கலங்கரை விளக்கம்

வாழ்க்கைக் கடலும்
வையக் கடலும் ஒன்றுதான்!
கரையிலிருந்து அலையில்
கால் நனைக்கும்
வாழ்வு அழகுதான்!
ஆனால்!
அதை வாழ்வென்பதா?
இல்லை நிகழ்வென்பதா?
நீலக்கடலில் நீந்த வேண்டும்!
கலமேறி கடலைக் கடக்க வேண்டும்!
அதுதான் வாழ்வு!
கரையிருந்து பார்ப்பது போல்
கடல் அவ்வளவு அமைதியில்லை!
வறுமை எனும் வாடைக்காற்று!
எதிரி எனும் எதிர்க்காற்று!
உறவுகள் எனும் உவர்நீர்!
சூழ்நிலை எனும் சூறாவளிகள்!
துரோகம் எனும் துயரப்புயல்!
காலம் எனும் காரிருள்!
காரிருளிலும் கண்பட்டது
தூரத்தில் ஒரு துருவநட்சத்திரம்!
பாதையை அதன்‌வழி திருப்பினேன்!
பாதியில் மறைத்தது கார்மேகம் அதை!
திக்கற்று படகில் தனியாய் நான்!
ஊரார் உமிழி மழையாய்ப் பொழிய
ஏசல் மொழிகள் இடியாய் முழங்க
உடலும் உள்ளமும் நடுங்கியது!
தோல்வி பயமெனும் குளிர்க்காற்றால்!
ஊரின் வாயடைக்க
தீப்பந்தம் வேண்டாம்!
தீக்குச்சியாவது உயர்த்த நினைத்தேன்!
எடுத்த முயற்சிகள் அத்தனையும்
அடுத்த கணமே அணைந்து போயின!
உயிர் வருத்தி உரசினேன்
கடைசி தீக்குச்சி!
அதுவும் முடிந்தது தோல்வியில்!
உடல் குருகி உயிர் உருகி
ஒடுங்கி ஒதுங்கி வருந்தி
வாழ்க்கை அவ்வளவு தான்
என்று எண்ண
தூரத்தில் ஒரு வெளிச்சம்!
கண்சிமிட்டி என்னை அழைத்தது!
உள்ளத்தில் புது உற்சாகம்!
துடுப்புகளும் துடிப்புகளும் வேகமாயின!
கடைசியில் கரை காட்டியது!
நம்பிக்கை எனும் கலங்கரை விளக்கம்!
கசந்த நாவில் துளித்தேன்!
பாலைநிலத்தில் தேங்கிய சுனை!
கடலில் தெரியும் கலங்கரை விளக்கம்!
தொடர் துயர் பின் வரும் இன்பம்!
எல்லாம் உணர்த்திவிடுகின்றன!
வாழ்க்கை அவ்வளவு அழகு என்று!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (25-Nov-19, 10:12 am)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : kalangarai vilakam
பார்வை : 1954

மேலே