சோமாலியா

இரு வருடங்களில் இரண்டரை இலட்சம்
இளம் பிஞ்சுகள் பட்டினிச் சாவு
இரக்கமற்ற என் மனதையும்
இலேசாக தளம்ப வைக்க……

இந்நிலையை இல்லாதொழிக்கும்
இனிய எதிர்பார்ப்புடன்
இக்கவிதையை வடிக்கின்றேன் - இக் கணத்தில்
எவர் மனதையும் புண்படுத்த அல்ல….

ஏழை வீட்டு விருந்தென்பது – அவன்
கூரை விறகினில் விளைந்ததுவோ…
விருந்து மண்டப பரிமாற்ற விளைவு – அவன்
எதிர்காலப் பட்டினிச் சாவோ….

கன்னத்தில் வறுமை வரிக் கோலமிருக்க
வாசலில் புதிய கோலம் வரைவதெப்படி?
கள்ளமற்ற இவர் ஆயுள் முடிந்தாலும்
முடியாதோ இவர் பட்டினிச் சாவு…

இவர் தூவும் விதைக்கு மட்டும்
புதைத்த பிறகும் உயிரிருக்கிறது – பாவம்
இவர் வாழ்வோ…. உயிருள்ளபோதே
புதைந்துபோகின்றது….

பாவத்தின் தீர்ப்பு மரணமானால் - இவர்கள்
பிறந்ததே பாவமா? - இல்லை
இங்கே பிறந்ததுதான் பாவமா? – அது சரி
பாவம் என்றால் என்ன?

இந்நிலை கண்ணில் கண்டதால்
உண்டான சோகம் தீரவோ..
நதியே நீ கடலில் வீழ்ந்து – உன்
உயிர் மாய்க்கின்றாய்…

விதவையின் பூவைப்
புறக்கணிக்க முடியும் போது – அவள்
இதயக் கண்ணீருக்கு மட்டும்
காவல் நிற்க்க முடியவில்லையா?

உலகமயமாக்கலில் தொலைந்து போன
கைக் குழந்தை இவர்கட்கு
உலக சந்தையில் முகவரி தரும்
தர்ம சீலர் இங்கில்லையா?

பெண்களின் கன்னச் சிவப்பை
கவி வடிக்கும் உள்ளங்கள்
வறுமையில் கறுத்திருக்கும் - அவர்
உடலங்களைக் கண்டுகொள்ளாதது ஏன்?

அவள் சிரிப்பினில் - சூரியனே
ஈரங்கசிய வேண்டும் - பகலே
இடையை ஆடையாக்கி – அவளோடு
துயரம் பரிமாற வேண்டும்.

பாதையெங்கும் பாலோட
அளவற்று அமுதம் வழிந்தோட
தேவையில்லை எனுமளவில் தேனோட
பசிப்பிணி அகன்றோடிட வேண்டும்..

காணுமிடமெங்கும் கண் மயங்க
கதிர் புல்வெளி கலந்திருக்க
நானும் கவி புனைவதனால்
நல்ல முறையில் மழையிருக்க….

சோமாலியப் பெண்
செழிப்பை ஆடையாக்கி – மக்களின்
நல் வாழ்வை மாலையாக்கி – என்
கனவை நனவாக்கிட வேண்டும்.

எழுதியவர் : (22-Jan-20, 10:25 am)
சேர்த்தது : கிறிஸ்தியான்
பார்வை : 56

மேலே