ஆதலால் காதலால்

பூக்களைச் சேகரித்து
புதுவீடு கட்டி -உள்ளே
புதையலாய்
வைக்கிறாய் என்னை
இதமாய் உள்ளே கதகதப்பாய்-உன்
இதயத்தில் இருக்கிறேன்


கவலை விடாமல் துரத்தும்போது
கள்வன்போல் படுக்கைமேல்
கவனமாய்
விழுகிறேன்
உனக்குத் தெரியவேண்டாம்
உனக்கும் கவலைவேண்டாம்

எனக்கே தெரியாமல்
என்மேல் ஊர்ந்து
வணக்கம் சொல்லி கன்னத்தில்
வாய்வைத்துக் கொள்கிறாய்


உன் உடலுக்குள் என்னை
ஒளித்துவைத்துக் கொள்கிறாய்
ஒவ்வொரு இரவும் என்னை
புதுப்பித்துத் தருகிறாய்

அந்தநாள் ஞாபகம் .....
மன்மததேசத்தின்
மகாராஜா -ராணியாய்
மாலை மாற்றிக்கொண்டோம்
காதல் அரண்மனையை
கழிப்பறை அளவு கூட
கட்ட வசதியில்லை
குடும்பசொத்தாய்
கோமணத்துணியுமில்லை

மன்மததேசத்தின்
மகாராஜா நான்
வறுமைமைக்கெதிராக
வாளெடுக்க வக்கில்லாமல்
வயர்சேரில் சாய்ந்துவிட்டேன்

இன்னும் வாழ்கையில்
மிச்சமென்ன இருக்கு
சிரிப்போடு சொல்கிறாய்

காதல் ….
ஆமாம் காதல் …..

கண்ணுக்குத்தெரியாத ஒரு
கள்வன்போல் வந்து ஒருமுத்தம்
கைகளில் ஏந்திக் கொள்கிறேன்
சிரிக்கிறாய்
கனக்க வில்லையா நான் ?
கண்னால் சிரிக்கிறாய்
மூன்று மாதமும் மிச்சமும் எனக்கு

உயிர்த்தெழந்த ஏசுவைப்
பார்த்தது போல்
வியந்து நிற்கிறேன்
முத்தம்தர முயல்கிறாய்


Like a gentle breeze
Steal my breath………

எழுதியவர் : (17-Oct-19, 5:00 pm)
சேர்த்தது : RAJMOHAN
பார்வை : 146

மேலே