உருமாறும் ஓநாய்கள்

சில மிருகங்களுக்கு எப்போதும் புரட்டாசி மாதம் தான்....
எம்மண்ணில் பெண்பிள்ளைகளின் அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது....

பால்முகம் மாறா பிஞ்சுகளிடம் என்னதான் எதிர்பார்க்குமோ..?
இந்த இரத்தம் உறிஞ்சும் அட்டைகள்....
குருதி குடிக்க விருப்பந்தானோ..!

தாவணி போடா இளஞ்சிட்டுக்களிடம் என்னதான் எதிர்பார்க்குமோ..?
இந்தப் பிணந்தின்னிக் கழுகுகள்....
சதையை உண்ணும் பசிதானோ..!

களிப்பூட்டும் இளங்குமரிகளிடம் என்னதான் எதிர்பார்க்குமோ..?
இந்த உருமாறும் ஓநாய்கள்....
தேகம் மீது கொண்ட மோகந்தானோ..!

அன்பைப் பொழியும் தாய்மையிடம் என்னதான் எதிர்பார்க்குமோ..?
இந்த இரத்தக் காட்டேரிகள்....
இச்சையின் மிச்சத்தின் உச்சந்தானோ..!

இதைக் கண்டு கேட்டு மென்று விழுங்கும் ஓநாய்க் கூட்டங்களே..!

இது வள்ளலார் பூமி தானா என எண்ணங்கள் எழுகிறது....
நெஞ்சு வண்ணங்கள் அற்று வெக்கை உமிழ்கிறது....

இதை எழுத எழுதுகோல் எடுத்தால் இரத்தம் கசிகிறது....
வார்த்தைகளில் சிவப்பு படிகிறது...!!

வேல் முனியசாமி...

எழுதியவர் : வேல் முனியசாமி (19-Oct-19, 12:03 am)
Tanglish : urumaarum onaaikal
பார்வை : 285

மேலே