கண்ணீரும் கார்முகிலும்
காதல் மயக்கம்
கல்யாண கிறக்கமானதால்,
காணாது காத்திருக்கும் - என்
கண் அவரை கண்டிடவும்,
கணவராய் கைக்கோர்த்திடவும்,
கண் மலர்ந்து காத்திருந்தேன் !
காலம் கரைந்தோட ,
கணநேரம் கடினமாகி ,
கடிகாரமும் முள்ளுடைந்து ,
காலிழுத்து நடந்திட ,
கன்னியுள்ளம் உடைந்து
கண்ணீர் வழிந்தோடியது !
காற்றோடு துள்ளித்திரிந்த
கண்ணியவள் கண்ணீர்க்கண்டு ,
கையளவு மேகமும் கனமாகி
கார்முகிலாகி , கடினம்தாளாது ,
கவலை மேலோங்க
கண்ணீர் மழையாய் பொழிந்தது !
கவியாய் பொழியும் மழை இன்று ,
கவலையாய் பொழிவதைக்கண்டு ,
கவியவளும் கண்ணீர் துடைத்து
கைநீட்ட , தொட்ட மறுகணமே
கரைந்து களிப்பாய்,
கண்ணீர் கவியாய் மாறி நனைத்தது!
காற்றோடு நினைவும் ,
கவியோடு கனிவும் ,
கார்முகிலோடு நட்பும் -அவள்
கார்குழல் தீண்ட ,
கவலை அலை , அமைதல் கொண்டது !