குயிலே உன் இணையாய் வரவா
ஒற்றைக் குயிலே தன்னந்தனிமையிலே....
எதையோ தேடி நீ இசைத்திடும் ராகம் தெவிட்டாது திணறாது பொழிந்திடும் கானம்
எடுத்தியம்பிடும் எமக்கு ஆயிரம் சோகம்....
பிணவாடை நாடிடும் கழுகுகளிடையே
மௌனம் கசிந்திடும் உன் மனத்தின் கேவல்
இடைபுகுந்து எம் செவிப்பறை வருடும்
இதயம் கனத்து என்னுயிரை வறட்டும்
ஓசைகள் திரைந்து நீ மீட்டும் முகாரியில்
வலிகள் வலுத்து இழைத்திடும் அகோரியை
நிசப்தம் நிறைந்த நெஞ்ச அறைகளும்
சப்த முழக்கத்துடன் திறந்திடும் வாயில்களை
தினம் தினம் தொடரும் உயிர்வலி கீதம்
என்று தணியுமோ உன் உணர்வழி தாகம்
ஒற்றைக் குரலாய் எங்கும் ஒலிக்குது
உற்ற உறவாய் மனம் ஏனோ தவிக்குது....
மாறுவுரு கொண்டு உன் இணையாய் நான் வரவா.....
மதிபொங்கும் ஒளியிடையே மையலில் குலவிடவா....
மறுதலிக்காது உன் சம்மதம் மொழிந்திடு
மனம் வெம்பிடும் எமக்கொரு மாறுதல் தந்திடு....
கவிதாயினி அமுதா பொற்கொடி
(தினம் தினம் நான் விடியலில் கேட்கும் ஒற்றைக் குயிலின் இன்னிசை தாக்கத்தில்......)