வாழ்ந்து பார்க்கலாம் வா…

வாழ்கை என்ன
அவ்வளவு கடினமானதா.?
மோதித்தான் பார்க்கலாமே..

கோழையாய் நடுங்கி
சாவதை விட
வீரனாய் வாழ்ந்திட
வழிதனை செய்வோம்
வா…

கூடா நட்பை
வேரோடு வெட்டியெறி…
உயிர்கொடுக்கும்
உன்னத நட்பை
உள்ளத்தில் நிறுத்து
இறுதிவரை…

உன் வளர்ச்சி கண்டு
புறம் பேசித்திரியும்
கயவர்களின் கள்ளப்பேச்சினில்
கவனத்தை சிதறவிடாதே…
அர்த்தமில்லா பயத்தில்
அலறும் ஓநாய்களின்
ஊளை சப்தங்களவை
விடிந்ததும் காணாமல் போய்விடும்….

இரக்கமில்லா மனிதரிடையே
கொட்டிவிடாதே உன் வேதனைகளை…
வேடிக்கை என்றபெயரில்
வார்த்தை வேல்தனை எய்திடுவார்…
உணர்ச்சியற்ற பிணங்களிடமிருந்து
வேறு எதை நீ எதிர்பார்க்க முடியும்…

மறந்தும் நிந்தித்து விடாதே
இதுபோன்ற மனிதர்களை
பாவம்…
கருணையின் பெருமையினை
உணராதவர்கள்…
அன்பின் ஆழத்தை
அறியாதவர்கள்…
உன்னால்
அறிந்துவிட்டுப் போகட்டுமே…

வாழ்க்கைப் போராட்டத்தில்
அன்பினை கவசமாக்கு…
கோபத்தினை குறுவாளாக்கு…
பொறுமைதனை கேடயமாக்கு…
தன்னம்பிக்கைதனை உந்தன்
போர்வாளாக்கு…
வாழ்க்கை உன் வசப்படும்

எழுதியவர் : சகாய டர்சியூஸ் பீ (11-Sep-19, 5:08 am)
சேர்த்தது : சகாய டர்சியூஸ் பீ
பார்வை : 192

மேலே