கரிசனம் வளர்ப்பாய்
=====================
பிரச்சினை யெனுஞ்சிறு பலூனைச் சற்றுப்
பெரிதென வூதியே பார்த்துத் துன்பம்
வரவிடு வதற்கென வழிகள் செய்து
வதந்திகள் பரப்பிடு வாரின் நெஞ்சில்
இரக்கமும் கருணையு மில்லை, என்றும்
எடுத்ததும் கவிழ்க்கிற எண்ணம் மட்டும்
அரவமாய்த் தீண்டிட ஆசை வைத்து
அடிமன எரிமலை அனலை கக்கும்.
**
பிரிவினை வளர்த்திடப் பிரியம் கொள்ளும்
பிறப்பிடம் மனமென பெயரை வாங்கி
விரிவுரை நடத்திட விரிசல் தன்னை
விரிவுகள் படுத்தியே வரிந்து கட்டி
சரிநிகர் வாவென சண்டைக் காக
சமரசக் கழுத்தறுக் கின்ற கத்தி
அரிவாள் அனைத்தும் ஆட்டிக் காட்டும்
அறிவால் உணர்கிற ஆற்றல் நீக்கும்.
**
பேசித் தீர்க்கும் பேரை வாங்கிப்
பேசா திருக்கப் பார்த்தி டாமல்
வீசிக் கொல்லும் வாளாய் வார்த்தை
வீசிக் கொல்லும் வீரத் தனத்தை
கூசி டாமல் காட்டு கின்ற
கொடுங்கு ணத்தைக் கொன்ற ழித்து
யோசித் தியங்கும் யூகம் வைத்தால்
யாகம் செய்யா யோகம் கூடும்
*
அழிப்பதற் கெனவொரு அரைநொடி போதும்
ஆக்குதற் கிந்த ஆயுளும் போதா
அழிவதற் காயிவ் வவசர வாழ்க்கை?
ஆக்கிட வளர்நீ அன்புறும் வேட்கை.
பொழிவதற் கெனவொரு புன்னகை போதும்
புயலையும் தடுத்திடும் பாரதை நீயும்
கழிவென விருக்கிற கரிமனம் துடைத்து
கரிசனம் வளர்த்திடு கவலைகள் விடுத்து.
**
மெய்யன் நடராஜ்