தேன்நிலாவின் மனநிலை

அன்றைய நாள் அவளுக்கொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கப்போகின்றதென்பதை அறியாதவளாய் சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள் தேன்நிலா.வரிசையில் காத்திருப்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்தபடி, இலக்கம் 120 என்ற நம்பரை அழுத்தியபோது; அவளிடம் வந்த நபருக்குரிய மருந்துப்பெட்டிகளின் லேபிளை கணனியில் எழுதிக்கொண்டிருந்தாள் அவள். நன்கு உயர்ந்த வாட்டசாட்டமான மனிதர், ஆனால் சீனி வருத்தம்,உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு என ஒரு பட்டியலே இடப்பட்டிருந்தது இவருக்கான மின் மருந்துச்சீட்டில்....

பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது மருந்தகம் ஒன்றில் பகுதிநேர வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாள் தேன்நிலா. வழமையாக சனிக்கிழமைகளில்தான் இவ்வாறு வேலை செய்தாள். மருந்துகளை வாங்க வருகின்ற நோயாளர்களுக்கு அவற்றின் பாவனை பற்றி ஆலோசனை வழங்குவதில் அலாதி பிரியம் அவளுக்கு.

ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு விதம். அதிகமாக வயதானவர்களே இங்கு வருவார்கள். குழந்தைகள், சிறுபிள்ளைகள் உள்ள இளங் குடும்பத்தினரையும் காணலாம். சில இளம் வயதான பெண்பிள்ளைகளும் தங்களுடைய குடும்பக் கட்டுப்பாட்டு மாத்திரைகளை வாங்குவதற்கு வருவார்கள். இவர்களோடு பேசுவதும், அவர்களுடைய பல்வேறுபட்ட மருந்துப்பாவனைகளுக்கான கேள்விகளுக்கு பதில் கூறுவதும் தேன்நிலாவிற்கு மனத்திருப்தியைக் கொடுக்கும்.

அவளுடைய சக பணியாளர்கள் எல்லோருமே நோர்வேஜியர்கள். அங்கு வரும் நோயாளர்களில் கிட்டத்தட்ட தொண்ணூறு விகிதமானவர்கள் நோர்வேஜியர்கள்தான். ஒரு சில வெளிநாட்டவர்களும் இங்கு வருவதுண்டு. பல சமயங்களில் அவள் தன்னை நினைத்து பெருமையடைவதுண்டு. எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒரு மொழியை தன்னால் சரளமாக பேச முடிந்தது. அதுவும் இந்த நாட்டவர்களுக்கே ஆலோசனை வழங்கும் அளவுக்கு; இது அவளுக்கே தெரியாத விடை.

அந்த மருந்தகத்திற்கு வரும் பல வயதானவர்கள் தங்கள் மருந்துகளை வாங்கிக் கொண்டு விடைபெறும் போது; “இந்த மருந்துகளால்த்தான் நான் இன்னும் கொஞ்சக்காலம் வாழ்வதற்கு வாய்ப்பிருக்கின்றது” என்று மகிழ்ச்சியோடு கூறிச் செல்வார்கள். வாழ வேண்டும் என்ற ஆவலை நாள்தோறும் விதைத்துச் செல்பவர்கள் இவர்கள். 1925 ஆம் ஆண்டு பிறந்தவர்கள் கூட தங்கள் மருந்துகளை வாங்கிச் செல்ல வரும்போது மனம் பூரித்துப்போகின்றது.

வயதானவர்களுக்கான மருந்துச் செலவுகளின் 70-80 விகிதத்தை அரசாங்கமே நேரடியாக மருந்தகங்களுக்கு செலுத்துகின்றது. ஓய்வூதிய காலத்தில் ஒய்யாரமான வாழ்க்கை வாழ்வதோடு மட்டுமன்றி, தங்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுக்கும் பக்க பலத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் இந்த முதியவர்கள்.

இங்கு வருபவர்கள் ஓரிரு வார்த்தை உரையாடிவிட்டுத்தான் தங்கள் மருந்துகளை வாங்கிச்செல்வதுண்டு. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் வாழ்ந்தவர்களுடன்கூட நேரடியாக உரையாடும் வாய்ப்பைப் பெற்றதில் மகிழ்ச்சியடைந்திருக்கின்றாள் தேன்நிலா.

அந்த நபருக்கான மருந்துகளை ஒழுங்கு செய்து, அவற்றை சக பணியாளர் சரிபார்த்து; சிபாரிசு வழங்கியதும் அந்த நபரின் சில மருந்துகளின் பாவனை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர், தனது கட்டணத்தை( 20% ) செலுத்தி “ தொடர்ந்தும் இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும்” என்று கூறி விடைபெற்றுச் சென்றார் அந்த நபர்.

இப்பொழுது இலக்கம் 121 என்ற எண்ணை அழுத்துகிறாள் தேன்நிலா.அப்பொழுது இரண்டு இளம் ஆண்கள் வருகின்றார்கள். ஒருவர் சரளமாக நோர்வேஜியமொழி பேசுகிறார். மற்றவரிடமிருந்து சிறிது திக்கி திக்கி, வசனங்கள் முறிவடைந்து வருகிறது. பார்த்தால் அரபிக் காரரின் தோற்றம். சிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் போலும் இருக்கின்றது.

“ வணக்கம், நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?” இது தேன்நிலா.

“ நாங்கள் எங்கள் உறவினர் ஒருவரின் மருந்தை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கின்றோம்.” என்றான் அவர்களில் ஒருவன்.


“ நீங்கள் அந்த நபரின் மருந்துகளை வாங்கிச் செல்வதற்கான அனுமதியை அந்த நபரிடமிருந்து எழுத்துமூலம் பெற்றுக்கொண்டு வந்திருக்கின்றீர்களா?” என்று கேட்டாள் தேன்நிலா.

அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு “ ஏன் உன்னால் தரமுடியாதா” என்று சற்று சினத்தோடு கேட்டான், மற்றவன்.

“ இல்லை. ஒருவரின் மருந்துகளை அவருடைய அனுமதியின்றி மற்றவர்களிடம் கையளிப்பதற்கு எங்களுக்கு அனுமதியில்லை” என்று தேன் நிலா கூறியதும், அவர்களுக்கு கோபம் வரவே வாயில் வந்தபடி “ நீ ஒரு கடினமான ஆள், உனக்குத்தான் மருந்தை எங்களிடம் தர விருப்பமில்லை” என்று கூறிவிட்டு மருந்தகத்தை விட்டு வெளியேறிய அதே தருணம் தேன்நிலாவை முறைத்துப்பார்த்து விரல்களை மடித்து நடுவிரலை மட்டும் நீட்டி இவளுக்கு காண்பித்துவிட்டுச் சென்றான்; அவர்களில் ஒருவனான அந்த நன்கு சரளமாக நோர்வேஜிய மொழியில் பேசியவன்.

தேன்நிலாவிற்கு இது ஒரு புதிய அனுபவம். இவ்வாறான அனுபவத்தை அவள் ஒருபோதும் பெற்றவள் அல்ல. உடலெங்கும் யாரோ ஊசியால் குத்துவது போன்ற உணர்வு.

நோயாளர்களுடைய உடல் உபாதைகளுக்கேற்ப உள உணர்வுகளிலும் மாற்றத்தை வெளிப்படுத்துவார்கள் என்று படித்திருக்கின்றாள். உதாரணமாக உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அதிக பொறுமை இருக்காது, அப்படியானவர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்கக் கூடாது, அவர்களுடைய தேவையை இயன்றளவு விரைவாக முடித்து கொடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும்; ஒரு வேளை நோயாளர்கள் கோபப்பட்டு பேசினால் அதை தாங்கிக் கொண்டு; அவர்களின் தேவையை புன்னகைத்துக்கொண்டே விளக்கங்கள் கூறி நிறைவேற்றி அவர்களை அனுப்பிய பின், தமது கோபத்தை யாரும் காணாதபடி பின் அறையில் சென்று மேசையில் இரு கைகளாலும் ஒருமுறை மெல்ல ஓங்கி அடித்து தணித்துக்கொள்ள வேண்டும் என்பதை புத்தகப் பாடமாக கற்றுக்கொண்டவள் தேன்நிலா.

ஆனால் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களைக்கூட தாங்கிக் கொள்ள வேண்டுமா? என்று மனதுக்குள் புழுங்கியவாறு நின்றவளிடம். அந்த மருந்தகத்தில் பணிபுரியும் சக பணியாளர் லீசா அவளை நெருங்கி “ நீ நடந்து கொண்ட விதம்தான் சரியானது. நீ எப்படி அவர்களை கையாளுகின்றாய் என்பதை நான் பார்த்துக்கொண்டுதான் நின்றேன். கெட்டிக்காரி” என்று தோழில் தட்டி விட்டு

“ அவர்கள் கையால் காட்டியதையும் பார்த்தேன், கவலைப்படாதே , தனிப்பட்ட ரீதியாக எதையும் எடுத்துக்கொள்ளாதே. இந்த இடத்திலேயே மறந்துவிடு. எனது நீண்ட நாள் அனுபவத்தை வைத்துக் கூறுகின்றேன். இப்படி நடந்து கொள்ளும் மனிதர்களுக்கு இன்றைய நாள் சரியில்லை என்று நினைத்துக்கொள். இவ்வாறு நடந்து கொண்ட மனிதர்கள் சில நாட்கள் கழித்து இங்கு மீண்டும் திரும்பி வந்து மன்னிப்பு கேட்டிருக்கின்றார்கள்” என்றாள்.

பொங்கி எழுந்த தேன் நிலாவின் கோபமும், மனப் புழுக்கமும் ஊதிக் கட்டப்பட்டிருந்த பலூனின் காற்று படக்கென்று வெடித்து வெளியேறியதுபோல் இலகுவாகியது. “எப்படி உன்னால் இப்படி இலகுவாக எடுத்துக்கொள்ள முடிகிறது, லீசா?” என்று கேட்டாள் தேன்நிலா.

“எனக்கு இப்படிப்பட்ட மனிதர்களை சந்திக்கும்போது கோபம் வருவதில்லை. சிரிப்புத்தான் வருவதுண்டு, பாவம் என்றுதான் நினைப்பேன். நான் முன்பு கூறியது போல அவர்களுக்கு இன்றைய நாள் சரியில்லை”
எங்களுடைய மனதை இலகுவாக வைத்துக்கொண்டால், இவ்வாறான தருணங்களை சமாளிப்பது மிகவும் இலகுவானது” என்று லீசா கூறி முடித்தபோது தேன்நிலாவின் கோபம் காற்றில் வெடித்துப் பறக்கும் பஞ்சாக பாரமற்று இலகுவாயிருந்தது....



(ஒரு கருத்தை உள்வாங்கி அதற்கு பொருள் கொடுப்பதென்பது ஒவ்வொருவரதும் அன்றைய மன நிலையை பொறுத்தது. ஒரு கூற்றுனுடைய பொருள். அந்தக் கூற்றை உள்வாங்குபவரின் மன நிலைக்கேற்ப பல பொருள்படும் என்பதுதான் உண்மை)
.......
யோகராணி கணேசன்
04.புரட்டாதி.2019

எழுதியவர் : யோகராணி கணேசன் (9-Sep-19, 7:59 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 110

மேலே