ஹைக்கூ எழுதலாம் வாங்க


தமிழ்த்தோட்டத்தில் ( www.tamilthottam.in )தளிரன்ன என்பவரின் ஹைக்கூ இது:

காற்றாடிக்கும் சற்று
ஓய்வு!
மின்தடை!

ஒரு ஹைக்கூவை எழுதிவிட்டு மகிழ்ந்துவிடாதீர்கள். அந்த ஹைக்கூவையே ஐந்தாறு முறை திரும்பத்திரும்ப படியுங்கள். எழுதிய ஹைக்கூவில் எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்று தோன்றினால் திருத்தம் செய்யுங்கள்.

காற்றாடிக்கும் சற்று
ஓய்வு!
மின்தடை!

இப்படி இருக்கும் ஹைக்கூவில் சற்று திருத்தம் செய்கிறேன் பாருங்கள்:

விசிறி
ஓய்வு எடுக்கிறது!
மின்தடை.

என்று இருந்தால் நன்றாக இருக்கும்; ஹைக்கூவாக இருக்கும். சரி... இப்போது இரண்டு ஹைக்கூவையும் சுருக்கமாக விமரிசனம் செய்கிறேன் பாருங்கள்... உங்களுக்குத் தெளிவு உண்டாகும்.

காற்றாடிக்கும் சற்று
ஓய்வு!

என்ற முதல் இரண்டு அடிகளை மட்டும் படித்து நிறுத்துகிறேன். ஹைக்கூ வாசிப்பு முறைபடி மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து முடிக்கிறேன். எளிமையாக அடுத்த அடி என்னவாக இருக்கும் என என்னால் ஊகிக்க முடிகிறது. ஒன்று பொத்தான் அணைக்கப்பட்டிருக்கலாம். அல்லது மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டு மூன்றாவது அடியைப் படிக்கிறேன். எதிர்பார்த்தது போலவே மின்தடை. எனவே எந்த உணர்ச்சியையும் என்னுள் ஏற்படுத்தவில்லை. உணர்ச்சியை ஏற்படுத்தினால் மட்டுமே அது ஹைக்கூ.

சரி திருத்தம் செய்த ஹைக்கூவைப் பார்க்கலாம்.

விசிறி
ஓய்வு எடுக்கிறது!

இரண்டு முறை படித்துவிட்டேன். விசிறி ஏன் ஓய்வு எடுக்கிறது. அது பனைமட்டையாலோ அல்லது வேறு எந்த பொருளாலோ செய்யப்பட்ட விசிறியா? அல்லது மின் விசிறியா? என்ற கேள்வி எழுகிறது.
சரி இப்படியும் யோசிக்கலாம்.
விசிறி ஏன் ஓய்வு எடுக்கிறது?. விசிறியைக் கொண்டு தாத்தாவுக்கு விசிறிக்கொண்டிருந்தவள் பாட்டி. இப்போது ஓய்வு எடுக்கிறது என்றால் என்ன அர்த்தம். ஒன்று விசிறிக்கொண்டிருந்த பாட்டி இறந்துபோனாலா? அல்லது தாத்தா இறந்துபோனாரா? என்ற வருத்தத்தோடு மூன்றாவது அடியைப் படிக்கிறேன். அப்பாடா என்று பெருமூச்சி விட்டுக்கொள்கிறேன். காரணம் மின்தடைதான் வேறொன்றுமில்லை என்று.

அப்பாடா என்று உங்களுக்குச் சலிப்பு ஏற்படுகிறதா? எனக்கு அப்படியொன்றும் ஏற்படவில்லை. காரணம்: இதை விளக்கியதால் எனக்கு ஒரு ஹைக்கூ கிடைத்தது. இப்படி:

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
தாத்தா மரணம்

சரி நானும் ஹைக்கூ எழுதுகிறேன் என்று சொல்லி,

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
பாட்டி மரணம்

என்று கடைசி அடியை மட்டும் மாற்றி உங்களது ஹைக்கூ என்று சொல்லிக்கொள்ளாதீர்கள். மேற்கண்ட ஹைக்கூவில் தாத்தா என்பவர் குறியீடு. அந்த தாத்தா குறியீடாக விரிந்தால் அது பாட்டி, அம்மா, அப்பா, உறவினர்… என்று யாரையும் குறிக்கும்.

சரி...

விசிறிக்கு
நிரந்தர ஓய்வு!
தாத்தா மரணம்

இந்த ஹைக்கூவை விமரிசித்து யாராவது ஒரு புது ஹைக்கூ எழுதுங்களேன். நானும் மகிழ்வேன்.

- ம. ரமேஷ்

எழுதியவர் : ம. ரமேஷ் (7-Sep-11, 10:16 am)
சேர்த்தது : ம. ரமேஷ்
பார்வை : 309

சிறந்த கவிதைகள்

மேலே