காலம்
காலம்
இறைத்தன்மையின் தனித்த
ஒரு பெருங்கூறாய்
திகழும் காலம்
ஓடுகிறது
இறைத்த மணித்துளிகளால் ஜனித்த ஓர் பேராறாய்...
மதிப்பவரை ஏற்றியும்
மதியாதவரை எற்றியும்விடும்
இயல்புடையதாயிருக்கிறது காலம்!
காலமது
நொடிக்கு நொடி மாறும்
காட்சிகளின் சாட்சியாகிறது!
நொடித்து நொந்தவர்களை
மீட்டெடுக்கும் மீட்சியாகிறது!
பலப்பல நிகழ்வுகளுக்கு காலத்தை கைகாட்டும்
மனித இனம்
பலப்பல கேள்விகளுக்கு
பதில் கூறவும்
காலத்தையே பணிக்கிறது...
காலம் சில
நிகழ்வுகளை
கட்டாயமாக்குகிறது....
சிலவற்றை கட்டுக்குள்
வைக்கிறது..
காலகாலமாய் காலத்தின்
இயல்பு இதுவே என
இயன்றபடி நமை
கடந்து சென்றுகொண்டிருக்கிறது
இந்த கணத்தில் காலம்..