திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - 085 பொது - பாடல் 1

பாடல் 1: எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்ட(ன்)மிக
..நல்ல வீணை தடவி
மாசறு திங்க(ள்)கங்கை முடிமே லணிந்தென்
..உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்க(ள்)செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
..சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்லநல்ல வவைநல்ல நல்ல
..அடியா ரவர்க்கு மிகவே. 1

பொழிப்புரை:

மூங்கில்போன்ற தோளினை உடைய உமை அம்மையை ஒருபாகமாகக் கொண்டவனும், விடம் உண்ட கண்டனும் ஆகிய சிவபிரான் குற்றமற்ற திங்கள் கங்கை ஆகியவற்றை முடிமேல் அணிந்த வனாய் மகிழ்ச்சியுற்ற நிலையில் வீணையை மீட்டிக் கொண்டு என் உளம் புகுந்து தங்கியுள்ள காரணத்தால் ஞாயிறு, திங்கள் முதலான ஒன்பது கோள்களும் குற்றம் அற்ற நலத்தைச் செய்வனவாம். அவை அடியார்களுக்கும் மிகவும் நல்லனவே செய்யும்.

குறிப்புரை:

வேய்உறுதோளிபங்கன் - மூங்கிலின் இருகணுக்களுக்கும் இடைப்பட்ட பகுதியைப் போலும் தோள்களையுடைய உமா தேவியாரை இடப்பக்கம் உடையவர்.

ஞாயிறு ... பாம்பு இரண்டும் - சூரியன் முதலிய ஒன்பதுகோள் (கிரகங்)களும்.

ஆசு அறு நல்ல நல்ல - குற்றம் அற்ற நலத்தைச் செய்வன. அவை அடியார்களுக்கு மிக நல்லன நல்லன.

பாம்பு இரண்டும் - இராகுவும் கேதுவும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Aug-19, 8:44 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே