அறிவு கடவுள் நான்
மனிதனாகிய நான்...
பேரண்டத்தை படைத்து
தன்னையே செதுக்கிக் கொண்டவன்!
பாத ஈர்ப்பு விசையினால்
புவியை நிதானித்து சுழல செய்கிறவன்!
கண்ணசைவினால்
சூரிய சந்திரனை வடித்து ஒளிர்கிறவன்!
உமிழ் நீரால் கடல் செய்தவனுக்கு
தாகம் தணிக்க தண்ணீர் இல்லையா?
இயற்கையே...
பிதற்றுவதை நிறுத்து!
எனதாக்கத்தில் தொழிலாளி மட்டுமே நீ
அதிரவோ ஆர்ப்பரிக்கவோ தகிக்கவோ
பணிக்கப் படவில்லை நீ!
சாபமா?! எனக்கா?!
பனித்துளிகளை உறிஞ்சிவிட
சிலந்தி வலைகளோடும்
புல்வெளிகளோடும்
இரவு கழிக்கக் கிடப்பேனா?!
கீழ்மை புத்தியில்
சிசுக் குடத்தின் நீரையும் அருந்துவேனா?!
சேவக இயற்கையே...
உன் புலம்பல்கள்
இந்த மண்மேட்டின் எல்லை தாண்டாது
கேட்டுக் கொள்!
எனது நாவின் நீளம்
அடியை குடைவதுப் போல்
அறிவின் உச்சம்
அண்டம் வரை துழாவிடும்!
விண்மீன்களின் இடையில்
தவழும் மேகங்களில்
நீரை தேக்கியிருக்கிறேன்!
கருந்துளைக்கருகில்
தண்ணீரின் ஆதாரங்களை
குவித்திருக்கிறேன்!
யாசகமென்பது அற்பர்களுக்கானது...
நான்
தேவைகள் உதிக்கும் போது
மதிக்குடையை எல்லையற்று விரிக்கிறவன்..
உயிர்கள் வாழத் தகுதியறும்போது
பூமியை உதைத்துருட்டி
சூரியனில் பொசிக்கி விட்டு
எனது அறிவுப் பேட்டையில்
வேறொரு அடிமை செய்துக் கொள்வேன்
ஏனென்றால்
சுயம் மட்டுமே சுவாசிக்கும்
ஓர் அறிவுக் கடவுள் நான்!!!
--இதயசகி