இஸ்லாமியனே
இருண்டு கிடக்கிறது
எம் வாழ்வு
துரத்தியடிக்கப்படும்
அநாதைகளாய் சிதறுண்டு
கேட்பாறின்றிக் கருகுகிறது
எம் எதிர்காலம்
கண்மூடித்தனப் போக்கால்
கல்வியிழந்து
கலையிழந்து
கூடாதவையாக்கப் பட்டதால்
அறிவிழந்து
அறமுமிழந்து
அரசியலின் பகடைகளாய்
உருட்டப்பட்டு
அகதிகளாய் விரட்டப்பட்டு
இன்னும் விழிக்காமல்
உலகவாழ்க்கை ஒன்றுமில்லை
இறப்பின்பின்
உள்ளவாழ்வை பார்ப்போமென்று
அடுத்தவர் வீடெரிந்தால்
நமக்கென்ன
நண்பனின் நாடழிந்தால்
நமக்கென்ன
உலகத்தில் நடப்பதெல்லாம்
யூதன் சூழ்ச்சி
அறிவியலின் ஆக்கமெல்லாம்
யூதன் சூழ்ச்சி
என்றே புலம்பித் தள்ளி
மூன்றுநாள்
நாற்பதுநாள்
நாலுமாதம் மூட்டை
முடிச்சுகள் கட்டிக்கொண்டு
உன்னதமார்க்கம் கற்போமென்று
உலகெல்லாம் சுற்றித்தான்
என்ன பலன்??
பள்ளிக்குள் அரசியலா
ஹராம் என்போம்
சமூக சிந்தனையா
ஹராம் என்போம்
உள்ளதை சொல்பவரை
யூதன் என்போம்
சிந்தித்து செயல்படென்றால்
பாவி என்போம்
அநியாய படுகொலைகள்
கண்டபின்னும்
அதைப்பற்றி ஏதொன்றும்
தெரியாதென்போம்
சிந்தனை என்பதையே
மறந்துவிட்டு
பழம்பெருமைமட்டும்
தினம் பேசித்திரிவோம்..
எங்கோ யாரோ கண்டு
அறிந்த ஒன்றை
குர்ஆனில் உள்ளதென்று
பீற்றிக்கொள்வோம்
சமூகத்தின் அறிவுக்கண்ணை
மழுங்கடித்து
சந்தனக்குடங்களில்
குளித்துக்கொள்வோம்..
எப்போது நமக்கிந்த
விடியல் வரும்
கல்லாமை பொல்லாப்பிணி
என்று மறையும்??
வெடிகளின் வெளிச்சத்தில்
கருகும் எம் பிஞ்சுகள்
நரகத்தின் வாசலில்தான்
உயிர் விதைக்கின்றன..
கண்மூடிகளாய் பிரசங்கம்
செய்து
பிரார்த்தனைகள் பெயரால்
வயிற்றையும் நிரப்பி
வேறெந்த அறிவும் பெற்றிடாது
தான்சார்ந்த சமூகத்தினையே
ஊனமாக்கும் குருமார்கள்
உருவாக்கிடும் பாடசாலைகள்
அறிவியலையும்
அரசியலையும்
சமூகத்தினையும்
சகோதரத்தையும்
என்றைக்கு வழிவிடுமோ
அன்றைக்கு எழுந்திடும்
இந்த மடமை சமுதாயம்...
வலிகளுடன்
Rafiq