ஆசை வண்டி

==============
குப்பை வண்டிக்காரனுக்கும்
பால் வண்டிக்காரனுக்கும்
தண்ணி வண்டிக்காரனுக்கும்
காய்கறி வண்டிக்காரனுக்கும்
மீன் வண்டிக்காரனுக்குமெனக்
காத்திருந்துக் காத்திருந்து
வாலிப வயதைக் கடந்த
ஒரு ஓட்டை வண்டிக்காரிக்கு
வாழ்க்கை வண்டியோட ஒரு
வண்டிக்காரன் அமைகையில்,
குழந்தைகளை தள்ளு வண்டிகளிலும்
நவீன சந்தைகளில் பொருட்களை
கொள்வனவு வண்டிகளிலும்
கொடுப்பனவுகளை நுனிநாக்கு
ஆங்கில வண்டிகளிலும் தள்ளிக்கொண்டு
சொகுசு வண்டிகளில் பயணித்துக்
குடும்ப வண்டியை ஒட்டவே
மாட்டுவண்டிக்காரன் மனைவியின்
மனசுக்குள்ளும் ஓடுகிறது
நாகரீகத்தின் ஆசை வண்டி.
==
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (4-Jul-19, 2:40 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 108

மேலே