உன் உதிரம் சிந்த வேண்டுதல் ஆயினும்

மொழியின் வழியை அறிதல் வேண்டும்
முன்னது எதுவென தெளிதல் வேண்டும்

பன்னெடுங்காலம் பரவிய மொழியை
கண்ணென எண்ணி காத்திடல் வேண்டும்

தன்னலம் சிறக்க தாயான மொழியை
மண்ணதில் வீசி மாய்ப்பது நலமோ

உன் உதிரம் சிந்த வேண்டுதல் ஆயின்
உயிரென மொழியை காப்பது புனிதம்

அறம் பொருள் இன்பம் காட்டிய மொழியை
அணைத்துக் காத்து ஆயுள் கூட்ட வேண்டும்

கூட்டாட்சி தத்துவம் வந்தப் பின் நாட்டில்
மூத்த மொழியெல்லாம் மூர்ச்சையாகிப் போச்சு

இலக்கணம் இலக்கியம் இதயமாம் மொழிக்கு
இயற்றிட சிறந்த இயம்பியோர் வேண்டும்

இன்றைய நிலைக்கண்டு இளகி நாம் நின்றால்
ஈரைந்து நூற்றாண்டுகள் ஆண்டமொழி ஈர்த்தே போகும்

கலப்பின இனங்கள் காலூன்றி வாழும்
காலத்தில் வாழும் நமக்கு துணிவு வேண்டும்

கற்க கற்க இன்பம் கொடுக்கும் தமிழின் தாளை
தலைமேல் வைத்து தரணி புகழ கீதம் பாடுவோம்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (15-Jul-19, 8:48 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 144

மேலே