற்று இருக்கும். வாங்கியதோடு அவ்வளவுதான்.

ரெண்டு தோசையை தின்னுட்டு இந்த வெயிட் தூக்கினா கீழ்ப்பக்கம் லேசா ஒரு பக்கம் இறங்கிடும்டா என்று காமாட்சி ஒரு முறை கீழ்ப்பார்வையில் சொன்ன போது பயந்து அப்படியே விட்டதுதான்.

இப்போது நான்கு தோசையாவது சாப்பிடுகிறேன். ரோசிக்கு முட்டை வாங்கி நானும் ஒன்றை சாப்பிட்டு விடுவேன்.

ஆசையோடு அந்த டம்பில்ஸ் எடுத்து மெல்ல அசைக்க ஆரம்பித்தேன்.

பெண்கள் இப்படி கனக்க மாட்டார்கள் என்று ஒரு வாட்சப் வந்தது.

யார் எப்போது இப்படி அனுப்பினார்கள் என்று நீங்கள் கேட்க மாட்டிர்கள் என்று தெரியும். கதைதானே இது என்று விரைவாக சென்று விடுவீர்கள். நல்லது.

கனக்க மாட்டார்கள்தான். அதற்காக...

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கொஞ்சம் வெகுளியான நான் சுலோசனாவிடம் கூட கேட்டே விட்டேன்.
"டீ... ஒரு தடவை உன்னை ரெண்டு கையிலும் தூக்கி பாக்கட்டுமாடி"

நீ கீழ போட்டுடுவ போடா என்றதுடன் அவள் என் கையை லேசாய் முறுக்கியதும் தெரிந்து கொண்டேன்...பெண்கள் கனப்பார்கள். கைவலி ராத்திரி வரையில்
இருந்தது. பாவம் ரங்கராஜன்...

கொஞ்சம் சத்தான உணவை கூட்டி எடுக்க வேண்டும் உடம்பை பருமன் ஆக்கி விடலாம். அந்த ஆசையை மனசுக்கு ஊட்ட அர்னால்டு,சில்வெஸ்டர், சில ரெஸ்லிங் வீரர்கள் படங்களை வால் பேப்பர்களாக வைத்தும் கொண்டேன்.

சில பெண்கள் கூட ரெஸ்லிங் வீரங்கனைகளாக இருந்தனர். அந்த படங்களை நான் பார்க்கவே இல்லை என்பதை வேலை மெனக்கிட்டு இங்கே சொல்லவும் வேண்டும்.

சத்தான உணவு...
எப்போதும் உப்புமா தான் என் ஆகாரம். என் பொண்ணு என்னப்பா டிபன் என்று கேட்டு கேட்டு சலித்து இப்போது அவள் என்ன உப்புமா என்று கேட்கிறாள்.

வெயிட் கெயினர் பானம், பாதாம் பருப்பு வகையறா வாங்கி வைத்து கொண்டேன்.
அம்மா தன் பங்குக்கு காலையில் கொண்டை கடலை ஊற வைத்து கொடுத்தாள்.

காலை எழுந்த உடன் காபியும் கொண்டை கடலையும்...உள்ளே தள்ளி விட்டு மாடியில் பயிற்சியை ஆரம்பித்து விடுவேன்.

நாட்கள் போகின்றன. ஒன்றும் தெரியவில்லை மாற்றங்கள். மூச்சு வாங்குவது கொஞ்சம் குறைந்தது போல் இருக்கிறது. காமாட்சி சொன்ன அபாயங்கள் ஒன்றும் நேரவில்லை.

ஒரு நாள் பாதாம் பருப்பு பல்லில் வசமாக சிக்கி விட்டது. வலியும் கூச்சமும் பின்னி விட்டன. அந்த சொத்தைப்பல்லை  மிகுந்த மரியாதை கொடுத்து க்வாரெண்டைன் செய்து மூன்று வருடங்களாக ஒப்பேற்றி வைத்திருந்தேன்.

ராகு கேது பெயர்ச்சியில் ஷெல்வி சொன்னது போலவே பல் பழி வாங்கி விட்டது. ஜோசியத்தில் எனக்கு இதுவெல்லாம் நடக்கும். கல்யாணம் மட்டும் நடக்காது.

வலியில் சற்று வாயை பிளந்து வைத்துக்கொண்டு ஏர் ரோடேஷன் செய்ய வலி குறைந்து திடுமென கூடி பின் பம்மி பின் எகிறி...விளையாடியது.


அம்மா நாமக்கட்டியை உரசி கன்னத்தில் பத்து போட்டு விட்டாள். அப்பம் மாறி வீங்கிருக்கு பொழச்சு கிடந்தா பவானி மாமியிடம் யானைப்பல் வாங்கி உரசி போடலாம் என்றாள்.

டீவி பார்த்து கொண்டிருந்தேன்.

வலி தக தகவென மின்னியும் மறைந்தும் ஒலித்து கொண்டே இருந்தது.

அப்போது ஓடிய ஒரு பாடலில்தான் அவளை பார்த்தேன்.

உடனே ஒரு ஸ்க்ரீன்ஷாட் எடுத்து காமாட்சிக்கு அனுப்பி வைத்தேன்.

அவன் வாட்ஸாப்பில்தான் இருந்தான்.

யாருடா இவ

சமந்தா...நடிகை.

செமயா இருக்கா?

நாக சைதன்யாவும்?

யாரு அவன்?

அவ புருஷன்...

அட.. .......ளி அவளுக்கும் ஆயிடுச்சா...

போய் தூங்கு.

எங்க தூங்கறது...பல் வலி.

சரி நாளைக்கு சாட் பண்ணு.

டேய் ஒரு நிமிசம்... அவ நடிச்ச படம்...

அவன் போய் விட்டான்.

சரி இரவு நெட்டில் குடைவோம் என்று முடிவு செய்து மொபைலை அணைத்துவிட்டு பின்பக்கம் சென்றேன்.

இருள்.

குளிர்ந்த காற்று. இன்னும் குளிருமோ என்று நினைக்க இன்னும் குளிர்ந்தது.

வாஷிங் மெஷினை தாண்டி ஒரு முற்றம் தாண்டி போனால்தான் பாத்ரூம் வரும்.


திரும்பி வரும்போது மூடி வைத்திருந்த வாஷிங் மிஷின் ஹா வென திறந்திருந்தது.

இருளில் அந்த குரல் தெள்ளத்தெளிவாய்
எனக்கு மட்டும் கேட்டது

உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா?


====================_________===========

எழுதியவர் : ஸ்பரிசன் (22-Jun-19, 3:01 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 178

மேலே