விதியை எழுதும் மை

பிறந்திட - எழுந்திட
வளர்ந்திட - வாழ்ந்திட
விதிகளை எவரும்
விரும்பி எழுதிட
இங்கு
எழுதுமை ஆனது காதல்!

வாலிபம் வரைக்கும்
வதைத்தத் துயர்களைத்
துடைத்துத் தொலைத்து
மீ;ண்டும் புதிதாய்
பிறப்பெனப் பிறந்திட…………

தளர்ந்த உணர்வும்
தாழ்வுற்ற மனபலமும்
கலைந்த கனவுகளும்
கானலாய் மரித்தினிதே
புலர்ந்தது புதுவிடியலெனப்
புறப்பட்டு எழுந்திட…….

நேசிக்கவும்
வாழ்வினை வாசிக்கவும்
இணையின் காதலை
ஏற்றிப் பூசிக்கவும்
அகத்துள் மென்மையும்
புறத்தில் மேன்மையும்
பொலிவுற்று வளர்ந்திட……

இணைகளாய்ப் பிணைந்து
இல்லறமும் கூடி
கொஞ்சிக் குலாவி
குடும்பமும் ஆகியே
அஞ்சுவை மழலைகள்
கண்டே காலத்தால்
இன்புற்றே வாழ்ந்திட…..

விதிகளை எவரும்
விரும்பி எழுதிட
இங்கு
எழுதுமை ஆனது காதல்!
*
மயங்கிட - மடிந்திட
வீழ்ந்திட - தாழ்ந்திட
வீதிக்கும் வந்திட
விதிகளை எவரும்
விரும்பி எழுதிட
இங்கு



எழுதுமை ஆனது காதல்!

இனித்த நினைவுகள்
ஏமாற்றம் ஆகவே
கனத்த மனதுக்குள்
காதலும் வாட்டவே
நொடித்தவர் வலிமிகுத்து
நொந்து மயங்கிட….

உரைத்த வார்த்தைகள்
உறுதியிழந்ததால்
தொட்டணைத்த விரல்கள்
தூர நகர்ந்ததால்
விட்டகன்று வாழவும்
விழையா மனத்தாலே
விடமருந்திப் பலரும்
வீழ்ந்து மடிந்திட….

செல்வி அவள் காதல்
கல்வியலும் பெரிதெனவே
தொலைநோக்கு மறந்திழந்து
தோல்விகளைக் குவித்தடுக்கி
அறுந்துவிட்ட பட்டம்போல்
அலைக்கழிந்து வீழ்ந்திட…

சுற்றித் திரிந்ததெல்லாம்
சுற்றத்தார் தெரிந்திருக்க
தன்னுணர்வு மறந்து
தற்காப்பும் மிகமறந்து
காதலும் போய் கற்பும் போய்
தகைமைக் குறுகியதால்
தன்மானம்; தாழ்ந்திட….

வீடும் துரத்தி
வேண்டுவாரும் துரத்தி
கண்மறைத்தக் காதலால்
பித்தும் பேதைமையும்
பின்துரத்தும் வேதனையால்
விலாசமே இல்லாதுபோல்
வீதிக்கும் வந்திட….

விதிகளை எவரும்
விரும்பி எழுதிட
இங்கு
எழுதுமை ஆனது காதல்!

- மீனாள்செல்வன்

எழுதியவர் : மீனாள்செல்வன் (3-Oct-19, 4:21 pm)
சேர்த்தது : மீனாள்செல்வன்
பார்வை : 283

மேலே