காதலியைத் தேடி

காதலியைத் தேடி . . . .

காதலியே உனைத்தேடி
கதிரவனைத் தூதுவிட்டேன்.
காலைமுதல் தேடிவிட்டு
காணாமல் போனதடி!

பேதையுனைத் தேடிவர
மேகமதைத் தூதுவிட்டேன்.
மின்னல் வந்துசேர்ந்ததடி
உன்னையங்கு காணவில்லை!

தேவியுனைத் தேடிவர
திங்களதைத் தூவிட்டேன்.
தேடியதால் தானேஅது
தேய்ந்து பிறையானதடி!

காதலியே உனைத்தேடி
கங்கையினைத் தூதுவிட்டேன்.
காணாமல் போனதடி
கடலினிலே சேர்ந்ததடி!


ஆற்றோரம் போகையிலே
காற்றினையே தூதுவிட்டேன்.
காணாமல் போனதனால்
கடும்புயலாய் வந்ததடி!

ஆற்றினிலே ஆடிவரும்
அலையினையே தூதுவிட்டேன்.
அங்குமில்லை யென்றதனால்
அக்கரையைச் சேர்ந்ததடி!

ஓடுகின்ற தண்ணீரை
உனைத்தேடி தூதுவிட்டேன்.
ஓடியநீர் காணவில்லை
ஓசைமட்டும் வந்ததடி!

பொதிகை மலைமீதிருந்து
பூங்குயிலை தூதுவிட்டேன்.
பூங்குயிலைக் காணவில்லை.
புதுப்பாட்டு வந்ததடி!

தேசமெல்லாம் தேடிவர
தென்றலையே தூதுவிட்டேன்.
தென்படவே இல்லையென
தென்றல் வந்துசொன்னதடி!

தூதுவிட்டு தோற்றதினால்
துன்பம்வந்து சேர்ந்ததடி!
ஏதுஇனி நான்செய்வேன்
என்னுயிரைக் கொல்லுதடி!

மாது அவள் வந்துவிட்டாள்!
காதலனின் வேதனையை
கண்டவுடன் வினவுகிறாள்.

“உள்ளத்தில் இருந்திருந்தால்
உலகமெலாம் தேடுவதேன்
உண்மைசொல்! உள்ளேனா
உன்மனதில் நான்?”, என்று.

எழுதியவர் : கவி. இராசன் (21-Nov-19, 12:16 am)
பார்வை : 321

மேலே