ஒரு ஸ்பானிய எழுத்தாளன்

================================
அன்பார்ந்த ரவி.

மாயச்சதுரங்களுக்குள் நான் பதுங்கி இருக்கிறேன் என்ற உன் கடிதம் வந்தது.
நீ நகுலன் படிக்கிறாய் என்பதை அப்போது புரிந்து கொண்டேன்.

நகுலனின் சுசீலா கோட் ஸ்டாண்டில் நிச்சயமாய் இருக்க முடியாது.

இப்போது நான் மனம் பொருந்தி செய்யப்படும் தவறுகளும் குற்றங்களும் பெருகி இருக்கும் ஒரு நகரத்தின் மையத்தில் இருக்கிறேன்.

வசிக்கிறேன் என்று சொல்ல முடியாது.

நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் முகங்களை விற்றுக்கொண்டு காதலை சம்பாதிப்பவர்கள் என்று முடிவு செய்து இருக்கிறேன்.

உன் மாயச்சதுரங்கள் என்பது  உனது கால்விரல்கள் கண்ட கனவை நீ அறிந்து கொண்ட தினத்தில் இருந்து உனக்கு சம்பவிக்க ஆரம்பித்ததென்று நானாக யூகம் செய்து கொள்கிறேன்.

அது உண்மையெனில் இனி நான் சொல்வதும் புரட்டில்லை என்பதாக கொள்ள வேண்டும்.

                           ***********



மாமிச வாடை பெருகிக்கொண்டிருந்த ஒரு இரவில் நான் விழித்து கொண்டேன். நகரம் ஒப்பில்லா அமைதியுடன் எனக்காக காத்து கொண்டிருந்தது. நான் பாயை சுருட்டி வைத்து அநாதை போல் மேன்ஷனை விட்டு வெளியில் வந்தேன்.

நகரம் நீ என்னை எரிப்பாயா? உன்னால் அது முடியுமெனில் நான் உதவுகிறேன் என்று ஆசை காட்டியது. நகரத்தின் கைகளும் கால்களும் காய்ந்த விறகினை போல் மஞ்சள் நிறம் பாரித்து முதிய அரக்கனை போல் சிக்கலான மூச்சை வெளியிட்டது.

அதன் வயிற்றில் அரங்கங்கள் இருந்தன.
அதில் கலைஞர்களும் வணிகர்களும் நரம்பு தளர்ச்சியுடன் உழைத்து கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் விஞ்சும் நோக்கத்தில் பணத்தால் அதிகாரங்களை வளர்த்து கொண்டும் அளவளாவிக்கொண்டும் இருந்தனர்.

ஸ்பானிய படைப்பாளி Julio Llamazares பற்றி நீ அறிந்திருப்பாய். அவரின் மஞ்சள் மழை படித்திருக்க வேண்டிய ஆள் நீ.
அந்த நாவலை நேற்று வாங்கினேன்.
அதன் முன் அத்தியாயங்களை மறுபடி வாசிக்க விரும்பி தனிமையானேன்.

நாவல் வாசிப்பின் கணங்களில் நான் முற்றும் தொலைந்து போனேன்.

உன்னால் இன்னும் நம்ப முடியுமா?

ஒரு விலைமாதுவாக, போஸ்டர்கள் முன் மைதுனம் செய்பவனாக, நிலவை சபித்து அதன் ஒளியில் நடுங்குபவனாக மாறி இருந்தேன்.

அப்போது என் சக அறைவாசி ஒருவன் நான் காய்ச்சலில் இருந்து பிறருக்கு தொந்தரவு செய்து வருவதாக கிழட்டு வாட்ச்மேனிடம் குற்றங்களாக சொல்லி கொண்டிருந்தான்.

என்னிடமோ வார்த்தைகள் கொட்டி கொண்டே இருந்தன.

நான் மிகுந்த துன்பத்தில் தன் உணர்வற்று வெப்பத்துடன் ஸ்கலிதமாகி
காலண்டரில் இருக்கும் ஸ்வாமி படங்களை அவமானம் செய்து விட்டதாகவும் பொறுமிக்கொண்டு இருந்தான்.

இவைகளை நான் உணர்ந்தும் உணராமலும் விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தேன்.

பக்கத்து அறையில் இருக்கும் கொல்லத்தை சேர்ந்த ஒரு மெடிக்கல் ரெப்ரசண்டேட்டிவ் என்னை உற்று பார்த்து நான் பில்லி வைக்கப்பட்ட மனிதன் என்று அறிவிக்க ஆரம்பித்தான்.

நான் நகரத்தில் வேறு இடம் பார்க்க நேர்ந்தது.

                 **************

கொட்டும் மழையில் நகரத்தின் இன்னொரு மூலைப்பகுதிக்குள் ரயில் இழுத்து கொண்டு போனது. வீடு போல் இருந்த அந்த அறையில் வடக்கு மூலை எனக்கு தந்தார்கள்.

குடியிருப்பில் ஒருநாள் கனகவள்ளியை பார்த்தேன்.

நீ இப்போது தகிப்பு கொள்வாய் என்பது நன்கு புரிகிறது. சொல்கிறேன்.

                        *************

நகரம் ஒவ்வொரு இரவும் என்னை பணிக்க துவங்கியது. அது என்னை மேய்க்கவும் அடிமைப்படுத்தவும் ஆரம்பித்தது. ஒட்டகம் கூடாரத்தை பிளந்து சிரிப்பதை போல் எனக்குள் அலங்கோலத்தை வரைந்தது.

இளமை முதிர்ந்த பருவத்தில் நாம் கனகவள்ளியை பற்றி நிறைய பேசி இருக்கிறோம். அவள் ஸ்தனங்கள் நாளும் பெருகி வளர்வது குறித்த ஒரே கனவுகள் கண்டிருக்கிறோம்.

இளமை ஒரு பிசாசாய் மாற்றம் கொண்டு நம்மை விரட்டி கொண்டே இருந்தது.
இளமை ஒரு சாபத்தின் புயல் வடிவம். அது முடுக்கி விடுவது விதியின் கோரைப்பற்களை என்று நீ சொல்லி கொண்டே இருப்பாய்.

ஒருநாள் கனகவள்ளி கிணற்றில் மிதந்தாள். அவள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை.

நாம் மரத்து போய் இருந்தோம். சன்னாசியோடு கஞ்சா புகைத்தும் அவள் நினைவு நம்மிடமிருந்து போகவில்லை.

நகரத்துக்கு நான் வந்தேன். நீ அங்கிருக்கிறாய். பின், கனகவள்ளி?

                     ***************

அன்பார்ந்த ரவி,

இது இரண்டாவது கடிதம். பிரித்து படித்து கொள்.

நான் பணியில் மிகுந்த ஆர்வத்தோடும் ஊக்கத்தோடும் இருப்பதாக சக நண்பர்கள் சொல்கின்றனர்.

இது கனகவள்ளி வந்த பின்தான். இன்னும் அவளோடு நான் பேசவில்லை. அவள் யார் என்பதே தெரியாது. அவள் உருவம் கொண்ட வேறு ஒரு பெண் என்பதை அறிவுபூர்வமாக நான் நம்பியே ஆக வேண்டும்.

உண்மை அதுவல்ல என்பது இனி உனக்கு தெரியும்.

கவனமாக படிக்கவும்.

                         **************

நகரம் இப்போதும் என்னை பாடாய் படுத்தி கொண்டிருந்தது. ஒரு இரவில் மழை மஞ்சள் நிறத்தில் பெய்ய ஆரம்பித்தது. அது பருவ மாற்றம் சூழல் கோளாறு என்று நினைத்தேன்.

நகரம் மனம் நிறைய வன்மத்துடன் கண்களை குறுக்கி கொண்டு சூன்யக்காரி போல் வெறித்து பார்த்தது.
அது முணுமுணுத்த மொழியில் இனி நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூறியது.

நான் மரணத்தை பரவசத்துடன் ஆராதிக்க முடிவு செய்தேன். என் நரம்புகளில் சின்ன அதிர்வுகள் முழக்கம் செய்தபடி இருந்தன. கண் இமைகள் வெட்டி கொள்ள ஆரம்பித்தன.

மஞ்சள் மழை நாவலில் கடைசி வரிகளையேனும் படித்து விட வேண்டும் என்று ஆவல் கொண்டேன்.

நகரம் ஒரு சுருக்கு கயிறு. சரியான இடத்தில் சரியான கோணத்தில் என் கழுத்தில் அமர்ந்து கொண்டது.

ஆத்மாநாமின் நகரத்தை எரிப்போம் வா என்ற கவிதையை மந்திரம் போல் மனம் பாட துவங்கியது. உடலுக்குள் கட்டின்றி ஒரு தோட்டா வெகுவேகமாக துளைத்து குடைந்தபடி பயணித்தது.

இரவு செதில் செதிலாக பிய்ந்து நின்றது.
யாரோ என்னை வருடி விட்டது போல் ஓர் உணர்வு.

கனகவள்ளி அருகில் நின்றிருந்தாள்.

நான் அவளை வெறித்து பார்த்தேன்.

குவளை நிறைய நீர் கொடுத்தாள். அது
அத்தனையும் அவசரமாய் பருகினேன்.

அமைதியை முள் தைத்து வைத்தது போன்ற ஒரு கனமான அறையாக இருந்தது நான் இருந்த அறை.

அவள் புத்தக அலமாரிக்கு அருகில் சென்று மௌனியின் சிறுகதைகளை தன் கையில் எடுத்து கொண்டாள். சற்று புன்னகைத்து விட்டு பக்கங்கள் புரட்டி மனதுக்குள் எந்த கதையையோ வாசிக்க ஆரம்பித்தாள்.

அது அழியாச்சுடர் என்று இன்னும் நம்ப விரும்புகிறேன். புத்தகத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டாள்.

என்னை பார்த்தாள்.

உங்க பேர்....என்ன...என்றேன்.

ம்ம்ம்...என் அப்பா பேரு ரவி என்றாள்.

______________________________

எழுதியவர் : ஸ்பரிசன் (22-Nov-19, 3:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 97

மேலே