டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி

டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி.

வீட்டு எண் 000,
காணாமல் போன வீதி,
முட்டு சந்து,
சின்னூர்
மேனேஜர் அவர்களுக்கு
தாதா என்று அழைக்கப்படும் ராக்காயி எழுதுவது !
உம்முடைய கடையில் வாங்கிய பீரோ ஒன்று உம்மால் “இது உயர் தரமானது” எளிதில் உடையாது, வளைந்து கொடுக்காது, திறப்பதற்கும், மூடுவதற்கும் சுலபமாய் இருக்கும் என்று உம்மால் பிலாக்கணம் செய்யப்பட்டு, என்னைப்போன்ற ஏமாளியான ராக்காயால் வாங்கப்பட்டு அதற்கான தொகையையையும் ஒரு பைசா குறையாமல் கொடுக்கப்பட்டு,. அதன் பின் வீடு வந்து சேர்ந்து ஒரு வாரம் (அதாவது ஏழு நாட்கள்)ஓடி விட்டது. இதுவரை அந்த பீரோ வந்து சேரவில்லை. ஏன் ஐயா, நீர் எனக்கு காண்பித்த பீரோவை எடுத்து ஒரு வண்டியில் ஏற்றி எனது வீட்டுக்கு கொண்டு வருவதற்கு உமக்கு ஏழு நாட்கள் போதவில்லை என்றால் என்னை போல வாடிக்கையாளர்களுக்கு எப்படி வியாபாரம் செய்வீர்?.இக் கடிதம் கண்டவுடன் உடனே நான் ஆர்டர் கொடுத்த பீரோ எனது வீட்டிற்கு வந்திருக்க வேண்டும். இல்லையென்றால்….. ….முச்சு வாங்குகிறது…உடனே அனுப்பி வையும்.
இப்படிக்கு,
ராக்காயி,
காணாமல் போன வீதி.
அன்புள்ள ராக்காயி அவர்களுக்கு,
உண்மை தெரியாமல் உளறி கொட்டி கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அன்று பேசும்
போது என்ன சொன்னோம். ஒரு பைசா குறையாமல் வாங்கி கொண்டதாக எழுதியிருகிறீர்கள். இது அபாண்டம், அன்று ஒரு ரூபாய் நாற்பது காசு பாக்கி வைத்துதான் பீரோவுக்குண்டான பணத்தை கொடுத்து சென்றீர்கள்.இந்த ஒரு ரூபாய் நாற்பது காசை போன உடன் அனுப்பி விடுகிறேன் என்று சொன்னதால், இந்த ஏழு நாட்களும் காத்திருந்தோம், அதில் ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள் என்று எழுதி இருக்கிறீர்கள். மிக்க நன்றி. இதுவரை ஆறு நாட்கள்
என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். நிற்க… உம்முடைய பீரோ தயாராக இருக்கிறது என்று
பொய் சொல்ல தயாராக இல்லை. நீங்கள் பார்த்த பீரோவை, உங்களுக்கு அடுத்து வந்த
வாடிக்கையாளர், உம்மை போல் பைசா பாக்கி வைக்காமல்,முழு பணத்தையும் கொடுத்து விட்டு, அதை அப்பொழுதே வண்டி எடுத்து வந்து ஏற்றி சென்று விட்டார்கள்.
உங்களுக்கு “நான் எங்கள் கம்பெனி பீரோவை பற்றி சொல்வதை “பிலாக்கணம்” என்று குறிப்பிட்டிருக்கிறீகள், அதன்படியே உடையாத, வளையாத உறுதியான, திறந்து மூட சுலபமான, பீரோ தயாராகிக்கொண்டிருக்கிறது. அது இன்னும் இரண்டு நாட்களில் தயாராகிவிடும். தயாரான உடன் அனுப்பி வைக்கிறோம், ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி, வண்டி வாடகை, போன்றவற்றை கொடுத்து, அந்த பாக்கி ஒரு ரூபாய் நாற்பது காசையும் கொடுத்து அனுப்பி விடவும்.

இப்படிக்கு
மேனேஜர்,
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி.

கொஞ்சம் கூட நாணயமோ, நேர்மையோ இல்லாத மேனேஜர் அவர்களுக்கு !
உம்மை அடுத்து கோர்ட்டில் சந்திக்க தயாராக இருக்கும் ராக்காயி எழுதிக்கொள்வது.
நான் ஆர்டர் கொடுத்திருந்த பீரோவை எப்படி அடுத்த வாடிக்கையாளருக்கு கொடுக்க
முடியும்? அதுவும் முழு பண தொகை பெற்றுக்கொண்டு அடுத்தவருக்கு விற்றிருக்கிறீர்
என்றால் நீர் எவ்வளவு பெரிய மோசக்காராயிருப்பீர். உம்முடைய டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனியை பற்றி இப்பொழுதே ஒரு புகார் கடிதம் எழுதி நுகர்வோர் கோர்ட்டுக்கு அனுப்பி
வைக்கப்போகிறேன். அதற்கு அன்று நான் கட்டிய பணத்திற்கான இரசீதை உம்மிடம் வாங்க
மறந்து விட்டேன். மறக்காமல் உடனே இரசீதை அனுப்பி வைத்தீரென்றால் உம்முடைய கடையை பற்றி புகார் அளிக்க வசதியாக இருக்கும்.
(என் பெயருக்கு முன்னால் இருக்கும் வார்த்தையை நினைவு படுத்திக்கொள்ளும்)

இப்படிக்கு
உம்மை பற்றி புகார் அளிக்க தயாராக இருக்கும்
ராக்காயி.

உம்முடைய மிரட்டல் கடிதம் கிடைத்தது. இதுவே எங்களுக்கு ஓர் ஆதாரமாகும். நீர் “தாதா”
என்று குறிப்பிட்டிருந்ததால், நாங்கள் போலீசில் பாதுகாப்பு கேட்கவும் தயாராகி விட்டோம்.
அடுத்து இரசீது பெறவில்லை என்று சொல்லியிருகிறீர்கள், இன்னும் ஒரு ரூபாய் நாற்பது
காசு கொடுத்து அனுப்பி இருந்தால் இப்பொழுதே உங்களுக்கு இரசீதை கொடுக்க தயாராக
உள்ளோம்.இன்னும் ஒரு நாள் உமது கோபத்தை பொறுத்துக்கொண்டால் இதை விட அருமையான பீரோ தயாராகி விட்டது. அதை நாளை மறு நாள் உங்களுக்கு அனுப்பி விடுகிறோம். அதாவது இந்த கடிதம் கிடைக்கும்போது பீரோ உங்கள் கதவை தட்டும்.
பீரோ எடுக்க வரும்போது அன்பாய்,அழகாய் காணப்பட்ட நீங்கள் இப்படி
“தாதா” என்று பட்டம் வைத்துக்கொள்ளலாமா? அதுவும் என்னைப்போன்ற இளைஞர்களுக்கு
மனது புண்படாதா?

உம்முடைய மிரட்டலால் பயந்து கொண்டிருக்கும்
மேனேஜர்,
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி.

அன்பாய்,அழகாய் என்று எழுதி விட்டதால், மயங்கி இந்த கடிதம் எழுதுவதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். நன்றாய் இருக்கிறது நீங்கள் அனுப்பிய பீரோ,ஏதோ
அன்று பிலாக்கணம் செய்தது போலவே இருக்கிறது என்றாலும், இதை பெரிய பாராட்டாக எடுத்துக்கொள்ளாதீர். என் அப்பா போன மாதம் உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன்,
அவர் டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனியில் மேனேஜராய் இருக்கிறார்.உனக்கு மாப்பிள்ளை பிடித்திருந்தால் மட்டும் பீரோ ஒன்று ஆர்டர் செய்து விட்டு,வந்து விடு.என்று சொல்லி இருந்தார். நானும் உம்மை பார்த்து விட்டு உம் கடைக்கு வந்து பீரோ வாங்கினேன். ஆனால் நீர் செய்த அந்த வியாபார தந்திரத்தை நம்பி நான் எப்படி உமக்கு கழுத்தை நீட்டுவது?.

இப்படிக்கு
உம்மால் ஏமாற்றப்பட்ட வாடிக்கையாளர்,
ஆனால் உம்மை திருமணம் செய்து கொள்ள என் அப்பாவிடம் சம்மதம் சொல்லிவிட்ட
ராக்காயி.
குறிப்பு :தாதா என்பது “தாம்பரம் தாயப்பன்” என்பது என்னுடைய தாத்தா பெயர்
அது ஞாபகமாய் என்னை அழைக்கும் பெயர்.

அன்புள்ள ராக்காயி அவர்களுக்கு !
என்னடா பேரை சொல்லி கடிதம் எழுதுகிறானே என்று உம்முடைய கோபத்தை
காட்ட தேவையில்லை. இந்த டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி என்பது என்னுடைய தந்தையார்
கடைதான் என்பதும், நான் மேனேஜர் என்பதும் உமது தந்தையாருக்கு தெரியும். எனது
தந்தையாரும் ஒரு பெண் உன்னிடம் பீரோ வாங்க வருவார்கள், உனக்கு பிடித்திருந்தால்
அவர்களுக்கு பீரோவை சப்ளை செய்து விடாதே, பிடிக்காவிட்டால், உடனே அவர்களுக்கு
சப்ளை செய்து விடு என்று சொல்லியிருந்தார்.இப்பொழுது தெரிகிறதா? பீரோ ஏன் ஒரு
வாரமாய் உங்கள் வீடு வரவில்லை என்று.

திருமண நாளை ஆவலுடன் எதிர்பார்க்கும்
மேனேஜர்
நாராயணன்,
டுபாக்கூர் ஸ்டீல் கம்பெனி.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (6-Aug-19, 10:07 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 493

மேலே