பொன்னென மின்னும் பெண்

==============================
நெற்றித் திலகம் நிலைக்கத் தினமிறையைச்
சுற்றிவரங் கேட்டிடுஞ் சுந்தரியர் – பற்றின்றி
வாழும் பதியவன் வாய்க்கொருப் பூட்டிட்டு
பாழுங் கிணந்தள்வர் பார்
*
பாரில் சிலமாதர் பாச மழைபொழிந்து
ஊரில் தனைபோன்ற உத்தமிகள் – தேரில்
வலம்செல்லும் தெய்வ வடிவென்று நாளும்
நிலம்நோக்கிச் செல்லும் நெகிழ்ந்து
*
நெகிழ்ந்து நடைபோட்டு நெஞ்சகத் துள்ளான்
மகிழ்ந்து உறவாட மட்டும் – முகிலெனப்
பெய்து முடித்து பெருமழை விட்டதெனப்
பொய்யுற் றுறங்கும் புளித்து.
*
புளித்தப் பழங்கண்ட பொல்லா நரியாய்
களிக்கக் கதைசொன்ன காதல் – துளிகள்
உளிபட்டக் கல்லில் ஒளிர்ந்த சிலையாய்
துளிர்க்க மறுக்கும் துடித்து
*
துடிக்கும் மனத்துள் தொடர்கதை யாகி
நடிக்கும் பலர்வாழ்க்கைப் பாதை – வெடித்துச்
சிதைந்து விரிசலுக்குள் சிக்கித் தவித்துப்
வதைபடக் காண்போம் வளர்ந்து
*
வளர்ந்த குழந்தைகள் வைத்திருப்ப தாலே
தளர்ந்து சகித்திடும் தன்மை – வளர்த்துப்
பொறுமையை மிஞ்சியப் பூமியென வாழ்ந்து
வறுமைதனை வெல்வர் வளைந்து
*
வளைந்து கொடுத்திங்கு வாழ்ந்திடும் வாழ்வின்
நெளிவுசுளி வென்பதனை நேராய் – ஒளிமறை
வின்றிகற் றோங்கும் விளக்குகள் இல்லத்தில்
பொன்னென மின்னிடும் போற்று.
**
போற்றிடும் நெஞ்சின் புகழ்பட்டு வாழ்வினை
மாற்றிட வைக்கும் மனத்தினை – தூற்றுதல்
விட்டுத் தொடர்ந்தென்றும் தூயவன்பால் பாராட்டு
பட்டதும் வேரூன்றும் பார்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (13-Oct-19, 2:57 am)
பார்வை : 190

மேலே