அரவணைக்கத் தயங்காதீர்
பத்துத் திங்கள் கருவறையில்
பாசத் தோடு சுமந்திருந்தாள்!
தத்தித் தவழ்ந்து நடைபழகத்
தன்னை மறந்து மகிழ்ந்திருந்தாள்!
முத்த மழையால் குளிர்வித்தாள்
மூச்சாய்க் கருதி அரவணைத்தாள்!
பொத்திப் பொத்தித் தான்வளர்த்தாள்
புதிராய் ஒன்றும் தோன்றவில்லை!!
நாளும் பொழுதும் பறந்தோட
நானும் வளர்ந்தேன் பொலிவோடு!
ஆளைப் பார்த்தால் ஆணுருவம்
ஆனால் பெண்மை உள்சுரக்கும்!
நீளும் இரவு கண்ணீரில்
நெஞ்சங் கசியும் செந்நீரில்!
மீள வழியே தெரியாமல்
மிரண்டேன் துவண்டேன் பெண்ணுளத்தில் !
புரிந்து கொள்ள யாருமில்லை
பொய்யாய் வேடம் பிடிக்கவில்லை!
திரித்துக் கதைகள் வெளிக்கிளம்பத்
திகைத்த தாயும் வெறுப்புமிழ்ந்தாள்!
விரிந்த உலகில் ஆறுதலாய்
விழிநீர் துடைக்க விரலின்றிப்
பிரியத் துணிந்தேன் உறவுகளைப்
பிரியா விடையும் பெற்றுவிட்டேன்!!
பட்ட துன்பம் கொஞ்சமில்லை
பரிக சிப்பும் நிற்கவில்லை!
தொட்டுப் பின்னால் தொடர்ந்துவந்து
தொல்லை கொடுத்த பாதகரை
வெட்டிச் சாய்க்க மனந்துடித்தும்
வெறுப்பை வெளியில் காட்டவில்லை!
சுட்ட கல்லே உறுதிபெறும்
சுயத்தை யுணர்ந்தே அமைதிகொண்டேன்!
சொல்லில் வடிக்க வியலாத
சோகத் தில்நான் கரைந்துவிட்டேன்!
கல்லுக் குள்ளுந் தேரைக்குக்
கருணை யோடு வழிவைத்த
நல்ல வன்தான் இறைவனவன்
நைந்த வுள்ளம் தேற்றிவிட்டான்!
இல்லை யென்றால் மண்ணுலகில்
இல்லா மல்தான் போயிருப்பேன்!!
பழித்துப் பேசும் உலகோர்முன்
படித்துப் பணியில் அமர்ந்தபடி
உழைத்தேன் கவனம் சிதறாமல்
உயர்வை எட்டிப் பிடித்துவிட்டேன்!
பிழையாய்க் கருதிப் புறக்கணித்தோர்
பெருமை யுடனே அண்டிவர
மழைபோல் ஈர மனத்துடனே
மகிழ்வாய் உதவி செய்கின்றேன்!!
தானே விரும்பி ஏற்றதுவா
தலைவன் படைத்த படைப்பன்றோ?
ஊனோ டெலும்பி னாலான
உடலைத் தானே கொண்டுள்ளோம்?
ஏனோ இழிவாய் எண்ணுகிறார்
எள்ளி மகிழ்வு கொள்கின்றார்!
ஆனால் இனியும் வதைக்காதீர்
அரவ ணைக்கத் தயங்காதீர்!
சியாமளா ராஜசேகர்