ஒரு விவசாயியின் விண்ணப்பம்

கஞ்சிக் கலயம் தூக்கி
கழனிக்கு போயிடுவோம்
காடு மேடெல்லாம்
கால்கடுக்க நடந்திடுவோம்

காளமாடு ரெண்டு பூட்டி
காலயில உழுதிடுவோம்
கம்மாய் தண்ணி பாச்சி
(வயக்)காடெல்லாம் விதைச்சிடுவோம்

கண்ணுக்கழகான சிறு நாத்தும்
கட கடன்னு வளத்திடுவோம்
காலம் கூடிவரும் நாளுல
கவனமா பறிச்சு நட்டிடுவோம்

கட்டுனவக கை புடிச்சு
கள பறிச்சு வீசிடுவோம்
கருமேகம் கூடி வர்ற
காட்சியெல்லாம் பாத்திடுவோம்

கடவுளும் கண் தொறக்க
கரம் குவிச்சு வேண்டிடுவோம்
கன மழ பெய்ஞ்சு வர
கம்மாக் கரமேல நின்னுடுவோம்

கருத்தா தண்ணி பாச்சி
கருத நாளும் வளத்திடுவோம்
கருக்கருவா கொண்டு போயி
கருதெல்லாம் அறுத்திடுவோம்

கருதுக்கட்டு தூக்கிட்டு போயி
களத்துமேட்டுல வச்சிடுவோம்
காப்பித் தண்ணிய குடிச்சிகிட்டே
கருதடிச்சு களஞ் சேர்ப்போம்

கடன உடன வாங்கி
காலம் பூரா கஷ்டப்படுவோம்
கருதெல்லாம் விளைஞ்சிருந்தும்
கால் வயிறுதான் நிரப்பிடுவோம்

கண்ணீரோடதான் எங்க வாழ்க்க
கவர்மண்ட்டுக்கிட்ட சொல்லுறதா இல்ல
கடவுளுக்கிட்ட சொல்லுறதா
கலங்கிப் போயித்தான் நிக்கிறோம்

காசு பணம் கேக்கலங்க
கத கேட்ட உங்க கிட்ட - எங்க
கஷ்டம் புரிஞ்சிக்கிடுங்கன்னு
கரம் கூப்பிக் கேட்டுக்கிறோம்.


குறிப்பு :

1. படத்திற்கான ஓவியம் என் மூத்த மகள் நேகா டெபோரா-வினால், அயர்லாந்து தேசிய அளவில் "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவியப் போட்டிக்காக தீட்டப்பட்டு நான்காம் பரிசை வென்ற ஓவியம்.


2. கவிதையின் வரிகளின் முதல் எழுத்து முழுவதும் "க"கர வரிசையில் வரும் படியான முதல் முயற்சி "க"விதையின் முதல் எழுத்துக்கு சிறப்புச் சேர்ப்பதற்காக

எழுதியவர் : தமிழ் மைந்தன் - ரிச்சர்டு (19-Jul-19, 10:18 am)
பார்வை : 61

மேலே