மேல்நிலைக் குரல்

ஜெ,



ஜப்பான் பயண குறிப்புகளை ஆவலுடன் படித்து வருகிறேன். 25 ஆண்டுகளுக்கு முன் 70 நாட்கள் ஜப்பானின் பலவேறு நகரங்களில் பயணித்த நினைவுகளை மீட்டெடுக்க உதவுகின்றன. நன்றி.



கடந்த சில நாட்களாக தங்களது வலை தளத்தில் காட்சியூடகமும் வாசிப்பும் பற்றி ஓர் உரையாடல் நடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக GOT தொடரின் தாக்கம் குறித்து கருத்து கூறப்பட்டது. நுண்னுனர்வு கொண்ட தீவிர வாசிப்புக்கு இத்தகைய காட்சியூடக நிகழ்சிகள் ஒவ்வாதவை என்றும் இவை வெகு ஜன ரசனைக்கானவை என்பதனாலேயே உயர் வாழ்வு மற்றும் கருத்துக்கு தகுதி இழந்தவை போன்ற எண்ணங்களும் பகிரபட்டன.



நான் ஒரு தீவிர இலக்கிய வாசகன். தமிழில் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் கிட்டதட்ட பெரும்பாலான படைப்புகளையும் மற்றும் ஆங்கில, ரஷ்ய, மலையாள இலக்கியத்தில் பெரும் படைப்புகளையும் வாசித்துள்ளேன். அதே போன்று காட்சி ஊடகத்தையும் நேசிப்பவன். GOT இதுவரை பார்க்கவில்லை. நான் கூறவருவது இதுதான். காட்சி ஊடகமும் எழத்துலகம் போன்று பல தர நிலைகளை கொண்டது. அவரவர் ரசனைக்கு ஏற்ப சென்றடையலாம். வெகுஜன ரசனைக்கானதாலேயே நுண்னுனர்வு வாசகனுக்கு அவை ஒதுக்கத்தக்கவை என்பது சரியாகாது. இலக்கிய வாசிப்பிற்கு காட்சியூடகம் எதிரி என்பதும் உண்மையாகாது. அவை வெவ்வேறு தளங்கள். தொழில் நுட்ப வளர்ச்சியின் தாக்கம் காட்சியூடகத்தில் மிக அதிகம்.



இலக்கிய வாசகனுக்கு வெகுஜன காட்சியூடகத்தின் மேல் குறை மதிப்பிடே இருக்கக்கூடும் / வேண்டும் என்பது ஒரு elitist பார்வையாகவே கொள்ளக்கூடும்.





அன்புடன்

பா.ரவிச்சந்திரன்



அன்புள்ள ரவிச்சந்திரன்



ஒரு கோணத்தில் இது ஒரு மேல்நிலை [Elitist ]நோக்குதான். ஆனால் தமிழ்ச்சூழலில் மேல்நிலை நோக்கு போல புரட்சிகரமான, துணிச்சலான, இன்றியமையாத வேறு ஒன்று இல்லை. ஒரு சூழலில் மேல்நிலைநோக்கால் உருவான கருத்துக்கள் ஆட்சி செய்கின்றன என்றால், எளிய மக்களின் கருத்துக்களுக்கும் உணர்வுகளுக்கும் இடமே இல்லை என்றால் மட்டுமே மேல்நிலைநோக்குகளை ஆதிக்கநோக்கம் கொண்டவை ஆகவே எதிர்மறையானவை எனலாம்.



ஆனால் இங்கே இருப்பது அச்சமும் அருவருப்பும் அடையச்செய்யும் கீழ்நிலைநோக்கு. ஒவ்வொன்றும் அதன் கீழ்மட்டத்து அறிவுத்தளத்தால், உணர்வுநிலையால் முடிவுசெய்யப்படுகின்றன. எந்தத்துறையிலும் நிபுணர்களுக்கு இடமில்லை. எவரும் தனித்திறன் என எதையும் வளர்த்துக்கொள்வதில்லை. சொல்லப்போனால் அதற்கு எதிரான உளநிலையே அனைவரையும் ஆள்கிறது. ஒரு சாதாரணத் தொழிற்சூழலில்கூட சற்றே மாறுபட்டு தனக்கென ஒரு பார்வையையும் திறனையும் வளர்த்துக்கொள்பவனை ஒட்டுமொத்தச் சூழலே சேர்ந்து எதிர்ப்பதை, ஏளனம் செய்வதை, தனிமைப்படுத்துவதையே நாம் நம்மைச்சுற்றிப் பார்க்கிறோம்



நம் சூழலில் உள்ள கீழ்நிலைநோக்கின் சரியான பிரதிநிதிகளே தலைமைகொள்கிறார்கள். முன்னுதாரணமாகக் கொண்டாடப்படுகிறார்கள். அவர்களுக்கு அத்தனை உரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்படும் அதேசமயம் தனித்திறன் கொண்டவர்களை நோக்கி “நீ ஒன்றும் எங்களை விட மேல் அல்ல’ ‘உனக்கு எந்த தனியுரிமையும் சலுகையும் அளிக்கமுடியாது’ என்கிறார்கள் .‘திறனற்றோர் திறன்கொண்டோர் அனைவரும் சமம்’ என்றெல்லாம் அசட்டு ஜனநாயகவாதமும் இங்கே பேசப்படுகிறது.



மொத்தச் சமூகமே சேர்ந்து ஒவ்வொருவரையும் பற்றி கீழே இழுக்கும் இன்றைய சூழலில் ஒருவன் தனித்து நிற்க, தனக்கென பார்வைகளை உருவாக்கிக்கொள்ள, திறனாளன் ஆக ஒரே வழி சற்றேனும் மேல்நிலை நோக்கை திரட்டிக்கொள்வது மட்டுமே. இலக்கியத்தில் மட்டுமல்ல அத்தனை துறைகளிலும் எதையேனும் ஆற்றவேண்டுமென்றால் அது ஒன்றே வழி.



ஆகவே தமிழ்ச்சூழலில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டிய குரல் மேல்நிலைநோக்கு கொண்டதுதான். சிற்றிதழ்ச்சூழலின் குரலே அத்தகையதுதான். சிறந்த இலக்கியம், சிறந்த கலை, சிறந்த சிந்தனைக்கான குரல் அது. அதற்கு எதிராக எப்போதும் எழுந்தது போலிஜனநாயகக் குரல். அது முன்பு மக்கள் இலக்கியம் ,மக்கள் கலை ,மக்கள்சிந்தனை என்றது. இன்று கலை இல்லை, இலக்கியம் இல்லை, சிந்தனை என்பதே இல்லை என வாதிடுகிறது



இங்கே ஓர் அன்றாடவேலைத் தளத்தில்கூட சிறந்த வேலையின் குரல் ஒலித்தாகவேண்டும். இல்லையேல் எஞ்சுவது மாபெரும் சராசரி. ஒருவரை ஒருவர் கீழே இருக்கும் பெருந்திரள். நீங்கள் மேல்நிலைக் குரல் என்று சொல்வது இன்றைய சூழலில் மிகமிக அரிதானது. பழிக்கப்படுவது, கேலிசெய்யப்படுவது, புறக்கணிக்கப்படுவது. அதை எழுப்புபவன் ஒரு கலகக் காரன், ஒரு புறனடையாளன். அறுதியாக தோல்வியும் அடைவான். ஆனாலும் அக்குரல் எழுந்தாகவேண்டும்



அவ்வண்ணம் நோக்கினால் இதிலுள்ள மையச்சிக்கல் நம் சொல்தேர்வுதான் எனப் புரியும் elitism – மேல்நிலைவாதம் என்பது வேறு intellectualism அறிவுநிலை நோக்கு என்பது வேறு.மேல்நிலைநோக்கு என்பது ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின், குறிப்பிட்ட சமூகக்குழுவின் நோக்கை மேலானதாக நினைத்து அதை முன்வைப்பது. அதிகாரத்தின் ஆதிக்கத்தின் தரப்பாக ஒலிப்பது. அறிவுவாதம் என்பது அத்தனை வர்க்கங்களின் அத்தனை சமூகங்களின் சிறந்த குரல்களை வரவேற்று தன்னுடையதெனக் கொள்வது. ஆதிக்கத்தை எதிர்க்கும் குரல்களை ஏற்பது



எப்போதுமே அறிவுவாதத்தை எதிர்ப்பவர்கள், சராசரிகளின் நோக்கை அதாவது அறிவு மறுப்பை முன்வைப்பவர்கள் அறிவுவாதத்தை மேல்நிலைவாதம் என்று திரித்து முத்திரைகுத்தி அதன்பின்னரே எதிர்ப்பார்கள். அவர்களுக்குரிய கருவிகளை மார்க்ஸியத்தின் மேலோட்டமான சொற்தளத்திலிருந்து பெற்றுக்கொள்வார்கள். உலகமெங்கும் சீர்மிகு கலைக்கும் இலக்கியத்திற்கும் எதிரி திறனழிக்கப்பட்ட ‘மக்கள் மார்க்சியம்’தான். ஆனால் தன் மெய்யானநிலையில் மார்க்ஸியம் ஓர் அறிவுவாதம். ஓர் மேல்நிலைநோக்கு என்று அதுவும் வசைபாடப்பட்டுள்ளது



சிறந்த உதாரணம் க.நா.சு. அவர் தமிழ்ச்சூழலில் மேலான கலை,. இலக்கியத்திற்காக சலிக்காமல் குரல் எழுப்பியவர். ஆகவே அவரை மேல்நிலைநோக்கு கொண்டவர் என அன்றைய அறிவு எதிர்ப்பாளர்கள் வசைபாடினார்கள். ஆனால் அவர்தான் தமிழின் ஒடுக்கப்பட்ட மக்களின் அழகியலும் வாழ்க்கைமுறையும் இலக்கியத்திற்குள் எழுந்து வரவேண்டும் என சலியாமல் போராடியவர், அவை இலக்கியத்தில் இடம்பெற வழிவகுத்தவர். அனைத்து தளங்களில் இருந்தும் அறிவார்ந்தவற்றை ஏற்றுக்கொண்டவர். அவரை வசைபாடிய ‘மக்கள் மார்க்ஸியர்’ கள் நடுவே இருந்து கு.சின்னப்ப பாரதி போன்ற ஒருவர் எழுந்து வந்தபோது அவரையும் ஏற்றுக்கொண்டு முன்னிறுத்தியவர்.



மேல்நிலைவாதம் போன்ற ஒரு சொல்லை கூரிய நோக்கு இல்லாமல் பிழையாக அறிவு எதிர்ப்புக்கு நாம் கையாளக்கூடும். எப்படி சராசரித்தனம், தேக்கநிலை ஆகியவற்றை ஊக்குவிக்க ஜனநாயகம் என்னும் சொல் கையாளப்படுகிறதோ அப்படி. தமிழ்ச்சூழலில் உண்மையில் பயனுள்ள எதையேனும் செய்பாவர்கள் மக்களின் சராசரித்தன்மைக்கு எதிராகப் போராடுபவர்கள். அவர்களின் தளத்தை விட மேலான ஒன்றை அவர்களுக்கு அளிக்க முயல்பவர்கள். அவர்களிடமிருந்து மிகச்சிறந்த இயல்புகள் வெளிப்பட வேண்டும் என எண்ணுபர்கள். அவர்களை விமர்சிப்பவர்கள். ஆகவே அவர்களால் வசைபாடப்படுபவர்கள்.



மாறாக மேல்நிலைவாதம் போன்ற சொற்களைக் கையாண்டு அறிவு எதிர்ப்பை செய்துகொண்டிருப்பவர்கள், போலி ஜனநாயகம் பேசுபவர்கள். ‘மக்களிடமே எல்லாமே இருக்கு’ என்றும் ‘மக்களுக்கு எல்லாமே தெரியும்’ என்றும் சொல்லிக்கொண்டிருப்பவர்கள் இருவகை. ஒன்று மக்களை ஒரு திரள்சக்தியாக பயன்படுத்திக்கொண்டு அதிகாரத்தை, செல்வத்தை அடையவிரும்பும் அரசியல்வாதிகள். அவர்களே இங்கே மிகுதி. இரண்டு, தாங்களும் அந்த திரளில், சராசரியில் கரைந்து மறைவதை வசதியாக உணர்பவர்கள். அதாவது ஒழுக்குக்கு எதிராக நீந்திச் சென்று தன் ஆளுமையை தானே கண்டடையும் ஆற்றலற்றவர்கள். ஊரோடு ஒத்துவாழ்வதனூடாக அன்றாடத்தில் அமையும் எளிய மனிதர்கள்.



இரண்டும் அல்லாதவனே அறிவியக்கவாதி. அவனுக்குரியது அறிவுவாதமே. அது ஒவ்வொன்றிலும் சிறந்ததே வெளிப்படவேண்டும் என எதிர்பார்க்கும். ஆகவே தரம் என்றும் உச்சம் என்றும் இன்னும் இன்னும் என்றும் மட்டுமே அது சொல்லிக்கொண்டிருக்கும். அதற்குத்தடையான அனைத்தையும் புறக்கணிக்கும்.

.

ஜெ



விவாதத் தொடர்ச்சிக்காக.…

எழுதியவர் : பா.ரவிச்சந்திரன்-----& --------- ஜ (27-Jul-19, 9:21 pm)
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே