பூக்கள்

*********
எந்நாளும் மணநாள்
எவரும் வாழ்த்துவதில்லை பூக்களை.
*
எல்லோருக்கும்
பூங்கொத்து வழங்கி
வரவேற்கிறோம்
பூக்களுக்கு எதை கொடுத்து
வரவேற்பு செய்கிறோம்.?
*
பூக்களைப் பறித்து
கடவுளின் பாதத்தில்
காணிக்கையாக்குகிறோம்
எதைப் பறித்துப்
பூக்களுக்கு மரியாதை
செய்கிறோம்?
*
பூக்களைக் கொய்து
மாலையாக்கி கழுத்துகளில்
அணிவிக்கிறோம்.
அந்தக் கழுத்துகளைக் கொய்து
பூக்களுக்காய் ஒரு
மாலை செய்தோமா?
*
பூக்களால் சரம் பின்னி
மனையாள் கூந்தலில் சூடி
அன்பைக் காட்டுகிறோம்
அந்த அன்பில் துளியேனும்
பூக்களுக்குக் காட்டினோமா?
*
பூக்களால் மலர்வளையம் செய்து
பிணத்திற்கும் அஞ்சலி செய்கிறோம்
அந்தப் பிணத்தோடு பிணமாய் போகும் பூக்களுக்கு நாம்
அஞ்சலி செய்தோமா?
*
பூக்களால் தேரை அலங்கரித்து
ரதோற்சவம் நடத்துகிறோம்.
பூக்களுக்கென்று ஒரு
உற்சவம் செய்தோமா?
*
பூப்போன்ற புன்னகை
பூப்போன்ற இட்லி
பூப்போல மிருது
பூப்போன்ற மனசு என
பூவை உதாரணம் காட்டுகின்றோம்
எங்காவது நம்மைப்போல என்று
பூக்களுக்கு உதாரணம் சொல்ல
வழி செய்தோமா?
*
வனத்தையும் வனப்பாக்கத் தெரிந்த
பூக்களிடமிருந்து வாசத்தையும்
அடையும் பூக்களுக்கு
நாம் கைம்மாறு என்ன செய்தோம்?.
*
பிள்ளைகளை சுதந்திரமாய்
விளையாட முற்றத்திற்கு
அனுப்பிவிட்டு ,
முற்றத்தில் மலர்ந்தப் பூக்களைக்
காம்போடு கைது செய்து
கூஜா சிறையில் அடைத்து வைக்கிறோம்.
பூக்கள் என்ன தீவிரவாதிகளா?
*
பொய்களின் வழிபாட்டுக்காக
அலங்கார ஆடுகளாகி
மேடை பீடங்களில் பலியாகும்
பூக்களால் உங்கள் பிரசாரத்
திருவிழாக்கள் அமர்க்கலமாகலாம்.
ஆனால் பொய்களுக்குத்
துணைபோன அவமானம்
பூக்களுக்கு வேண்டுமா?
*
உங்களோடு புதையுண்டப் பூக்கள்
உங்கள் கல்லறைமீது
மீண்டும் பூக்கத் தொடங்கிவிடுகின்றன
உங்களால் ஏன் மீண்டும்
முடிவதில்லை?
*
ஒரு மனிதனுக்கு
பல குணங்கள் இருக்கின்றன
ஒரு பூவினத்திற்கு
ஒரே வாசனைதான்.
*
பூக்கள் பல நிறங்களில் பூத்தாலும்
அழகாகத்தான் இருக்கின்றன
மனிதர் பலவாக இருந்தாலும்
அழகாக இருப்பதில்லை.
*
காம்புகளின் மைதானத்தில் கூடும்
பூக் குழந்தைகளை காற்றோடு
சற்று விளையாட விடுங்கள்
அவை எமக்கு வாசனைக் கேடயம்
வாங்கிக் கொடுத்து மகிழ்விக்கும்
*
பூக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நாம்
தேன்குடிக்கச் சிறகடிக்கும்
வண்டுகள் பற்றி அறியாமலேயே
இருந்திருப்போம்
*
பூக்கள் பூக்காவிட்டால்
நாம் கனிகள் பற்றிய
கனவுகள் இல்லாமல் இருந்திருப்போம்
*
பூக்கள் இல்லையென்றால் நாம்
வண்ணத்துப் பூச்சிகளுக்கே
பூவெனப் பெயர் சூட்டியிருப்போம்.
"
பூக்கள் இயற்கையின்
ஒவியங்கள்
வாருங்கள் ஆராதனை செய்வோம்
*
கல்லை வைத்துக் கடவுளாய்
வணங்கப் பழகிக் கொண்ட
நாம் இனி
பூங்கன்று நாட்டித் தெய்வத்தை
வளர்தெடுப்போம்.
*
தெய்வம்
வரமாக நமக்கு
வாசனையும் வனப்பும் நம்
வாசலிலேயே தரும்.
**
மெய்யன் நடராஜ்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (3-Sep-19, 4:04 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : pookal
பார்வை : 114

மேலே