எனது எழுதுகோல்

என்னுள் எழும் எண்ணங்களை
விழிகளில் விழும் காட்சிகளை
படித்து அறியும் செய்திகளை
செதுக்கி சீராக்கும் உளிபோல
படைப்புகள் பதிவிட எனக்குதவும்
தமிழன்னை அளித்த செங்கோல் !

எனது எழுதுகோல் !

சமுதாய சீரழிவிற்கு வித்திடும்
சாதிமத வெறியை தூண்டிவிடும்
வன்முறை போராட்ட களத்தினைக்
கண்டதும் துடிக்கும் என்னுள்ளம்
வெடித்து சிதறும் எரிமலையாய்
நெருப்பென வரிகளை வடித்திடும்

எனது எழுதுகோல் !

கடிந்துக் கூறும் கருத்தினையும்
மடித்து சாப்பிடும் தாம்பூலமாய்
மென்றுத் தின்றிடும் சுவையோடு
நன்று புரியும் வார்த்தைகளாக
பொங்கும் உணர்வை உரையாக
உங்கள் பார்வைக்கு வைத்திடும்

எனது எழுதுகோல் !

மாறாதக் கொள்கை நிலைப்பாடு
மண்ணில் வாழும்வரை என்னோடு
உள்ளத்தில் எழுவதை உரிமையோடு
எடுத்துக் கூறுவதும் என்கடப்பாடு
வடித்து வாரத்துக் கொடுப்பதோடு
கடமையென ஆற்றிடும் கண்ணாக

எனது எழுதுகோல் !

பழனி குமார்
10.09.2019

எழுதியவர் : பழனி குமார் (10-Sep-19, 10:11 pm)
சேர்த்தது : பழனி குமார்
Tanglish : enathu ezhuthukol
பார்வை : 270

மேலே