நான் என்னை கடக்கும்போது

_______________________________

நான் என்னை கடக்கும்போது

நாங்கள் பார்க்கும்போது
(அது கவனிப்பது அல்ல)
முதலில் செலவழிப்பது
ஒரு புன்னகையில் கொஞ்சம்.

பார்த்தல் தொடர்ந்து ஆழமுற்று
நிஜமாய் எங்களை உருக்குகிறது.
அதை வேண்டுமானால்
உற்றுநோக்கல் என்பேன்.

பார்வைகள் விழிகளுக்குள்
மட்டுமீறி ஊடுருவி செல்கிறது.

எங்கள் இருவருக்கும்
வெவ்வேறு சலன தூரங்களில்
அப்பிணைப்பு நீண்டதாகிறது.


குழப்பமூட்டும் பயங்களும்
திகைப்பூட்டும் வழிகளும்
உருகிக்கரையும் நொடியிலிருந்து

இனம்புரியாத பதைபதைப்பு
அதிசயம்போல் தீவிரமடைந்து
சொல்லொண்ணா துக்கங்களை
அவசரமாய் ஒன்று திரட்டுகையில்
அலைகளை திருப்பி எடுக்கும்
பொறுமையற்ற கடலாக்குகிறது.

நாங்கள் இருவரும் பின்
பரிணமிக்கிறோம் இயல்பாய்.
கூட்டு பிரார்த்தனையின் லஹரியே
எங்களில் பரவசமாய் முகிழ்க்கிறது.

ஒரு காட்டேரி விலகி செல்கிறது.
அந்த நிழல் செத்து மடியும்
பூமிக்கு மேல் காற்று துடிக்கிறது.

அறையின் வெளிச்சம்
எங்களுக்கு வெப்பமாகவும்
எங்களுக்குள் குளிர்ச்சியாகவும்
தொன்றுதொட்டு இருப்பதுதான்.

இப்போதும் அதுவே ஆகிறது.

நாங்கள் எங்களுக்குள்
நீக்கமற நிரம்பியதும் நாங்களே
தோட்டமென்று உணர்ந்தோம்.

இருவரின் பாஷைகளுக்குள்
சப்தங்கள் கோடுகளையும்
வளையங்களையும் தீட்டின.

அதை நம்புவதற்கில்லை.


சப்தங்கள்...
ஒழிந்து போகும் வரையிலும்
காத்திருந்து மௌனத்தை
வரவேற்க காத்திருக்கிறோம்.

எங்களுக்கிடையில் எவ்விதமான
புகழ்ச்சியும் சமாதானங்களும்
ஆறுதலும் நம்பிக்கையும்
எப்போதும் தேவையற்ற ஒன்றுதான்.

இப்போதும் அப்படியே நாங்கள்
உணர்ந்தபோது முன்புபோல்
இளம் மகிழ்ச்சி தழுவியது.

எங்களுக்கு இடையில்
ஒரு நிலைக்கண்ணாடி மட்டுமே.
அதுவே பிரதிபளிக்கிறது. பின்
அதுவாய் பிரதிபலிக்கிறது.

ஒரே உருவம்
ஒரே பார்வை
ஒரே குரல்.


உஷ்ணம் எதுவும் இல்லாத
அதிகமான கசப்பு கொண்ட
கரும்பழுப்பு நிறத்தினோடு
பச்சை நிற ரப்பர் மூடி போட்ட
உயரமற்ற பாட்டில் ஒன்றும்
எங்கள் முன்னே அல்லது
எங்கள் நடுவில் இருக்கிறது.

கண்ணாடி சாட்சி சொல்ல
அறிந்திருக்கவில்லை என்பது
அதன் மடத்தன்மைதான்.

இப்போதும்...
அந்த பாட்டிலில் கொதிப்போ
ஆவேசமோ எதுவுமில்லை.

அது விஷமென்றபோதிலும்...


************************************

எழுதியவர் : ஸ்பரிசன் (2-Nov-19, 10:37 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 196

மேலே