கொஞ்சம் கொஞ்சமாய் காதல் சாரல் - பகுதி 2

அடியே, ரதியே என்னை எதோ செய்றே நீ,
கொஞ்சம் கொஞ்சமாய் எந்தன் நெஞ்சிலே,
காதல் விதையை நீயும் நட்டுச் செல்கிறாய்,
எந்தன் வானிலே,
ஒரு மின்னலாய்,
காதல் தூறல் எங்கும் விட்டுச் செல்கிறாய்...

மீண்டும் பாடினான் அட்லஸ். விருட்டென ஓடி வந்து அவனைக் கட்டிக் கொண்டு கதறி அழுதாள் சுஜி.

சுஜி: ஏண்டா, என்ன இப்படி சித்திரவாத பண்றே ?

அட்லஸ் கட்டியிருந்தவளை கொஞ்சம் தள்ளி, அவள் கைகளை இறுக்கப் பற்றி சொன்னான்,

அட்லஸ்: ஐ லவ் யூ... நான் தான் சொன்னேன்லே நான் பண்ண தப்பு, பண்ற தப்பு, எல்லாமே நீ மட்டும் தான். தெரிஞ்சும், இந்த மனசு பாரு உன்ன விட மாட்டுது.

கண்ணீர் மல்க பேசிய அட்லஸ்ஸை மீண்டும் கட்டிக் கொண்டாள் சுஜி.

இருவரின் இணைப்பையும் தளர்த்திடுமாறு சுஜியின் கைத்தொலைப்பேசி அலறியது. எதிர்முனையில் குமார்.

குமார்: பாப்பா.. எங்க இருக்கே ? வேலை முடிஞ்சதா? நீ இங்க வரியா இல்ல நான் வந்து பிக் ஆப் பண்ணனுமா?

சுஜி: இல்ல குமார், எனக்கு இன்னிக்கி ஓடிட் போய்கிட்டு இருக்கு லேட் ஆகும், நீங்க கிளம்புங்க நான் வந்துக்கறேன்.

ரிசீவரை வைத்தவள், அட்லஸை தேடினாள், அவன் வாசலின் முன் கதவை திறந்து வைத்து நின்றிருந்தான்.

சுஜி அவனை வெறித்து பார்த்தாள்.

சுஜி: போடின்னு, சொல்லாம சொல்றியா?

அட்லஸ்: உன் வீட்டிற்கு போனு சொல்றேன். உன் ஹஸ்பண்ட் கிட்ட போனு சொல்றேன்.

சுஜி: நீ எனக்கு சொல்ல வேணாம், நான் எங்க போனும்னு.

அட்லஸ்: போ பாப்பா... வீட்டுக்கு போ.

சுஜி: முடியாது ! என்னப் பண்ணுவே ?

கைகளை கட்டிக் கொண்டு அவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள். பார்த்தாள் என்பதை விட ரசித்தாள் எனலாம்.

அட்லஸ். அவன் பெயரின் அர்த்தத்தைப் போலவே சொர்கத்தை தோள்களில் சுமந்திருப்பவன். இஸ்லாம் மதக்காரன் என்பது கொஞ்சங்கூட அவனது ஜாடையில் தெரியவே தெரியாது. அக்மார்க் தமிழ் பையன் போலவே இருப்பான்.

அவனுக்கு காந்தக் கண்கள். குழி விழும் கன்னம். சிரித்தால் அடுக்கடுக்காய் வரிசையான முத்து போன்ற பற்கள். அவனுக்கான ஒரு சில ஸ்டைல்கள்.

தலையை அடிக்கடி கண்கள் இரண்டால் பாட்டில் வரும் ஜெய் போல ஆட்டுவான். ஒரு கண்ணை அழகாக மூடி கண்ணடித்து தலையை சாய்த்து வா என்பதுப் போல பாவனை செய்வான். மீசை தாடியெல்லாம் வைத்தால் ஒரு மாதிரி மிடுக்கான அழகாவும் அது ஏதுமின்றி குழந்தை போலும் இருக்கும் அவன் வட்ட முகம்.

ஜிம்க்கு சென்று உடலை கட்டாக வைத்திருக்கும் கட்டொழுங்கு கொண்ட ஆண்மகன். பார்த்தால் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவன் ஒரு வித அழகுதான்.

சுஜி எப்போதுமே அவனை சிரிக்க சொல்லியே பார்ப்பாள். அவளுக்கு அட்லஸின் சிரிப்பு அவ்வளவு பிடிக்கும். அவர்களின் சந்திப்பில் எது இடம் பெறுகிறதோ இல்லையோ அட்லஸின் சிரிப்பு எப்போதுமே இருக்கும்.

சுஜி அவனைப் பார்த்துக் கொண்டே குளிர்சாதன பெட்டி அருகே சென்று அதனுள்ளிலிருந்து தண்ணீர் நிரம்பியிருந்த போத்தலை எடுத்து ஐஸ் தண்ணீரை பருகினாள்.

போத்தலில் வாய் வைக்காமல் குடித்துக் கொண்டிருந்தவளை, பின்னாலிருந்து வந்து கட்டி கொண்டு அவளது காதில் பாடினான் அட்லஸ்,

காதல் பொய்தானா,
நீ கூறடி!
காதல் பொய்தானா,
அன்பே கூறடி!
காதல் பொய்தானே,
உயிரே கூறடி!
காதல் பொய்தானா,
ஒருமுறை கூறடி!

அட்லஸின் மூச்சு காற்று அவளின் காது மடல்களைத் தீண்ட கையில் வைத்திருந்த போத்தலை கீழே போட்டாள் சுஜி. சிந்திய தண்ணீர் நாலா பக்கமும் சிதறி ஓடியது. இருவரின் கால்களையும் நனைத்தது. ஜில்லென்ற தண்ணீர் அவளை சிலிர்க்க வைத்தது. பாடியவனின் பக்கமாய் கண்களை மூடிக் கொண்டு திரும்பியவள் கிறங்கி நின்றாள்.

அட்லஸின் மூக்கும் சுஜியின் மூக்கும் ஒன்றாக ஒட்டியவாறே இருக்க அவளது தலையை தன் இருக் கைகளால் வலதும் இடதும் இறுக்கமாய் பிடித்தவன் பாடினான்,

பார்வைகளும் பொய்தானா,
ஸ்பரிசங்களும் பொய்தானா,
வார்த்தைகளும் பொய்தானா,
தொடக்கமும் முடிவும் பொய்தானா,

நெருக்கங்களும் பொய்தானா,
உருகுகிறேன் பொய்தானா,
நிஜங்களுமே பொய்தானா,
பொய்தானா ! பொய்தானா !

அட்லஸின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய மூடிய கண்களோடு அவன் பாட சுஜியும் அசையாமல் மனம் ஒத்திப் போய் அப்படியே வழிகின்ற கண்ணீரோடு நின்றாள்.

அட்லஸ்: ஏண்டி, எனக்கு முன்னாடி போய் பொறந்தே? அதுவும் இங்கே, மலேசியாலே... என் வீட்டுக்கு எதிர் வீடு, பக்கத்து வீடு, என் காலேஜ்னு என் பக்கமா இருந்துருக்கலாம் தானே...

சுஜி:அப்படி இருந்திருந்தா நீங்க என்னே திரும்பியே பார்த்திருக்க மாட்டிங்க மிஸ்டர் அட்லஸ், சிரித்தாள் சுஜி.

அட்லஸ்: தப்பு பண்றேண்டி...ரொம்ப பெரிய தப்பு பண்றேண்டி! அந்த மனுஷன் உன் மேல உயிரையே வெச்சிருக்காருடி!

அட்லஸ்ஸை நெருங்கி வந்த சுஜி. அவளது உதட்டில் ஒற்றை விரல் ஒன்றை வைத்து அதை மீண்டும் அவனது உதட்டில் வைத்தாள். ஏறக்குறைய, முத்தம் போலத் தான் அதுவும்.

சுஜி:நீயும் தப்பில்ல அவரும் தப்பில்ல. நான் மட்டும் தான் தப்பு. உங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் வீணாக்கிகிட்டு இருக்கற மிகப் பெரிய திருத்த முடியா தப்பு! இதுக்கு தொடக்கம் மட்டும் தான் முடிவு எப்படினு யாரும் யோசிச்சதே கிடையாது!

சுஜியின் கைத்தொலைபேசி மீண்டும் அலறியது. குமாரின் பெயர் வந்து வந்து மறைந்தது.

அட்லஸ்: பாப்பா... நீ மொத வீட்டிற்கு கிளம்பு. அவர் மொதலர்ந்து கால் பண்ணிக்கிட்டே இருக்காரு.

சுஜி: அவர்..

சுஜி முடிக்கும் முன்னே, அட்லஸ் அவளின் கைகளை பற்றினான். அவள் நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்து,

அட்லஸ்: கிளம்பு பாப்பா... நாளைக்கி பேசலாம்.

சுஜி:என்ன எப்படி ஆப் பண்ணனும்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சி இருக்கு. போய் தொலையறேன். நீ சொல்லிட்டலே. கிளம்பறேன். மம்மிக்கு கால் பண்ண மறந்துடாத. வின்னி சேச்சிக்கும். பாய்.

கைப்பையை கைகளில் பிடித்தவாறே பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றாள் சுஜி அட்லஸை விட்டு. அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் அட்லஸ்.

அவன் எண்ணம் கொஞ்சம் பின்னாடி சென்றது. அவனுக்கு எப்படி எப்போது சுஜியை தெரியும்.

சுஜி ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவள். அங்கு இன்ஜினியர்கள் பலர் உண்டு. எல்லாம் வெளிநாட்டவர்கள் . தமிழ் பேசும் இன்ஜினியர்கள் கை விட்டும் எண்ணும் அளவே. வேலை நிமித்தமாக ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் அதிக நெருக்கத்தை கொண்டு வந்து சேர்த்தது அட்லஸ்சுக்கும் சுஜிக்கும்.

காரணம் இருவருக்கும் ஒரே மாதிரியான ரசனைகள் அதிகம். கதை, கவிதை,பாடல்,இசை,காலை,இலக்கியம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பத்து பொருத்தம் போல அனைத்தும் பொருந்தி வந்தது இருவருக்கும். அதுவும் சுஜிக்கு பாட்டு பாடுவது மிகவும் பிடிக்கும். அட்லசும் நன்றாக பாடுவதால் சும்மாவே அவனை பாட சொல்லி நச்சரிப்பாள். அவனும் அவளுக்காக பாடுவான்.

நாளடைவில் இருவருக்கும் இடையில் ஒரு வித சொல்ல முடியா புரிந்துணர்வு. காதலில் சிக்கல் இருக்கலாம், காதலே சிக்கலென்றால், என்னப் பண்ணுவது. சுஜி ஏற்கனவே திருமணம் ஆனவள். அவள் ஒரு இந்து. அவள் அட்லஸை விட ஆறு வயது மூப்பு. இப்படி தொடக்கத்திலிருந்தே சிக்கல் தான்.

என்னதான் செய்வது, மூளை அடக்கி வாசிக்க சொல்லும் போதெல்லாம் மனம் கேட்காமல் திமிரிக் கொண்டு அவளை கை கோர்க்கவே துடிக்கிறது.

கள்ளக் காதலுக்கு இவ்வளவு வேகமும் தாபமும் கூடாது என்கிறீர்களா. இல்லை, எனக்கு புரியவில்லை. வேடிக்கையாக இருக்கிறது. காதலில் ஏது பாகப் பிரிவினை? காதல் அன்பின் வெளிப்பாடு. அன்பு எப்படி தவறானதாக பொருள் படும்?

சரி, காதல் தவறில்லை காதலிப் போர் தவறானவர்கள் என்கிறீர்களா? மீண்டும் குழப்பம். அதுவும் எப்படி சாத்தியப்படும்? அன்பு என்பது சரியான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அதனை பரிமாறிக் கொள்வது எப்படி தவறானதாக ஆகும்?

மண்டை குடைச்சலாக இருக்கிறதா... எனக்கும் தான். இந்த கண் மூடித் தனமான அன்பின் வெளிப்பாடு காதலாகி கசிந்துருகி நிற்கிறது சுஜியின் முன்னால் அட்லஸுக்கு.

தொடரும்......

எழுதியவர் : தீப்சந்தினி (9-Aug-19, 1:50 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 319

மேலே