பிச்சைக்காரன்

தூய்மை இந்தியா இயக்கம் செயல்படுவதற்கு பல காலம் பிடிக்கும் என்பதை அவ்வீதி நிரூபித்துக் கொண்டிருந்தது. அந்த வீதியில் உள்ள கடைகள் சுத்தமாக இருக்கிறதோ இல்லையோ, தெரு குப்பைகளின் ராஜ்யமாக காட்சி அளித்தன. ஏறக்குறைய எட்டு முதல் பன்னிரண்டு கடைகள் இருக்கக்கூடும். கடைகளின் நடுவே ஒரு கோவிலும் இருந்தது. கோவிலின் பூஜை-நேரத்தில் பஜனை ஒலி அந்த வீதி முழுதும் கேட்கக் கூடும். மிகவும் பரபரப்பான வீதியாக இருந்தாலும் கோவிலுக்குள் செல்லும் மக்கள் குறைவாகவே இருந்தனர். கோவிலின் வாசலை அலங்கரிக்கும் விதமாக பிச்சைக்காரர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். கோவிலுக்கு வரும் அன்பர்கள் மட்டும் அல்லாது, அந்த வீதியின் வழியாக நடந்து செல்லும் மனிதர்களும் கடவுளுக்கு இடும் காணிக்கையாக எண்ணி பிச்சை இட்டு சென்றனர். ஒரு சிலரோ பிச்சைக்கார கூட்டத்தை வெறுப்பாக பார்த்து வீதியை கடக்கலாயினர்.
அதற்கும் ஒரு காரணம் இருக்கலாம். ஆறு முதல் எட்டு பிச்சைக்காரர்கள் இருக்கும் கூட்டம் அது. அதனில் ஒருவன் மட்டும் அக்கூட்டத்திற்கு அந்நியமாக தென்பட்டன. அவன் மிகவும் மெலிந்த தோற்றம் கொண்டவன். சவரம் செய்து பல வருடங்கள் இருக்கக்கூடும். ஆடை மாற்றி பல நாட்கள் இருக்கலாம். அதனை உறுதி செய்யும் விதமாக ஆடையின் அழுக்கும், ஆங்காங்கே கிழிந்த துவாரத்தின் வழியாக தோலும் தென்பட்டது. யாரிடமும் பேசாமல் இருப்பதால் பிச்சைக்கார கூட்டத்தில் பாதி பேர் அவனை பைத்தியம் என்று எண்ணினர், சிலர் அவனை திட்டினார், சிலர் அவனை ஊமையோ என்று யூகித்தனர். இதையெல்லாம் கேட்டு அவனோ எந்த பாதிப்பிற்கும் ஆளானவனாக தெரியவில்லை.
மக்களுள் சிலர் அவன் நிலை பார்த்து மனம் நெகிழ்ந்து பிச்சையும் இட்டனர். இட்ட சில காசுகளை அக்கூட்டத்தில் இருந்த மற்ற பிச்சைக்காரர்கள் களவாடவும் செய்தனர். அனால் அதையெல்லாம் அவன் கண்டுகொள்ளவில்லை. யாரிடமும் பிச்சை போடுங்கள் என்று கேட்பதும் இல்லை. அனால் தட்டில் மீதம் உள்ள காசுகளை எடுத்துக்கொள்ள தவறுவதும் இல்லை.
சிறிய வீதியாக இருப்பதால் கனரக வாகனங்களை தவிர, நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் எப்பொழுதும் அங்கே கடந்து செல்வதை பார்க்கமுடியும்.
அவ்வாறு கடந்து செல்லும் வாகனங்களை எதோ தனது சொந்த வாகனங்கள், போன்று அந்த பிச்சைக்காரன் தலையை அசைத்த வாறு பார்த்துகொன்டே இருப்பான். இருப்பினும் அவனுடைய கண்களில் ஒருவகையான தேடல் ஒளி இருக்கும். குறிப்பாக அந்த வீதியின் வழியே சென்றுகொண்டிருந்த ஆட்டோக்களை மட்டும் நோக்க தவறுவதில்லை.
சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக ஆட்டோ ஒன்று பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. கோவிலின் முன்பாக வந்த போது யாரோ ஒரு பள்ளி குழந்தையின் ஸ்கூல் பேக் தவறி ஆட்டோவின் வெளியே விழுந்தது. இதனை கவனிக்காமல் ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை செலுத்திக்கொண்டிருந்தார்.
இதை கண்ட அந்த பிச்சைக்காரன் வெடுக் என்று தனது இருப்பிடம் விட்டு எழுந்து பையை நோக்கி ஓடினான். அப்ப்போது பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் சிலர் "அறிவு கெட்டவன் பள்ளிக்குழந்தைங்க பைல காசு எங்கய்யா இருக்க போகுது? ஏமாந்து திரும்ப போரான் முட்டாளு" என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இதற்கு நேர்மாறாக அங்கே ஒரு காரியத்தை அந்த பிச்சைக்காரன் அரங்கேற்றினான். பையை எடுத்த வேகத்தில் கோவிலை கடந்து சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்னால் சத்தம் இட்ட வாறு ஓடினான். பிச்சைக்காரனின் அலறல் ஒலி ஆட்டோ ஓட்டுநர் காதுகளுக்கு எட்டியும் அவர் அதனை நிராகரித்தார். எனினும் ஆட்டோவின் கண்ணாடி வழியாக பிச்சைக்காரனின் கையில் இருந்த பையை பார்த்து ஆட்டோவை ஓரம் கட்டினார்.
ஓடி வந்த வேகத்தால் அவனுக்கு நெஞ்சு அடைத்தது. அதை பொருட்படுத்தாது ஆட்டோவின் அருகில் வந்து, ஸ்கூல் பையினை பின்சீட்டில் இருந்த குழந்தை ஒன்றிடம் ஒப்படைத்தான். அந்த் பெண் குழந்தைக்கு ஆறு வயது இருக்கும். குழந்தை, தெய்வம் போன்று அவனுக்கு தோன்றினாள். புன்னகையால் மெய் மறந்தான். அந்த சிறுமியை மற்றும் உற்று நோக்கலானான். ஏதோ ஓர் வகையான பாசம் அந்த சிறுமியின் மீது இவனுக்கு தோன்றியது. "கல் நெஞ்சயே ஆனாலும் ஒரு குழந்தையின் சிரிப்பில் அடி சுரக்கும் அல்லவா?"
அன்று முதல் எப்பொழுதும் அச்சிறுமிக்கு ஆட்டோவில் பள்ளிக்கு செல்லும் போதும் திரும்பும் போதும், இருவரும் கை அசைத்துக் கொண்டனர். பாலைவனம் போன்று இருந்த அந்த பிச்சைக்காரனின் வாழ்வில், அக்குழந்தையின் கையசைப்பு மழைச் சாரலாக பதிவானது. குழந்தையோ அன்போடு அவனை பிச்சை மாமா என்று அழைத்தாள். இவ்வாரே அவர்களுக்குள் பாசப்பிணைப்பு தோன்றியது.
அன்று வைகுண்ட ஏகாதேசி. பெருமாள் கோவிலாக இருப்பதால் பல வைணவ பக்தர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். பிச்சைக்காரர்களுக்கு நல்ல வேட்டை நாளாக அமைந்தது. பல நாட்களுக்கு வைத்து சாப்பிடும் அளவிற்கு அணைத்து பிச்சைக்காரர்களின் திருவோட்டிலும் உணவு இருந்தது. பிச்சை மாமாவிற்கும் அன்றைய தினம் உணவிற்கு பஞ்சமில்லை கிடைத்த உணவை புசிக்கலானான். தன்பசியை போக்கி கொன்டே கோவிலின் உள்ளிருந்து வருபவர்களை நோட்டமிட்டான்.
சட்டென்று உண்பதை நிறுத்தினான். அங்கே வரும் சிறுமியை கண்டு புன்னகித்தான். அஃது ஆட்டோவில் தினமும் செல்லும் சிறுமி தான் என்பதை உறுதி செய்தான். அச்சிறுமியும் இவனை பார்த்து "ஐ பிச்சை மாமா எப்படி இருக்கீங்க" என்று கூறியவாறு அவன் அருகே சென்றாள். பிச்சை மாமா "உங்க பேரு என்ன? என் நண்பர்கள் கேக்கறாங்க சொல்லுங்க" என்று வினவினாள். அவனோ காரியம் எதையோ சாதித்து முடித்தது போன்று புன்னகித்தான். ஏதுவும் பேச வில்லை எனினும் பாசம் அவன் கண்களில் நீரை வடித்தது. பிச்சை போடப்பட்ட தனது திருவோட்டில் இருந்து ஒரு பிஸ்கட் பாக்கெட்ஐ எடுத்து ஆசையோடு சிறுமிக்கு கொடுக்க முற்பட்டான். சிறுமியும் சலிப்பின்றி அதனை பெற்றுக்கொள்ள கை உயர்த்தினாள்.
திடிர் என்று பிச்சைக்காரனின் கைகளை யாரோ தட்டிவிட்டார். பிஸ்கட் பாக்கெட் கீலே விழுந்து நொருங்கிற்று. அஃது சிறுமியின் தந்தை என்பதை நம்ப முடியாமல் தலையை நிமிர்த்து பார்த்தான் அவன். "உனக்கு மூளை மங்கிப்போச்சா; யார் எது கொடுத்தாலும் வாங்கிருவிய?" என்று சிறுமியை வசைபாடினார். சிறுமியின் பிஞ்சி கைகளை காளை மாட்டின் மூக்கணாங்கயிற்றை இழுப்பது போன்று இழுத்து சென்றார் அவர்.
பிச்சைக்காரனுக்கு மனம் கொள்ளவில்லை. அவனால் என்ன செய்யமுடியும் கரைவதை தவிர. சிறுமிக்கும் அன்றைய தினம் வேதனையே தந்தது. சில நாட்கள் கழிந்தன.
அன்று விடுமுறை நாள், என்பதால் சிறுமி நண்பர்களோடு அவள் வீட்டின் அருகே உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்தாள். அனைவரும் மகிழ்ச்சியாக பந்தினை ஒருவருக்கொருவர் தூக்கி போட்டு ஆரவாரம் செய்தனர்.அவ்வாறு விளையாடும்போது எதிர்பாராதவிதமா பந்து பூங்காவின் வெளியே சென்று வீதியின் மறுபக்கம் விழுந்தது. அதனை எடுப்பதற்கு சிறுமியோ வீதியின் குறுக்கியே ஓடினாள்.
சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு கார் அந்த வீதியின் வழியாக சீறிப்பாய்ந்தது. குடியிருப்புகளில் செல்லும் வாகனம் குறைந்த வேகத்திலே செலுத்தப்பட வேண்டும். ஒரு கார் ஓட்டுனருக்கு இந்த விதி முறைகள் தெரிந்திருக்க வேண்டும். அனால் ஓட்டுனரோ தன் நிலை அறியாது மது அருந்திருப்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
வீதியின் நடு பகுதிக்கு வந்த சிறுமியோ காரின் வேகத்தை கண்டு பயந்து போனாள். என்ன செய்வது என்று அறியாமல் வீதியின் நடுவே அசைவற்று நின்றாள்.
அம்மா.........!!!!!! என்று அலறல் சத்தம் மட்டும் அவ்வீதி முழுதும் கேட்டது.
யாரோ தன் முதுகில் ஓங்கி ஒரு தள்ளு விட்டதை உணர்ந்த சிறுமி வீதியின் மறுபக்கம் சென்று மயங்கி விழுந்தாள். கூட்டம் வாகனத்தை சூழ்ந்தது. சிலர் மயங்கிய சிறுமியை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். சிறுமியின் தந்தைக்கு தகவல் அனுப்பப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த அவர், மகளை கண்டு வேதனை கொண்டார். இரண்டு நாட்கள் சிகிச்சை பெற்று சிறுமி வீடு திரும்பினாள்.
தந்தையோ சிறுமிக்கு நேரம் சரியில்லை என்று எண்ணி அவளை அழைத்து கோவிலுக்கு சென்றார். கோவிலில் நல்ல தரிசனம் கிடைத்தது. சிறுமியோ பிச்சை மாமாவை தேடினாள். பிச்சை மாமா வழக்கமாக அமர்ந்திருக்கும் இடத்தில் இல்லை. அவர் எங்கே என்று தன் தந்தையிடம் வினவினாள். "அவன் எங்கே இருந்த நமக்கு என்ன?" என்றார் சிறுமியின் தந்தை. ஆர்வம் தாங்காமல் சிறுமி அருகில் இருந்த பிச்சைக்காரரிடம் கேட்டாள். அதில் ஒருவன் "அந்த பைத்தியம் யாரோ ஒரு சின்ன பொண்ணு ரோட்ல நின்றுக்கு, அவள காப்பாத்த போயி கார் ஒன்னுல அடி பட்டு செத்து போய்ட்டான், இருந்த ஒரு தொல்ல எங்கள விட்டு போச்சு" என்று மகிழ்ச்சியோடு கூறினான்.
நிலைமையை புரிந்துகொண்ட சிறுமியின் தந்தை அதிர்ந்து போனார். அவர் கண்களில் நீர் வடிந்தது. தன் மகளை காப்பாற்றவே அந்த பிச்சைக்காரன் தன் உயிரை தியாகம் செய்தான் என்பதை எண்ணி தன் முந்தய செயல்களால் வெட்கத்தில் தலை குனிந்தார். அந்த பிச்சைக்காரன் எப்போதும் அமர்ந்திருக்கும் இடத்தில் அவன் திருவோடு மட்டும், இருப்பதை சிறுமியின் தந்தை கண்டார். அதில் முன்னொரு நாள் தான் தட்டி விட்டு நொறுங்கிய நிலையில் இருக்கும் பிஸ்கட் பாக்கெட்டை எடுத்து தன் மகளிடம் கண்ணீருடன் கொடுத்தார்.

எழுதியவர் : க மோகன் குமார் (9-Aug-19, 8:34 pm)
சேர்த்தது : மோகன் குமார் க
Tanglish : pichaikkaran
பார்வை : 365

மேலே