எஸ்ராமகிருஷ்ணன் ------- சஞ்சாரம்--நாவல்----------சாகித்ய அக்காதமி விருது -------- 2018---------------------------கடிதங்கள்

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு அவருடைய சஞ்சாரம் என்னும் நாவலுக்காக 2018 ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது
=======================================================================================================



கோயில்பட்டியில் எண்பதுகளில் தேவதச்சனின் நகைக்கடைச் சபையில் இருந்து கிளம்பிய எழுத்தாளர்களின் சிறுகுழு ஒன்று உண்டு. அன்றிருந்த இலக்கியத்தின் எல்லைகளை விரிவாக்கியவர்கள். மொழிபிலும் அமைப்பிலும் புதியவற்றை நிகழ்த்தியவர்கள். கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர் ஆகிய மூவரும் அதில் முதன்மையானவர்கள்.



எஸ்.ராமகிருஷ்ணன் தமிழ்ச்சிறுகதையில் கூரிய யதார்த்தக் கதைகள் வழியாக நுழைந்தார்.பின்னர் மாயயதார்த்தப் புனைவுகளை எழுதினார். மீண்டும் யதார்த்தபாணிக் கதைகளுக்குள் சென்றார். அவருடைய புகழ்மிக்க முன்னோடிகளான கி.ராஜநாராயணன், பூமணி ஆகியோர் எழுதிய அதே நிலத்தையும் மக்களையுமே அவர் எழுதினார். ஆனால் அவர்களின் உள்ளங்களை கட்டமைத்திருக்கும் தொன்மங்களையும் ஆழ்படிமங்களையும் எழுத்திற்குள் கொண்டுவந்தார். அவர்களை அந்த மண்ணில் நிகழ்ந்த நீண்ட தொல்மரபின் ஒரு பகுதியென நிறுத்தி ஆராய்ந்தார். அதனூடாக தமிழ் இலக்கியமரபில் புதிய சாதனைகளைச் செய்தார்



பெரும்பாலான முதன்மைப் படைப்பாளிகளைப்போலவே எஸ்.ராமகிருஷ்ணனின் கதைகள் சிக்கலான ஊடுபாவுகள் கொண்ட அமைப்புக்களுடன் இருந்து பின்னர் மெல்லமெல்ல எளியநேரடி கதைகூறல்கொண்டவையாக மாறி அந்த அனைத்து அகச்சிக்கல்களையும் ஆழத்தில் கொண்டவையாக உருப்பெற்றிருக்கின்றன. அவருடைய நாவல்களும் அவ்வாறே. அவருடைய நாவல்களில் முதன்மையானது நெடுங்குருதி. யாமம் அழகியலொருமை கொண்ட பிறிதொரு படைப்பு

சஞ்சாரம்’ விரிந்த பொட்டல்நிலத்தில் இசையுடன் அலைந்து திரியும் கலைஞர்களைப்பற்றிய நாவல். இந்நிலம் நாதஸ்தவரத்திற்கு மிக உகந்தது. தொலைவிலிருந்து காற்றில் மிதந்து எழும் நாதஸ்வரம் அளிக்கும் உணர்வுகள் முற்றிலும் வேறு. ஆலயக் கல்மண்டபங்களில் ஒலிக்கையில் அதற்கு இருக்கும் மங்கலத்திற்குப் பதிலாக பொட்டலில் அதில் துயரம் ஒன்று குடியேறியிருக்கும். அங்குள்ள வெறுமையின் ஒலியாக அது மாறியிருக்கும்.



நாதஸ்வரத்தின்மேல் பொட்டல்நிலத்து மக்களுக்குப் பெரும் பற்று ஒன்று இருந்திருக்கிறது. காருக்குறிச்சி அருணாச்சலம் இந்நிலத்தின் நாதஸ்வர மரபின் அடையாளமாக இன்று கருதப்படுகிறார். கி.ராஜநாராயணன் நிறையவே எழுதியிருக்கிறார். நினைவுகளாகவும் கதைகளாகவும். கோணங்கி புலிக்குகைநாயனம் போன்ற கதைகளை எழுதியிருக்கிறார். சஞ்சாரம் அந்த வரிசையில் வரும் படைப்பு.



இசை இதன் மையச்சரடு. ஆனால் அந்நிலத்தின் சொல்லப்படாத உணர்வுகள் அனைத்துக்கும் அடையாளமாக நாவல் விரிய விரிய அது உருமாறுகிறது. இசையைக்கொண்டு அந்நிலத்தின் வரண்டவாழ்க்கையின் உள்மோதல்களையும் தனிமையையும் சொல்லிச்செல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்



தமிழில் ஓர் அறிவியக்கம் என்றவகையில் செயல்படுபவர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழகத்தின் தலைசிறந்த மேடைப்பேச்சாளர்களில் ஒருவர். பயணக்கட்டுரை எழுத்தாளர். திரைப்படங்களை அறிமுகம் செய்பவர். நூலறிமுகங்களை விரிவாக நிகழ்த்துபவர். அவருடைய அறிவுலகில் நுழையும் ஒரு வாசகர் சமகால உலகஅறிவுச்செயல்பாட்டின் பல தளங்களை நோக்கி ஆளுமை விரியப்பெறுவார். அவ்வகையில் ஒரு நல்லாசானாக இன்று திகழ்கிறார்



எஸ்.ராமகிருஷ்ணன் அனைத்துவகையிலும் இன்றைய தமிழர்கள் எண்ணிப் பெருமைகொள்ளவேண்டிய ஆளுமை. இந்தக் காலகட்டத்தின் தமிழ் இலக்கிய அழகியலின் முகம் இந்த விருது அவருக்கு தமிழ்வாசகர்கள் அளிப்பதும்கூட.



எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்
===========================================================================================================
கடிதங்கள்
-------------------

இசைக் கலைஞர்களைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நான் இதற்குமுன் வாசித்தது தி.ஜானகிராமனின் “மோகமுள்”மற்றும் யுவனின் “கானல் நதி”.அவையிரண்டும் பாடகர்களின் அக அலைக்கழிப்புகளைப் பற்றியே பிரதானமாகப் பேசுகிறது.ஆனால் எஸ்.ராமகிருஷ்ணனின் “சஞ்சாரம்” நாவல் பெரும்பாலும் நாதஸ்வரக் கலைஞர்களின் புற வாழ்வைப் பற்றிய படைப்பாகவுள்ளது.

பாடகர்களைப் பொருத்தவரை அவர்கள் அநேகமாக சமூகத்தின் உயர்நிலையில் இருப்பார்கள்.மாறாக நாதஸ்வரக் கலைஞர்கள் சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கிறார்கள்.அதனால்,இந்நாதஸ்வரக் கலைஞர்கள் படும் அவமானங்கள் ஏதும் அவர்களுக்கில்லை.இதனையே எஸ்.ரா. முக்கிய பொருளாகக் கொண்டுள்ளார்.

எத்தனை சிறப்பான கலைஞராக இருப்பினும் அவர்கள் கலைக்காக மதிக்கப்படாமல் அவர்களின் சமூகநிலையைக் கொண்டே இழிவுபடுத்தப்படுகிறார்கள்.

இதனை வெவ்வேறு மனிதர்களின் வாழ்வினைக் கூறுவதன் மூலம் நிறுவிக்கொண்டே செல்கிறார்.பார்வையில்லாதிருந்தும் இசையில் மேன்மையுடன் இருப்பதும் நேர்த்தியான உடையுடன் வாசனை திரவியங்களுடன் கலைத் திமிருடன் இருக்கும் ஒருவரும்,ஊனமுற்ற முகமதியராய் இருந்தாலும் நாதஸ்வர இசையின்பால் உண்டான காதலால் அதனைக் கற்றுத்தேர்ந்து வெளிநாட்டிற்குச் சென்று இசைக்கும் அளவிற்கு புகழ் பெறுபவரும் அவற்றுள் அடங்கும்.

இதுவரை வெளிப்படுத்தப்படாத இக்கலைஞர்களின் வாழ்வை சிறப்பாகவே காட்சிப்படுத்தியுள்ளார் ௭ஸ்.ரா.ஆனால் ஆசிரியரின் பார்வையிலேயே சொல்லப்படும் வாழ்வில் வாசகனாகவே தொடர முடிகிறதே தவிர அவ்வாழ்வுடன் ஒன்ற முடிவதில்லை.அவர் கூறும் ஒவ்வொரு கலைஞரின் வாழ்வும் தனித்தனியாக ஒன்றிளொன்று இணையாமல் லட்டாக பிடிக்கமுடியாத பூந்தியாய் உதிர்ந்து கிடக்கிறது.நாதஸ்வரம் என்ற வாத்தியத்தைத் தவிர ஒற்றுமை வேறில்லை.

ரத்தினம் மற்றும் பக்கிரிக்கு நடக்கும் சம்பவங்கள் அநேக தமிழ்த்திரைப்படங்களின் காட்சியமைப்புபோல வலிந்து திணிக்கப்பட்டவை போலவே தோன்றுகிறது.இக்கலைஞர்களின் உணர்வுகள் நாவலின் எந்த இடத்திலும் வெளிப்படவில்லை.இழிவுபடுத்தப்படும்போதும் கலைஞர்களாக தொடரவைப்பது எதுவென்று எங்கும் உணர்த்தப்படவில்லை.

இசைக்கருவியை மையமாகக் கொண்ட நாவலில் அதன் மரபு பற்றி எதுவும் உரைக்கப்படவில்லையென்பதோடு இசைக்குள் வாசகனை அமிழ்த்வோ ஆழ்த்தவோ அல்லது “சஞ்சாரி”க்கச் செய்யவோ எந்த எத்தனிப்புமின்றி மிக மேலோட்டமாகவே நாளிதழ்களில் வரும் வரலாற்று கட்டுரைகள் போலவே பெரும்பாலும் உள்ளது.மோகமுள் நாவலில் இசை பற்றி எதுவுமே தெரியாதவரையும் விழியில் நீர் கசியவைக்கும் வண்ணம் இசையில் நனையவைக்கும் தி.ஜா.வின் ஆலாபனைகள் நினைவுக்கு வந்து இந்நாவலின் போதாமையை உரைக்கின்றது..இதனை நாதஸ்வரக் கலைஞர்களைப் பற்றிய ஆவணம் என தயங்காமல் கூறலாம்,நாவல் என்றல்ல..

ஆக மொத்தத்தில் எஸ்.ரா.விற்கு படைப்பாளிகளின் பாராட்டுவிழாவில் பவா.செல்லத்துரை கூறியதுபோல “சஞ்சாரம்”நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது கொடுக்கப்படவில்லை,அவரின் முந்தைய படைப்புகளுக்காக கொடுக்கப்பட்டது என்றே எண்ணம் தோன்றுகிறது,வாசித்து முடிக்கையில்.

கா.சிவா
-----------------

அன்புள்ள ஜெ

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் அவருடைய நல்ல நாவல்களில் ஒன்று, ஆனால் மிகச்சிறந்த நாவல் என்பது இப்போதும் நெடுங்குருதிதான். அடுத்தபடியாக யாமம். அவர் சமீபகாலமாக ஓர் எளிமையான ஸீரோ நேரேஷன் நோக்கிச் செல்கிறார் என நினைக்கிறேன். என்ன நிகழ்ந்தது என்பதை மட்டும் சொல்லும் ஒரு வகையான எழுத்து. அது அவர் வரலாற்றைச் சொல்லும்போதும் சில தனிப்பட்ட வாழ்க்கையின் கொந்தளிப்பைச் சொல்லும்போதும் சரியாக அமைகிறது. சஞ்சாரம் இசையைப்பற்றியது. இசை அப்ஸ்டிராக்ட் ஆனது. அதைச்சொல்ல அந்த நடை போதுமானது அல்ல

ஆனால் அதை இசை சார்ந்த நாவல் என்று எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரச்சினையே இல்லை. அது இசைக்கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய நாவல். கல்கொத்தர்கள் சாணைபிடிக்கிறவர்கள் போல அவர்களும் ஒருவகை நாடோடிகள். சாணை பிடிப்பதன் நுட்பங்கள் கதையில் வரவேண்டியதில்லை அல்லவா? அவர்கல் என்னவாக இருக்கிறார்கள் என்று மட்டும் வந்தால்போதுமே. அப்படிப்பார்த்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சிறு சமூகக்குழுவின் கதையாக சஞ்சாரம் சிறப்பான ஆக்கம்தான் பொட்டலில் வாழ்ந்த ஒரு பன்பாடு அப்படியே அழியும்போது இவர்கள் ஆவிபோல அதன்மேல் அலைந்துகொண்டிருக்கிறார்கள். செத்துப்போன ஒரு பண்பாட்டின் ஆவிகள் இவர்கள்

ராஜசேகர்.எம்--
=========================================================================================================
ஜெ,



சமகால எழுத்தாளர்களில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் திரு எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள். அவரின் சிறுகதை, நாவல், கட்டுரை, மேடை பேச்சு என்று எதையும் தேடி தேடி வாசித்தும், கேட்டும் வருபவன் நான். அவருக்கு ‘சஞ்சாரம்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எழுத்துப்பணி தவிர்த்து, புத்தகம் வாசிப்பின் பயனை பள்ளி, கல்லூரி, புத்தக கண்காட்சி என்று மேடைதோறும் ஒரு இயக்கம் போல் பேசி வருபவர். அவர் விருது பெறுவதை பற்றிய தங்களின் வாழ்த்து கட்டுரை சிறப்பாக இருந்தது.



வாழ்த்துக்கள் எஸ். ராமகிருஷ்ணன்

இப்படிக்கு,



டி. சங்கர்







அன்புள்ள ஜெ,



எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது கிடைத்திருப்பது குறித்த உங்கள் குறிப்பு ஆத்மார்த்தமாக இருந்தது. இலக்கியவாதிகளில் இரண்டுவகை உண்டு.தன் உள்ளே நோக்கி தனக்குரியதை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பவர்கள் ஒருவகை.யுவன் சந்திரசேகர், கோணங்கி போன்றவர்கள் அவ்வாறானவர்கள். தன் சூழலை நோக்கி தொடர்ச்சியாக அனைத்து தளங்களிலும் பேசிக்கொண்டிருப்பவர்கள், அதை மாற்றும்பொருட்டு எழுதுபவர்கள் இன்னொருவகை. எஸ்.ரா இரண்டாம் வகை எழுத்தாளர்.



இதை நேற்று பேசிக்கொண்டிருந்தபோது நண்பன் ‘ஆத்மார்த்தமான எழுத்தாளர்கள் முதல்வகையினர்தான்’ என்று சொன்னார். இது ஒரு சிறுபத்திரிகை சார்ந்த மனநிலை. ஏனென்றால் சிறுபத்திரிகைக்கு அன்றெல்லாம் சமூகத்திடம் பேச வாய்ப்பே இல்லை. தனக்குத்தானேதான் பேசிக்கொள்ளவேண்டும். நான் அவரிடம் கேட்டேன். ‘உலக இலக்கியத்திலுள்ள மேதைகளில் ஒரு சிலர் தவிர அனைவருமே இரண்டாம் வகையினர்தானே?’ என்று. அவனால் பதில்சொல்ல முடியவில்லை. டால்ஸ்டாய் ஒரு மதநிறுவனர் போலச் செயல்பட்டவர். தாமஸ் மன் போன்றவர்களெல்லாம் ஊர் ஊராகச் சென்று மக்களிடம் பேசியவர்கள். அவனுக்கு அதெல்லாம் தெரியவேயில்லை.



எஸ்.ரா ஓர் எழுத்தாளர் என்பது மட்டுமல்ல ஓர் இலக்கிய ஆளுமை. சினிமா, வரலாறு, பண்பாடு சார்ந்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறார். இவற்றில் ஓர் ஆய்வாளர், அறிஞர் என்றவகையில் அவர் செயல்படவில்லை. அவர் அவ்வாறல்ல என்று அவர் அறிவார். அவர் ஓர் இலக்கியவாதி மட்டும்தான். ஓர் இலக்கியவாசகனுக்கு எந்த அளவுக்கு அடிப்படையாக சினிமா, வரலாறு, பண்பாடு தெரிந்திருக்கவேண்டுமோ அந்த அளவுக்கே அவர் பேசுகிறார். இந்த வேறுபாட்டை அறியாமல் கூகிள் உதவியுடன் அவரை வசைபாடும் சிலர் உண்டு.



தமிழ்ச்சூழலின் அறிவுத்தளம் மிகக்குறைவானது. ஏனென்றால் இங்கே கல்வித்துறை ஒன்றையுமே சொல்லித்தருவதில்லை. அனைத்தையுமே வெளியே வந்துதான் கற்கவேண்டியிருக்கிறது. அவற்றைக் கற்பித்த சமகால ஆசிரியர்களில் ஒருவர் எஸ்.ராமகிருஷ்ணன். அவரிடமிருந்துதான் இந்தியவரலாற்றின் ஒரு சித்திரத்தை நான் அடைந்தேன். இந்தியாவைப்பற்றிய ஒரு பொதுப்புரிதலும் உருவானது. வாசகனாக அவருக்கு நான் கடன்பட்டவன். அவருக்கு வாழ்த்துக்கள்.



எஸ்.சந்திரசேகர்

----------------------

அன்புள்ள ஜெ



எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டிருப்பது நிறைவளிக்கிறது.பொதுவாக இத்தகைய விருதுகள் கொஞ்சம் வயதானபின்னர் அளிக்கப்படும். அந்த எழுத்தாளரின் நல்ல படைப்புக்கு அவ்விருது சென்றடையாது. அது அவர்களை வாசகர்களிடையே தப்பாக அறிமுகம் செய்யும். ஆ.மாதவனுக்குக்கூட அப்படித்தான் ஆனது. எஸ்.ராவின் சிறந்த நாவல் சஞ்சாரம். அது அவரை பரவலாக அறிமுகம் செய்யும் தன்மை கொண்டது. சிரமம் இல்லாமல் வாசிக்கவும் முடியும். ஆகவே இது ஒரு விரிவான இலக்கிய அறிமுகம் என்றும் சொல்லலாம். எஸ்.ரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்



ராமச்சந்திரன்





அன்புள்ள ஜெ



எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்குச் சாகித்ய அக்காதமி விருது கிடைத்துள்ளது. அதற்கு எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் முதலியோர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தப்பண்பாடு முன்னர் இருந்ததில்லை, இப்போது உருவாகி வந்திருக்கிறது. ஆனால் இன்னமும் நம் முதல்வரோ, கல்வித்துறை அமைச்சரோ வாழ்த்து சொல்லவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. கேரளத்திலும் கர்நாடகத்திலும் எல்லாம் அவர்களின் வாழ்த்தே முதலாவதாக வரும். அது ஒரு சம்பிரதாயம்தான், ஆனால் அது முக்கியமானது. ஏனென்றால் அவர்கள்தான் தமிழ்மக்களின் அதிகாரபூர்வமான பிரதிநிதிகள்.



எஸ்.மாதவ்



அன்புள்ள மாதவ்



முதல்வர் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என அறிகிறேன்.



ஜெ
================================================================================================

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல்கள் (6-Aug-19, 8:54 am)
பார்வை : 104

மேலே